NGK படத்தில் நந்த கோபால குமரனாக நடித்திருக்கும் சூர்யா, “அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புதுப் படத்திற்கு செல்வதுபோல இருந்தது. செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் சரி நுணுக்கமாக பார்த்துப் பார்த்து வேலை வாங்குவார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. பலவருடங்களுக்கு முன்பே, அதாவது 2000 ஆண்டின் தொடக்கத்திலேயே அவரிடம் சொல்லியிருந்தேன். நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்று, இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது, செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.
யுவனின் இசையைக் கேட்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. காரில் பயணம் செய்யும் போது அவரது இசையில் உருவான பாடலைக் கேட்டு விட்டு, வண்டியை நிறுத்திவிட்டு உடனடியாகப் போனில் தொடர்புகொண்டு உன் கையைக் காட்டு முத்தமிடுகிறேன் என்று கூறியிருக்கிறேன். செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி, கணவன் – மனைவி போன்று அந்நியோன்யமான கூட்டணி…
சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். இதுதவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
எஸ்.ஆர்.பிரபு காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்துக் கொடுத்தார்.
என்னுடைய பயணத்தில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவனுக்கு ஒரு கோரிக்கை, அடுத்த படம் எடுக்கும்போதும் என்னை வைத்து எடுங்கள்..” என்றார்.
’நந்த கோபால குமரன்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். சோனி மியூசிக் சஞ்ஜய் வாத்வான், மோகன்தாஸ், தயாரிப்பாளர் பிரகாஷ் ஆகியோரும் படக்குழுவினரை வாழ்த்தினர்.