- K.Vijay Anandh
சி. அரவிந்த் இயக்கியிருக்கும் குறும்படம் ஆதி – 2 , இறவாத ஆத்மாவுடனான ஒரு கலந்துரையாடல் என்கிற ரீதியில் எழுதி இயக்கப்பட்டிருந்த இந்தக்குறும்படத்தை வினோத் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய, அஸ்வத் இசையமைத்திருக்கிறார். விக்னேஷ் டி வார் எடிட்டிங் செய்திருக்கும் ஆதி -2 ,கல்லூரி மாணவர்கள் , தங்களது பேராசிரியர் உடனான உரையாடல் மூலமாக வரலாற்றைத் தேடிச் செல்லும் பயணமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
குறும்படங்களுக்கென்று இருக்கும் சுதந்திரத்தை முழுமையான அளவில் பயன்படுத்திக் கொண்டு, மிகவும் அறிவுப்பூர்வமாகவும் அதே நேரம் நமது புரதானங்களின் பெருமைகளயும் கூறுவதாக இயக்கப்பட்டிருக்கும் ஆதி – 2 பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கீதையைப் பற்றி பேசுகிறார்கள், கிருஷ்ணனைப் பற்றிப் பேசுகிறார்கள், குறிப்பாகத் தங்களது பேராசிரியர் தான், இறவாத ஆத்மா, அவர் தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அவதாரம் எடுத்து வந்திருக்கிறார் என்கிற ரீதியில் அமைக்கப்பட்ட உரையாடல்கள், நிச்சயம் இளம் படைப்பாளிகளுக்கு வேறு ஒரு தளத்தை அடையாளப்படுத்தும் என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக, ராஜ ராஜ சோழன் காலத்தில் பெரிய கோயில் கட்டப்படும் தருணங்களை அற்புதமாக விவரிக்கின்றார்கள், அதன் மூலம் நாமும் அந்த காலகட்டத்திற்குச் சென்று விடுகிறோம், அதாவது அந்த நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படாத நிலையிலும். அந்த நேரத்தில், தலைமைப் பொறியாளன் குஞ்சார மல்லனின் கீழ் பணியாற்றும் ஒரு அணித்தலைவராக அவர்களது பேராசிரியர் ஆதி வாழ்ந்திருக்கிறார்.
குஞ்சார மல்லனின் தலைமுறைகளில் ஒருவர் தான் மாமல்லனாக இருப்பாரோ அவரே மாமல்லபுரத்தையும் நிர்மானித்திருப்பாரோ என்று நமது சிந்தனை விரிகிறது.
இப்படி, பல நுறு யுகங்களாக ஒரு ஆத்மா தன் அவதார நினைவுகளுடன் பிறப்பெடுப்பது சாத்தியமா..? அப்படி இருந்தால், அப்படிப்பட்ட ஆத்மாக்களைச் சுமந்து திரியும் மனிதர்களை இனம்கண்டு, அவர்களை சர்வதேச குடிமகன் Universal Citizen என்று அடையாளப்படுத்தினால், அவர்களால், இந்த உலகின் எந்த மூலைக்கும் தடையில்லாமல் சென்று வரமுடிந்து, அவர்களால் இந்த மானிட சமூகத்திற்கு ஏதேனும் நன்மை விளைய ஏதுவாக இருக்குமா..? என்றெல்லாம் சிந்திக்க வைத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் குறும்படமாக, ஆதி – 2.
எழுதி இயக்கியிருக்கும் சி.அரவிந்திற்கு ஆதி – 2, 5 வது குறும்படம் என்பதும், தனது முதல் குறும்படமான பிரளயத்திற்காக உலக முழுவதிலும் இருந்து 25 க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கிறார் என்பதும், பார்வையாளர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் விவாதிக்கப்பட்ட ஆதி 1 இன் இரண்டாம் பாகமாக ஆதி – 2 ஐ இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறவாத ஆத்மா ஆதி கதாபாத்திரத்தில் ஹரிஹரனும் அவரது இணையாக ரித்துமிதா, மாணவர்களாக ஸ்ருதி, ஆப்ரஹாம் மற்றும் ரமேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தார்கள்.
முன்னதாக, இந்தக்குறும்படத்தின் திரையிடலில் தயாரிப்பாளர்- நடிகர் ஜெயப்பிரகாஷ், இயக்குநர் கேபிள் சங்கர், சுரேஷ், நடிகர்கள் ராகவ், செளந்தரராஜா ஆகியோர் கலந்துகொண்டு, படக்குழுவினரை வெகுவாகப்பாராட்டினார்கள்.