சமீபகாலமாக, பல திரைப்படவிழாக்களில் கஸ்தூரியைப் பார்க்கமுடிந்தது, நிக்ழ்ச்சித் தொகுப்பாளராக.
இ.பி.கோ 302 படச்சந்திப்பிலோ கஸ்தூரி தான் நாயகி. ஒரு துணிச்சலான காவல்துறை அதிகாரியாக நடித்து பிரமாதப்படுத்தியிருக்கிறார். " ஆண்ட பரம்பரைன்னு சொல்லிக்கிறவன் கூட இட ஒதுக்கீட்டுக்காகப் பொய் சொல்லி சாதி சான்றிதழ் கூட வாங்குவான், ஆனா சாதி விட்டு சாதி சம்பந்தம் வைச்சுக்கமாட்டான்.." கஸ்தூரி பேசியிருக்கும் வசனத்தின் ஒரு துளி. இன்றைய தேதியில் மாஸ் நாயகன் கூட அப்படித் தைரியமாகப் பேசிவிடுவார்களா..? என்றால், சந்தேகம் என்பது தான் விடையாக இருக்கும்.
சாதி விட்டு சாதி யில் ஏற்படும் காதல், அந்தக் காதலர்களை மட்டுமல்ல, சம்பந்த வீட்டார் மற்றும் சமுக மக்களை எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக்கிவிடுகிறது என்பதை கருவாக எடுத்துக் கொண்டு சலங்கை கட்டாத குறையாக தாண்டவம் ஆடியிருக்கிறார் இயக்குநர் சலங்கைத்துரை .
பட அனுபவத்தைப் பற்றிப் பேசிய கஸ்தூரி, " நான் 90 களின் ஆரம்பத்தில் நடிக்கவந்த போது, கேரவன் கிடையாது. படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் போது வீடு எடுத்துத் தங்கி ஒன்றாகச் சாப்பிட்டு ஒரு குடும்பமாகப் பழகுவோம்.
இ.பி.கோ 302 படப்பிடிப்பிலும் அதே அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி. போன மாதம் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி சம்பவம் போன்று 6 மாதத்திற்கு முன்பே இந்தப்படத்தில் காட்சிகளைப் படமாக்கியிருந்தோம்.
டிக் டாக் போன்ற செயலிகளால் தான் குற்றங்கள் நடைபெறுகிறது என்பது, சட்டம் என்று ஒன்று இருந்தால் தானே சட்ட மீறல் நடைபெறுகிறது, சட்டத்தையே ஒழித்துவிடுவோம் என்பது போன்றது.
நமக்குத் தெரியாதவர்கள் நடித்த வீடியோக்கள் இருக்கும் பாலியல் இணையதளங்களை மூடினால் எதிர்ப்போம். ஆனால், நமக்குத் தெரிந்தவர்கள் டிக் டாக் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பிரபலமானால் அதைத் தடை செய்யவேண்டும்.என்கிறோம். எதிலுமே நல்லதும்.இருக்கிறது கெட்டதும் இருக்கிறது...
என்னடா திடீரென்று கஸ்தூரி பகுத்தறிவு பேசுகிறாளே என்று நினைக்கவேண்டாம். மணிவண்ணன், சத்யராஜ், கமல்ஹாசன் பேசும் போது சிந்திய சில துளிகளைத் தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்..." என்றார்.
படத்தில் வர்ஷிதா - நாக சக்தி காதல் ஜோடிகளாக நடிக்க, படத்தின் இணைத்தயாரிப்பாளர் ராபின் பிரபு, வின்ஸ்குமார், வையாபுரி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
படம் விரைவில் வெளியாகிறது.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் சலஙகைத்துரை, காத்தவராயன் படம் மூலம் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுத் இந்தியா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் முத்துவிஜயன் பாடல்கள் எழுத இசையமைக்கிறார் அலெக்ஸ்பால். தண்டபாணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.