இங்கே, குறிப்பாகத் திரைப்படத்துறையைப் பொறுத்தவரை, கடமையைச் செவ்வனே செய்பவர்களுக்குத்தான் இடையூறு அதிகம், என் காதலி சீன் போடுறா இயக்குநர், ராம் சேவாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
இந்தப் படத்திற்காக ஏகாதசி, ராம்சேவா பாடல்கள் எழுத அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். செந்தில் - ராஜலட்சுமி தம்பதி மற்றும் கிரிஷ் உள்ளிட்டோர் பாடியிருக்கிறார்கள். அங்காடித்தெரு மகேஷ், புதுமுகம் ஷாலு ஜோடியாக நடித்திருக்கும் என் காதலி சீன் போடுறா படத்தின் பாடல்களை கே.பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி.சிவா, பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் சக்தி சிதம்பரம், தருண் கோபி, இளையதேவன், காளி.என் ரங்கசாமி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.
பட அனுபவத்தைக் குறித்து இயக்குநர் ராம் சேவா பேசிய போது, " எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவேண்டும். அதே நேரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் சந்தோஷத்தைத் தொலைக்க வேண்டியிருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி காதல், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் அண்ணன் தங்கை பாசத்துடன் , இந்தப்படத்தை வெறும் 23 நாளில் முடித்திருக்கிறேன். தயாரிப்பாளர் ஜோசப்.பேபி எனக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆனால், திடீரென்று உள்ளே வந்த நபரால், பெரிய மன உளைச்சலுக்கு ஆளானேன். கதை எழுதி அலைந்து நடிகர்களைக் கெஞ்சி கூத்தாடி குறைந்த சம்பளத்தில் நடிக்க வைத்து தயாரிப்பாளரைக் கண்டுபிடித்து நாங்கள் படங்கள் இயக்குகிறோம். ஆனால், எங்கிருந்தோ திடீரென்று வந்த நபரால் ஆயிரெத்தெட்டு பிரச்சினைகள். அந்த நபர் உள்ளே வந்ததிலிருந்து தயாரிப்பாளரைச் சந்திக்கவே முடியவில்லை. இன்று மேடையில் தான் சந்திக்கின்றேன்..." என்று புலம்பினார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு நம்பிக்கை அளித்துத் தேற்றும் விதமாகப் பேசிய கே.பாக்யராஜ், " என் காதலி சீன் போடுறா என்று அட்டகாசமாகத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். பாடல்களும் பாடல்காட்சிகளும் நன்றாக இருக்கிறது. டிரையலரிலேயே நகைச்சுவை நன்றாக இருக்கிறது. 23 நாளில் முழுப்படத்தையும் முடித்திருக்கின்றீர்கள்.எதற்காகவும் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை.." என்று ராம் சேவாவைத் தேற்றியதுடன், சீன் போடும் பெண்கள் மற்றும் ஆண்களைப் பற்றித் தன் அனுபவத்தில் இருந்து பேசி கலகலப்பூட்டினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோபாலா, " என்னை அடுத்த வெண்ணிற ஆடை மூர்த்தியாக்காம விடமாட்டாய்ங்க போல..." என்று நகைச்சுவையாகப் பகிர்ந்துகொண்டார்.
பாடகர் கிரிஷ் பேசிய போது, " இதுவரை ரஜினி மற்றும் மகேஷ் இருவருக்கும் இன்னும் பாடவில்லையே என்று நினைத்தேன். இதில், மகே ஷுக்குப் பாடி விட்டேன். ரஜினி, தலைவருக்குப் பாடவேண்டும்.." என்றார்.
தயாரிப்பாளர் முதல் லைட்மேன் வரை அனைவருக்கும் மறக்காமல் நன்றிகூறி அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்தார், நாயகி ஷாலு.
சின்னத்திரையாக இருந்தாலும் பெரிய திரையாக இருந்தாலும் ரசிகர்களைக் குதூகலப்படுத்த மிகவும் மெனக்கெடுபவர் என்று அறியப்படும் கோகுல், இந்தப்படத்தில் முதன்முறையாக மிடுக்கான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இவருக்குத் தங்கையாக நிஷா நடிக்கிறார். இவர்களுடன், ஆடுகளம் நரேன், தென்னவன், வையாபுரி, அம்பானி சங்கர், அஞ்சலி அம்மா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. மறைந்த ஒளிப்பதிவாளர் ப்ரியனின் சீடர் வெங்கட் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
என் காதலி சீன் போடுறா படம் விரைவில் வெளியாகவுள்ளது.