இவரது படமென்றாலே இளைஞர்களுக்குக் கொண்டாட்டம் தான். Party என்று படத்திற்கே பெயராக அமைந்தால், அது இரட்டிப்புக் கொண்டாட்டமாகத் தானே இருக்கும். இளவல் பிரேம் ஜி இசையில் மூத்தவர் வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் பார்ட்டி படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் U/A வழங்கியிருக்கிறார்கள்.
இதற்கே இவர்கள் ஒரு மெகா பார்ட்டி வைத்திருப்பார்கள் என்றால் அது மிகையாகாது. இதுகுறித்து தயாரிப்பாளர் டி சிவா கூறும்போது, “ ஒட்டுமொத்த படக்குழுவினரும் நிஜமாகவே கொண்டாட்ட மன நிலையில் தான் இருக்கின்றோம். பொதுவாகக் குழந்தைகளைப் பார்டிக்கு அழைத்துச் செல்லமாட்டோம். ஆனால், எங்களது பார்ட்டிக்கு அனைத்து தரப்பினரும் வரலாம் என்பதை உணர்ந்த தணிக்கை அதிகாரிகள் U/A கொடுத்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் Adults only அளவுக்குச் சமூக வலைத்தளங்களில் மிகைப்படுத்தப் பட்டிருந்தாலும், திரைப்படம் என்று வந்துவிட்டால் அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில் தான் வெங்கட்பிரபு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்..” என்றார்.
சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத் ராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி என்று படத்தின் பெயருக்கேற்ற மாதிரியே நட்சத்திரக் கலை விழா அளவிற்கு இருக்கப் போகும் இந்தப்படம் ஒரு புத்தாண்டு கொண்டாட்டம் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஃபிஜி தீவுகளில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.