50 வருடங்களுக்கும் மேலாகத் திரையுலகில் ஒளிப்பதிவாளராக, இயக்கு நராக, நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் சுரேஷ் சந்திர மேனன், கிடைக்கும் நேரங்களில் சமுதாயத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பவராக, ஒரு தனி நபராக இந்த சமூகத்தில் அல்லது மக்களின் அன்றாட வாழ்வில் என்ன மாதிரியான நல்ல மாற்றங்களை உருவாக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருப்பவராக விளங்குகிறார்.
துறைமுகத்தில் சரக்குகளை அனுப்பி பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கும் இரும்பு கண்டெய்னர்களை, கழிப்பறையாக மாற்றி குறிப்பாக பொது இடங்களுக்குச் சென்று வரும் பெண்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றி அரசாங்கத்தை அணுகியிருக்கிறார். அவரது, கண்டுபிடிப்பினை அரசு நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், ஒரு சில தனியார் அமைப்புகள் கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கேரளாவில் புகழ்பெற்ற படகு வீடுகளின் அமைப்பை அதன் பாரம்பரியம் கெடாமல், முற்றிலும் மாற்றி, அதில் தங்குபவர்களுக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்குமாறு செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து சென்னையில், சின்னமலை, ராஜ்பவன், சைதாபேட்டை நீதிமன்ற சாலைகளை ஒரு வழிப்பாதையாக்கி அரசிடம் கொண்டு செல்ல, அதன் முக்கியத்துவம் கருதி உடனே செயல்படுத்தியிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ள ராஜீவ்காந்தி சாலையில் பல்வேறு மாற்றங்களை யோசித்து அதனையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார். அதனைச் செயல்படுத்தினால், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, எரிபொருள் செலவும் கணிசமாகக் குறையும் என்கிறார்.
” நான் தனிமனிதன். நிறைய நேரம் கிடைக்கிறது. மக்கள் நலனுக்காக, பொறுப்புள்ள குடிமகனாக எதையாவது யோசித்து அதனை செயல்படுத்த முயல்கிறேன். அதிகார மட்டத்தின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியும். அந்தத்திட்டங்களால், எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தவிதமான ஆதாயமும் இல்லை..” என்று சொல்லும் சுரேஷ் மேனன், தற்பொழுது, இந்தியாவைப் பற்றி இந்தியக்குடிமகன்கள் மட்டுமல்ல உலகமே அறிந்துகொள்ளும் வகையில், ஏராளமான தகவல் அடங்கிய கேள்வி விளையாட்டுக்கான செயலியை அறிமுகம் செய்திருக்கிறார். My Karma எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியை இலவசமாகவும் , பணம் செலுத்தியும் விளையாடலாம் என்பதுடன் வாரம் ஒன்றிற்கு அதிப்பட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை வெல்லவும் வாய்ப்பிருக்கின்றது.
விளையாடு, பணத்தை வெல்லு, உதவு என்கிற கோட்பாட்டின் படி உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் மாலை 6, 7 மற்றும் 8 மணிகளில் விளையாடலாம். நேரடியாகக் கேள்விகள் கேட்கப்படும், அதற்கான விடையை 10 நொடிகளுக்குள் அளிக்கவேண்டும். ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்கேற்கும் இந்த விளையாட்டில் ஒவ்வொரு பங்கேற்பாளரின் பதில்களும் மிகச்சரியாகப் பதிவு செய்யப்பட்டு, அவற்றுள் யார் அதிகமாகப் பதிலளித்துள்ளார்களோ அவர்களுக்குப் பரிசும் அறிவிக்கப்படும்.
இவரது பொது நலன் சார்ந்த ஆலோசனைகளை அரசியலில் குதித்திருக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்திடம் கொண்டு செல்ல பலமுறை முயன்றும் நாளைய முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கும் அவர்கள், இவரைக் கண்டுகொள்ளவே இல்லை என்பது துரதிஷ்டம்.