
அம்மா கிரியேஷன்ஸ் T சிவாவின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழாப் படைப்பாகவும், வசந்தபாலனின் 4 வது படைப்பாகவும் தமிழ் சினிமா ரசிகர்களை 18 ஆம் நூற்றாண்டிற்கு இட்டுச் செல்லும் படைப்பாகவும் உருவாகிக் கொண்டிருக்கும் அரவான் படத்தின் பாடல் மற்றும் டிரையலர் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலக வளாகத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான அரங்கில் 5000 க்கும் மேற்பட்ட் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது.
பாடகராக இருந்து இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் கார்த்திக்கின் இசையில் உருவான அரவான் பாடல்களை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், மணிரத்னம் உட்பட திரையுலக ஜாம்பவான்கள் பெற்றுக் கொண்டனர். பாடல்களை வெளியிட்டுப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “ தமிழ் சினிமாவுக்கு இசையமைத்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. உலகம் முழுவதும் சுற்றிவந்து கொண்டிருக்கிறேன். அரவான் படத்தின் பாடல்காட்சிகள் மற்றும் டிரையலர் காட்சிகளைப் பார்த்தவுடன் மீண்டும் தமிழ்சினிமாவுக்கு இசையமைக்க வேண்டும் தொடர்ந்து நிறையத் தமிழ்ப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது” என்றார்.
யுவன் சங்கர் ராஜாவை அறிமுகம் செய்த T சிவாவும், GV பிரகாஷை அறிமுகம் செய்த வசந்தபாலனும் சேர்ந்து கார்த்திக்கை இந்தப்படத்தில் அறிமுகம் செய்தது பலராலும் வியந்து பாராட்டப்பட்டது. K பாலசந்தர் முதல் ஆதி வரை அனைவரும் கார்த்திக் இன்னொரு ஏ.ஆர்.ரஹ்மான் என்று புகழ்ந்தனர்.
விவேகா எழுதிய ஊரே ஊரே... பாடலும், நா.முத்துக்குமார் எழுதிய நிலா போகுதே... என்கிற பாடலும் திரையிடப்பட்டன. தரமான திரைப்படங்களுக்குப் பெயர் பெற்ற வசந்தபாலனின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது என்றால் மிகையாகாது.
பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் என்கிற நாவலில் தன்னைக் கவர்ந்த ஒரு தலைப்பினை எடுத்து அரவானை இயக்கியிருக்கிறார் வசந்தபாலன். ஆதி, பசுபதி, அர்ச்சனா கவி, தன்ஷிகா, சிங்கம் புலி மற்றும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கரிகாலன் ஆகியோர் நடிப்பில் கிட்டத்தட்ட 140 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உலகத்திரைப்பட ரசிகர்களையே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு இந்தப் படத்தினை தயாரித்திருக்கிறார் அம்மா கிரியேஷன்ஸ் சிவா.
இந்தப்படத்தில் நடித்திருக்கும் அத்துனை நடிகர்களுமே அரவான் படப்பிடிப்பு முடியும் வரையில் வேறு எந்தப் படங்களிலும் நடிக்கச் சென்றுவிடாமல் படப்பிடிப்பிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் எழுத்தாளர் சு.வெங்கடேஷனை அரங்கிற்கு அறிமுகம் செய்து வைத்து பலத்த கைதட்டல்களை வாங்கிக் கொடுத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர்கள் கே.பாலசந்தர், மணிரத்னம், ரா.பார்த்திபன், சேரன், நாசர், நடிகர்கள் சரத்குமார், தயாரிப்பாளர்கள், விநியொகஸ்தர்கள் அனைவரும் வசந்தபாலனின் மெனக்கெடல்களைச் சிலாகித்துப் பேசினர். உலகசினிமா அரங்கில் இன்று தமிழ் சினிமாவிற்கென்று தனி அங்கீகாரம் கிடைத்ததாகவும் அதனைப் பெற்றுத் தந்ததில் வசந்தபாலன் போன்ற இளம் இயக்குனர்களின் பங்கு மகத்தானது என்றும் பேசினர்.
இலக்கியத்தில் பெருத்த ஆர்வம் உடைய வசந்தபாலனின் படவிழா ஆகையால் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய கவிஞர் வெண்ணிலா முதல் எழுத்தாளர்கள் எஸ்.ரா, தமிழ்ச்செல்வன், இந்திரா செளந்திர ராஜன், ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் போன்ற இலக்கியவாதிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசும் போது, “அரசனைப்பற்றியும், அரண்மனைகளைப்பற்றியும் தான் வரலாறு இருக்கும். ஆனால் உண்மையில் அந்த வரலாறுகளைப் படைப்பவர்களாக மக்கள்தான் இருக்கிறார்கள். அந்த மக்களின் வரலாற்றினைச் சொல்லும் படமாக அரவான் இருக்கும்” என்று பேசினார்.
“ஏழாம் அறிவு படம் ஒவ்வொரு தமிழனையும் கர்வப்பட வைக்கும் என்றால் அரவான் கர்வப்படும் தமிழன் ஒவ்வொருவருக்கும் கிரீடமாக விளங்கும்” என்று எழுத்தாளர் இந்தரா செளந்தரராஜன் பேசியது அரவான் படக்குழுவினருக்குக் கிரீடம் சூட்டுவது போல் அமைந்திருந்து என்றால் மிகையாகது.
அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடந்த அரவான் பாடல் வெளியீட்டு விழாவினை ஜெயா டிவி விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.
-Vijay Anandh.K
