சில வருடங்களுக்கு முன் சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் தூள். அதில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் பரவை முனியம்மா பாடிய ஏய் சிங்கம் போல…. பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்று வரை யாராலும் மறக்க முடியாது. அது ஒரு 3 நிமிடப் பாடலாக இருக்கும்.
உதயா நடித்து அக்டோபர் 7 ஆம் தேதி வெளிவர இருக்கும் ரா ரா படத்திலும் அப்படி ஒரு பாடல் இருக்கிறது. இரண்டே அடிகளில் வரும் இந்தப் பாடலிலும் விறுவிறுப்பு அதிகமாகவே இருக்கும். என்ன பாடல் என்று படத்தைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி/இணை இயக்குனராக இருந்து நீண்ட அனுபவம் பெற்ற இயக்குனர் சாண்டில்யன் ரா ரா படத்தினை தனது முதலாவது படைப்பாக இயக்கியிருக்கிறார். சென்னையில் இருக்கும் ராயப்பேட்டைக்கும் ராயபுரத்திற்குமான ஒரு சுவராஸ்யமான இணைப்பை சுவைபடச் சொல்லியிருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதாபாசு இந்தப் படத்தில் உதயாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
சினிமாவை மிகவும் நேசிக்கும்,பெரிய சாதனைகள் புரிவதற்காகத் தனது முறைக்காகக் காத்திருக்கும் உதயாவின் கனவை நிறைவேற்ற தயாரிப்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் அவரது இல்லாள் கீர்த்திகா உதயா. தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் படத்தில் ரா ரா ரா ரா சென்னைக்கு ரா...முன்னேறலாம் ஜோர ஜோரா... என்கிறப் பாடலைப் பாடி தினந்தோறும் பிழைப்புக்காகச் சென்னைக்கு வந்து இறங்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்குத் தன்னம்பிக்கையும் அளித்திருக்கிறார். “தமிழ் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் கலகலப்பான ஒரு ஃபேமிலி டிராமா வாக ரா ரா இருக்கும். திருக்குறளை மையமாக வைத்து இயக்குனர் திரைக்கதை அமைத்து ரா ரா வை இயக்கியிருப்பது நிச்சயம் தமிழர்கள் அனைவருக்கும் புது விருந்தாக இருக்கும். ரா ரா விற்குப் பிறகு எனது கணவர் உதயாவிற்கும் பல நல்ல வாய்ப்புகள் வரும். தொடர்ந்து எங்களது ஜேஷன் ஸ்டுடியோஸ் சிறந்த பொழுது போக்குத் திரைப்படங்களைத் தயாரிக்கும்,” என்கிறார் கீர்த்திகா உதயா.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
என்கிற திருக்குறளுக்கு கீர்த்திகா உதயா உதாரணமாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது.
-Vijay Anandh.K