டிசம்பர் முதல்வாரத்தில் வெளியாகி பட்டையைக்கிளப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது ராஜபாட்டை. வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை போன்ற கிளாசிக் படங்களுக்கு மத்தியில் ஒரு மாஸ் நிறைந்த ஆக்ஷன், காமெடி, காதல் என்று அட்டகாசமான ஜனரஞ்சகப் படமாக ராஜபாட்டையை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ராஜபாட்டையில் ஜிம் பாய் - ஆக கட்டுமஸ்தான உடற்கட்டுடன் சினிமாவில் வில்லனாக வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கும் கதா நாயகனாக சீயான் விக்ரம். தெய்வத்திருமகளுக்காக குறைத்த உடம்பினை ஒரே மாதத்தில் ராஜபாட்டைக்காக அதிகரித்திருக்கிறார். சும்மா கட்டுமஸ்தான உடம்புடன் ராஜபாட்டையில் வரும் விக்ரமைப் பார்த்து பெண்கள் தங்கள் காதலர்களையோ-கணவன்மார்களையோ கட்டாயம் ஜிம்முக்கு அனுப்புவார்கள். ராஜபாட்டைக்குப் பிறகு தமிழகத்தில் ஜிம்கள் நிரம்பி வழியலாம். புதிதாக ஜிம்கள் உருவாகலாம். மொத்தத்தில் ”ஆரோக்கியமான” தமிழகம் உருவாகக் காரணமாக இருக்கப்போகிறது ராஜபாட்டை அணி.
விகரம், கதாநாயகி தீக்ஷா சேத், தாத்தா கே.விஸ்வ நாத் ஆகிய மூவருக்கும் இடையில் நடக்கும் உணர்வுகளின் பரிமாற்றம் தான் ராஜபாட்டை. இந்தப் படத்திற்கான கதையினை எழுதியிருப்ப்வர் வசந்தபாலன், எழில் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சீனு. அவருக்குள் பெரிய இயக்குனர் கனவொன்றும் உள்ளது. ராஜபாட்டையின் கன்னட பதிப்பினை இயக்கி அதற்கான அடித்தளம் இடவுள்ளார்.
இந்தப் படத்தில் இன்னொரு சுவராஸ்யம் வில்லன் நடிகர் பிரதீப். கஜினியில் வந்து தமிழ் ரசிகர்களைப் பயமுறுத்திய பிரதீப் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்ப்படத்தில் நடித்திருக்கிறார். மிகவிரைவாகப் படப்பிடிப்பினை நடத்தியிருக்கிறார்கள். அனலரசு வின் சில சண்டைக்காட்சிகளும் - ஷோபி மாஸ்டரின் நடன அசைவுகளில் உருவாகப்போகும் 3 பாடல்காட்சிகளும் தான் இன்னும் படம்பிடிக்க இருக்கிறது.
தூள், சாமி, ஜெமினிக்குப் பிறகு சீயான் விகரமின் ராஜபாட்டையும் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும். ஒரு சிறப்பான நடிகன், கயிற்றில் நடக்கும் சர்க்கஸ்காரர் ச்ம நிலை படுத்துவதற்காக(Balance) கையில் வைத்திருக்கும் நீண்ட கம்பின் இருமுனைகளைப்போல கிளாசிக் சினிமா ஒரு பக்கமும் மாஸ் சினிமா ஒரு பக்கமும் தந்துகொண்டே சினிமா என்கிற கயிற்றில் வெற்றிகரமாக நடந்து சாதனை புரிய வேண்டும். அந்த வகையில் தமிழ்சினிமாவினைப்பொறுத்து வரை விக்ரம் முதலிடத்தில் இருக்கிறார்.
-விஜய் ஆனந்த்.K
