“பாட்டுக்கு முகம் என்றால் அது ஜீவனுள்ள இனிமையான தமிழ் வார்த்தைகள்தாம். நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, கபிலன், பா.விஜய் போன்றோர் இரவு பகலாக சிந்தித்து தரும் வார்த்தைகளை முன்னிறுத்தி அதனை ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதையே என் தலையாயக் கடமையாக நினைக்கிறேன். அவர்களது கவிதைகளுக்குத் தாம் என் இசை”
7 ஆம் அறிவு பாடல் வெளியீட்டு விழாவில் “உங்களது இசை பெருவெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது- இளைஞர்களையும் – ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது, அதில் வரும் வார்த்தைகளும் தெளிவாகப் புரிகிறது அது எப்படி..?” என்கிற கேள்விக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அளித்த பதில் தான் மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பேசிய அவர், “கஜினிக்குப் பிறகு இயக்குனர் முருகதாஸுடன் இணையும் இரண்டாவது படம், சூர்யாவுடன் ஆறாவது படம் 7ஆம் அறிவு. கஜினியை விட 2 மடங்கு வெற்றி பெறும் அளவிற்கு படம் பண்ணுவோம் இல்லைன்னா அதற்கானத் தருணத்திற்குக் காத்திருப்போம் என்றுதான் நினைத்தேன் ஆனால் அதைவிட அதிகமாகச் சிந்தித்து அதிகப்பட்சமாக என்ன தரமுடியுமோ அதனை 7ஆம் அறிவில் தந்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். இந்தப் படத்தில் பணியாற்றியமைக்காக ஒரு இசையமைப்பாளராகச் சந்தோஷப்படுகிறேன் ஒரு தமிழன் என்கிற முறையில் பெருமைப் படுகிறேன்,” என்று பேசினார்.
"எவ்வளவு எதிர்பார்க்கிறீர்களோ அதைவிட அதிகமாகவே 7ஆம் அறிவு இருக்கும். தமிழில் பேசி, தமிழில் இயக்கி நம்ம ஆட்களுடன் வேலை செய்வதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை.காஞ்சிபுரத்திற்கும் சீனாவிற்கும் இருந்த பட்டு வர்த்தகத் தொடர்பினைப்போல இன்னும் சில தொடர்புகள் இருந்திருக்கிறது. அதனை 7 ஆம் அறிவில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். கடைசி 15 நிமிடங்களில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படம் 7ஆம் அறிவு. கராத்தேக் கலையை உலகுக்கு அளித்த போதிதர்மா என்பவரைப் பற்றிய கதை. அந்தக் கதாபாத்திரத்திற்காக நடிகர் சூர்யா தன் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். 7 ஆம் அறிவு எனக்கு ஒரு திமிரினைத் தந்திருக்கிறது. படம் பார்த்த பிறகு அந்தத் திமிர் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒட்டிக்கொள்ளும். இந்தப்படம் உலகத்தமிழர்களுக்குச் சமர்ப்பணம்” என்று 7 ஆம் அறிவின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.
“7ஆம் அறிவு படத்திற்காக அண்ணன் மிகவும் கஷ்டப்பட்டுப் பணியாற்றியிருக்கிறார். எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும் என்று கேட்டால் “காசு கொடுத்து டிக்கெட் வாங்கி திரைப்படத்தினைப் பார்க்க வரும் ரசிகனை ஏமாற்றக்கூடாது .. அவர்களுக்கு அதிகப்பட்ச பொழுதுபோக்கினைக் கொடுக்க வேண்டும்” என்று சொல்வார்... சிக்ஸ் பேக் மற்றும் தற்காப்புக் கலை பயிற்சிகளை அவர் சிரத்தை எடுத்து கற்றுக் கொண்டு வெளிப்படுத்திய விதம் மிகவும் அசாத்தியமானது. 7 ஆம் அறிவில் போதிதர்மா என்கிற கதாபாத்திரத்தினை ஏற்று நடித்திருக்கும் அண்ணன் அந்தக் கதாபாத்திரத்தினை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தினமும் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக அவர் கராத்தே பயிற்சியினை எடுத்துக் கொண்டார்” என்று கார்த்தி பேசினார்.
7 ஆம் அறிவு பாடல்கள் மற்றும் டிரையலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருமே இவ்வாறு வரிக்கு வரி தமிழ் தமிழுக்காக என்றே பேசினார்கள். 7 ஆம் அறிவு பாடல்களையும் அதன் டிரையலரையும் பார்க்கும் போது நிச்சயம் சினிமாவைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் கூட தமிழ் சினிமாவைப் பற்றிப் பெருமிதம் கொள்ளக் கூடும்.
தனுஷ் கலந்து கொண்டு 7 ஆம் அறிவு டிரையலரை வெளியிட்டார். விழாவில் 7 ஆம் அறிவு படத்தின் தயாரிப்பாளர் ரெட் ஜெயண்ட் உதய நிதி ஸ்டாலின், கதாநாயகன் சூர்யா, கதாநாயகி ஸ்ருதிஹாசன், நடிகர் கார்த்தி, விஷ்ணு இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி மற்றும் கிளவுட் நைன் மூவிஸ் துரைதயாநிதி மற்றும் நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற 7 ஆம் அறிவு பாடல் வெளியீட்டு விழாவில் சீன இசையுடன் கூடிய நடனங்கள், டிராகன்கள் மற்றும் திரையிலும் மேடையிலும் அரங்கேற்றம் செய்யப்பட்ட தற்காப்புக்கலை சாகசங்கள் அனைத்தும் சேர்ந்து சென்னை டிரேட் செண்டரா அல்லது சைனா டிரேட் செண்டரா என்கிற சந்தேகத்தினை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.
-Vijay Anandh.K