நடிகர் ஆதிக்கு தன் முதல் படமான மிருகம் படத்திலேயே சவாலான ஒரு கதாபாத்திரம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஈரம் படத்தில் தன் காதலியின் ஆவியின் துணையுடன் அவளது மரணத்தைத் துப்பு துலக்கும் காவல்துறை அதிகாரி வேடம்.
இதோ முன்னிரண்டிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட ஒரு மாஸ் ஆன மசாலாப்பட கதாநாயகன் வேடம்.
மசாலா படங்கள் அல்லாத திரைப்படங்களுக்கு திரக்கதை அமைப்பதை விட மசாலா படங்களுக்குத் திரைக்கதை அமைப்பது கடினம். மசாலா படங்களுக்கு அமைக்கும் திரைக்கதை முழுக்க முழுக்க கற்பனயில் தோற்றுவிக்கப்படுவதாகவே இருக்கும். ஒரு அறிமுகப்பாடல் இரண்டு டூயட் ஒரு சென்டிமண்ட் பாடல் குறைந்த்து நான்கு சண்டைக்காட்சிகள் கொஞ்சம் காமெடி என்று அமையும் மசாலா படங்களில் இந்த அம்சங்களைக் கோர்த்து மாலையாகத் தர அமைக்கப்படும் திரைக்கதை சிறு நூலளவே இருந்தாலும் வலுவான நூலகாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நூல் அறுந்து மாலை வீணாகி விடும்.
அய்யனார் பட்த்திற்காக வலிமையான நூலினை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் S S ராஜமித்திரன். நடிகர் ஆதியும் தான் ஒரு மாஸ் ஹீரோவென நிருபித்திருக்கிறார். ஒரு நடிகனின் தொடக்க காலத்தில் இப்படிப்பட்ட மாஸ் படங்கள் தேவைப்படுகின்றன். வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு வெள்ளம் பாய்கிற திசையெல்லாம் பயணித்து வசதியான இடத்தில் கரையொதுங்கி வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளும் காய்ந்த தென்னைமர நெத்து அல்ல கதாநாயகன் ஆதி. தனக்கென ஒரு லட்சியத்தை அமைத்துக் கொண்டு அதனை அடையும் வரை வாழ்க்கை என்கிற ஆற்றில் எதிர் நீச்சல் போட்டு பயணித்து தன் அம்மா,அப்பா,சகோதரானாலேயே அவமானப் படுத்தப்பட்டும் அந்த வலிகளைத் தாங்கிக்கொண்டும் தான் ஏற்றுக் கொண்ட லட்சியத்தினை அடையும் உதாரணக் கதாநாயகன்தான் ஆதி. இந்த மாதிரியான அனுபவங்கள் குறிப்பாக உதவி இயக்குனர்கள் வாழ்வில் அதிகமாக ஏற்படும். ராஜமித்திரனும் உதவி இயக்குனராக இருந்து வந்தவர் ஆகையால் அத்தைகைய காட்சிகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அடைந்த லட்சியத்தினை அனுபவிக்கும் வேளையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள்தான் அய்யனார் திரைப்படம். ஆறடி உயர அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக ஜெயித்து இருக்கிறார் ஆதி. ஆதியின் தம்பியாக வரும் விஷ்ணுப்பிரியனும் நன்றாக நடித்து இருக்கிறார். தன் அண்ணன் ஆதியை அவமானப்படுத்தும் போதும் ஒவ்வொரு தடவையிலும் நம் வெறுப்பினை சம்பாதித்துக் கொள்கிறார். அண்ணன் தம்பிகளாக ஒருவர் மேல் ஒருவர் வெறுப்பினைக் காட்டிக்கொள்ளும் போதும் சரி தம்பி தன்னை உணர்ந்து கொள்ளும் போது பரிமாறிக்கொள்ளும் பாசப்பிணைப்பின் போது ஆகட்டும் ஆதியும், விஷ்ணுப்பிரியனும் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை அளிக்கு இளம் நடிகர்களாக மிளிர்கிறார்கள்.
இன்றைய தேதியில் படத்தின் கதாநாயகன் கதாநாயகிக்கு இடையே ஏற்படும் ”கெமிஸ்ட்ரி” நன்றாக இருக்கிறதோ இல்லையோ கதாநாயகன் மற்றும் சந்தாணத்திற்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக அமைய வேண்டும். இந்தப்படத்தில் ஆதிக்கும் மீராநந்தனுக்கும் இடையே அமைந்திருக்கும் கெமிஸ்ட்ரியை விடக் கொஞ்சம் அதிகமாக ஆதிக்கும் சந்தாணத்திற்கும் இடையே அமைந்திருக்கிறது. இந்தப்படத்தில் இருவரும் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இல்லாததால் இருவரும் சேர்ந்து நடிக்கும் அடுத்த படம் வரை காத்திருக்கத் தான் வேண்டியிருக்கிறது அவர்களது கெமிஸ்ட்ரியினை முழுமையாகத் தெரிந்து கொள்ள.
கதாநாயகன் அடிக்கும் போது ஒரே நேரத்தில் நான்கு வில்லன்கள் பறந்து போய் விழுவது ஆதி விசயத்தில் நம்பும் படியாகத்தான் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு உடற்கட்டு மற்றும் ஆக்ரோஷம் ஆதிக்கு.
இன்றைய தேதியில் ”உயர்ந்த” மனிதர்களின் திரைமறைவு வேலைகளை கேமராவினை மறைத்து வைத்து எடுக்கப்படும் ஆடியோ விடியோ காட்சிகள் மக்கள் மத்தியில் சக்கைப்போடு போடுகின்றன். அந்த ”வெற்றி” சூத்திரத்தினை இயக்குனரும் கையிலெடுத்து இருக்கிறார். சென்னைக் கலங்கரை விளக்கம் தயாரிப்பாளர் தேனப்பனுக்கு மிகவும் பிடித்த இடம் , அந்த இடத்திலும் பாடல்காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்
அந்தக் கலங்கரை விளக்கம் போன்று ரசிகர்களுக்கு விசுவரூப ஆக்ஷன் ஆதியாக “அய்யனார்” .