ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த இயக்குனர் சேரன் தன் பையன் ஏதாவது ஒரு கம்பெனி வேலைக்கோ அல்லது அரசாங்க வேலைக்கோ போனா ல் நல்லாயிருக்கும் என்கிற அவர்களது பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கு முரண் பட்டு சினிமாவில் உதவி இயக்குனராகச் சேருகிறார். அப்படி முரண்படச் செய்தது அவருக்குள் இருந்த ஒரு சமுதாயச் சிந்தனையாளன்.
கமர்ஷியல் இயக்குனர் என்று அறியப்படும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பணியாற்றியிருந்தாலும், சேரன் தனியே இயக்குனராகும் போது பாரதி கண்ணம்மா, தவமாய் தவமிருந்து, பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு போன்ற சமுக அக்கறை கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் கிளாசிக் இயக்குனர் என்கிற பெயர் பெறுகிறார். அதிலும் அவரது குரு நாதரிடமிருந்து முரண்படுகிறார்.
சக இயக்குனரின் படம் அதுவும் புதிதாக வந்த இளம் இயக்குனர் ராச்குமாரின் சமூக சிந்தனையுடன் வெளிவந்த வெங்காயம் படத்தைப்பார்த்து விட்டு நமக்கென்ன என்று இருந்து விடாமல் மற்ற பிரபலங்களில் இருந்து முரண்பட்டு அந்தப் படத்தினை மறுபடியும் வெளியிட்டு பெரும்பாலான மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
நல்ல கதையினை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களைச் சந்தித்தும் பல்வேறு காரணங்களால் வாய்ப்புகள் எட்டாத நிலையில் தன்னிடம் வந்த அறிமுக இயக்குனர் ராஜன் மாதவ் ஐ அந்த 50 தயாரிப்பாளர்களிடமிருந்து முரண்பட்டு தாமே அந்தப் படத்தைத் தயாரித்து ராஜன் மாதவை இயக்குனராக அறிமுகம் செய்வது என்று முடிவெடுக்கிறார்.
இரண்டு கதா நாயகர்களில் ஒருவரான பிரசன்னா கதாபாத்திரத்தை மையப்படுத்தித் தான் இந்தக் கதை, படம் வெளிவந்த பிறகு தம்மை விட பிரசன்னா தான் பேசப்படுவார் என்ற நிலையிலும் மற்ற சராசரி மெகா நடிகர்களைப்போல் அல்லாமல் அவர்களிடமிருந்து முரண்பட்டு அந்தக் கதாபாத்திரத்தினை பிரசன்னாவையே செய்ய வைத்து அழகு பார்க்கிறார்.
இப்படி பல விஷயங்களில் முரண்பட்டு நிற்பதால் அவர் குறுகிய மனம் படைத்தவர்களால் தனிமைப் படுத்தப்படுகிறார். அதே சமயம், தரமான இயக்குனர் யதார்த்த நடிகர் என்கிற அடைமொழியோடு ரசிகர்கள் மனதில் தனியிடத்தை பிடிக்கிறார்.
சேரனுடன் பிரசன்னா, ஹரிப்பிரியா நடிக்க சாஜன் மாதவ் இசையமைக்க பத்மேஷ் ஒளிப்பதிவில் உருவான முரண் படத்தை செப்டம்பர் மாதத்திலேயே திரைக்குக் கொண்டு வர UTV சார்பாக அதன் தென்னிந்திய தலைவர் தனஞ்செயன் முயற்சி செய்து கொண்டுள்ளார்.
ரசிகர்கள் என்கிற முறையில் 4 சண்டை + ஒரு ஐட்டம் பாட்டு + ஒரு குத்துப்பாட்டு + மொக்கைக் காமெடி டிராக் + பஞ்ச் டயலாக்குகள் + நான் தமிழுக்கு உயிரைக் கொடுப்பேன் என்கிற ரசிகனை உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒண்ணுமில்லாமல் செய்கிற உதவாக்கரை வீர வசனங்கள் என்கிற சூத்திரத்தில் வருகிற படத்தைத்தான் நீங்கள் ரசிப்பீர்கள் என்கிற மூட நம்பிக்கையினைத் தகர்த்தெறிந்து படைப்பாளில் போர்வையில் ஒளிந்திருக்கும் வியாபாரிகளின் எண்ணத்திலிருந்து முரண்பட்டு முரண் படத்தைப் பார்த்து ரசியுங்கள்.
முரண்பாடுகள் இல்லை என்றால் வாழ்க்கை முழுமையடையாதுதானே.
விஜய் ஆனந்த்.K