பாலாவின் படைப்புக்களில் சேது – சீயான் , நந்தா – நந்தா, பிதாமகன் – சித்தன், நான் கடவுள் – அகோரி சாமியார், அவன் இவன் – வால்டர் வணங்காமுடி ஆகிய கதாபாத்திரங்களில் அவன் இவன் வால்டர் வணங்காமுடி கதாபாத்திரம்தான் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்தார்.
வால்டர் கதாபாத்திரத்திர்குத் தான் நவரச நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு இருந்ததாகவும் மேலும் காதல், சண்டை, பெண் வேஷம் தரித்தது போன்ற விஷயங்களுடன் சவாலான முயற்சியாக மாறுகண்ணுடனும் நடிக்க வாய்ப்பும் இருந்ததால் பாலாவின் கதாபாத்திரங்களிலேயே வால்டர் கதாபாத்திரம்தான் தமக்கு மிகவும் பிடித்ததென்று விஷால் தெரிவித்தார்.
அவன் இவன் படித்தில் சிறப்பாக நடித்த விஷாலைப் பற்றி பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுதியதிலும், ரசிகர்களின் பேராதரவுடம் அவன் இவன் ஓடிக்கொண்டிருப்பதிலும், தான் ஒரு நடிகன் என்கிற அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக உணர்வதாகவும் கிட்டத்தட்ட கடைசி முயற்சி என்கிற முடிவோடு அவன் இவனில் நடித்திருந்த தமக்கு அவன் இவன் ஒரு புது ஆரம்பமாக அமைந்திருக்கிறது என்றும் விஷால் மேலும் குறிப்பிட்டார்.
மாறுகண்ணுடன் நடிக்கும் போது ஒரு மனிதனால் எந்த அளவிற்கு முடியுமோ அதை விட அதிகமாகவே சிரமங்களைச் சகித்திக் கொண்டதாகவும், தான் சிரமப்படுவது தெரிந்தால் பாலா இந்தக் கதாபாத்திரத்தையே மாற்றி விடக்கூடும் என்பதாலும் தன் சிரமங்களை மறைத்துக் கொண்டு நடித்ததாகவும் கூறிய விஷால், இனிக் கோடி ரூபாய் கொடுத்தாலும் அவ்வாறு நடிக்கத் தம்மால் இயலாது என்றும் குறிப்பிட்டார்.
மற்றவர்கள் சொல்வது போல் பாலா ஒன்றும் பயங்கரமான மனிதர் கிடையாது. மாறாக அவர் அதிக நகைச்சுவையுணர்வும் அதிக அளவு படைப்புத் திறனும் கொண்ட நமக்கு வரப்பிரசாதமாக விளங்கிக் கொண்டிருக்கும் தேர்ந்த படைப்பாளி என்று குறிப்பிட்டார்.
தேசிய விருதுக்கு தாம் யாருடனும் போட்டியிடவில்லை என்றும் அப்போட்டிக்கான நுழைவுக்கு மேலும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் இன்னும் சிறந்த படைப்புகள் வரக்கூடும் என்றும் விஷால் கூறினார்.
அவன் இவன் க்குப்பிறகு பிரபாகரன் என்கிற காவல்துறை அதிகாரியாகப் பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.
