
தமிழ்சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாரை அடையாளும் காணும் நிலையில் இன்றையத் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் பதவிக்குப் பல்முனைப் போட்டிகள் இருந்தாலும் நானும் இருக்கிறேன் என்பதை மாறுபட்ட மற்றும் மாஸ் ஹீரோ கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கும் ஜீவா சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தயாரிப்பாளர்களின் சூப்பர் ஸ்டார் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் RB செளத்ரி என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று. இதுவரை 75 படங்கள் தயாரித்தும் 40 க்கும் மேற்பட்ட புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தியும் இருக்கிறார். இயக்குனர்களை மட்டுமல்லாது தனது மகன் ஜீவா நடிக்கும் தன்னுடைய 76 படைப்பான ரெளத்திரத்தில் கேமராமேன் M.ஷண்முகசுந்தரம், இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி ஆகியோரையும் அறிமுக இயக்குனர் கோகுலுடன் தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.
இந்த மூவர் கூட்டணி தங்களுக்குக் கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பினை அழகாகப் பயன்படுத்திக் கொண்டு மிரட்டலான ரெளத்திரத்தை கமர்ஷியல் சமாச்சாரங்களுடன் அழகான காதல், மற்றும் குடும்பக் கதைகளைச் சரியாக கலந்து கொடுத்திருக்கிறார்கள். கோ விற்குப் பிறகு ஜீவா மீதுள்ள எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து விட்ட நிலையில் அதனை முழுவதும் ஈடுகட்டும் படமாக ரெளத்திரம் இருக்கும் என்று அதன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்த அத்தனை பிரபலங்களும் வாழ்த்திப் பேசினார்கள். இயக்குனர் கோகுல், கேமராமேன் ஷண்முகசுந்தரம், இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி ஆகியோரைத் தயாரிப்பாளர்களின் இயக்குனர் KS ரவிக்குமார் மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். லலிதானந்த் என்கிற இளம் பாடலாசிரியரை அவரது குருவும் நண்பருமான நா.முத்துக்குமார் அறிமுகம் செய்தார். ஜீவாவும் ஸ்ரேயாவும் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற இடங்களில் உள்ள இதுவரை யாரும் சென்றிடாத இடங்களில் ஆடிப்பாடும் இரண்டு பாடல்களும், மும்பையைச் சேர்ந்த பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா ஆடிப்படும் குத்தாட்டப் பாடல் ஒன்றும் ரெளத்திரம் படத்தின் டிரையலுரும் காண்பிக்கப்பட்டன.
அமைதியான கதா நாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜீவா அவ்வளவாக பிராகாசிக்க முடியாமல் இருந்தார் அதன் பிறகு எப்பொழுது ரெளத்திரம் (கோபம்) பழக ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து இன்று வரை ஏறுமுகம்தான்... இந்தப் படத்தின் பெயரே ரெளத்திரம் ஆகவே இந்தப்படம் பெரிய வெற்றி பெற்று ஜீவா தமிழ் சினிமாவில் உயர்ந்த இடத்திற்குச் செல்வார் என்று புதுவசந்தம் தந்த இயக்குனர் விக்ரமன் வாழ்த்தினார். தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், ராசுமதுரவன், ஜன நாதன், கண்ணன், எழில், சாய்ரமணி, ராஜேஷ், நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், நாசர், ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள்.
சமீபகாலங்களில் ஆர்யா மேடைகளில் பேசும் போது மிகவும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவது குறிப்பிடத்தக்கது. இதிலும் அவர் ஸ்ரேயாவை “உண்மையாகவே” பாரட்டிப்பேச அரங்கம் கலகலத்தது.
ஜெயம் ரவி பேசும்போது அவருக்கும் ஜீவாவுக்குமான நட்பின் ஆழம் தெரிந்தது. “எங்களது நண்பனாக இருந்த ஜீவா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று இளைய தளபதிக்கே நண்பனாகிவிட்டார்... அதுக்கு மேலும் அவர் செல்ல வேண்டும், ஏனென்றால் ஜீவாவின் வளர்ச்சி எங்களது வளர்ச்சி போன்றது. நானும் ஜீவாவும் இணைந்து இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் விரைவில் நடிக்கவிருக்கிறோம்” என்று மிகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
SA சந்திரசேகர் பேசும்போது குட் ஃபிலிம்ஸ் RB செள்த்ரி, இயக்குனர்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலை என்று குறிப்பிட்டார். அத்துடன் ரெளத்திரம் கேமராமேனையும் வாயார வாழ்த்தினார்.
கதை கேட்பதில் வல்லவரான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் RB செள்த்ரி கதை சொல்வதிலும் வல்லவர் என்று இயக்குனர் லிங்குசாமி குறிப்பிட்டார்.
தமக்கு 2 வருடங்களாக அலைந்து கிடைத்த வாய்ப்பு இயக்குனர் கோகுலுக்கு ஒரே நாளில் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் அதன் திரைக்கதை எந்த அளவுக்க்கு இருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை என்று சிங்கம் புலி இயக்குனர் சாய்ரமணி பேசினார்.
படத்தின் பெயர் ரெளத்திரம், சண்டைக்காட்சிகளும் பிரமாதமாக வந்திருக்கிறது... என்ன செய்வார் ஜீவா..? சண்டைப்பயிற்சியாளர் அனலரசுவை வெகுவாகப் புகழ்ந்தார். மேலும் கேமராமேனை மாற்றிவிடுங்கள் என்று தாம் சொன்னதை நல்லவேளையாக இயக்குனர் கோகுல் கேட்கவில்லை..கேட்டிருந்தால் ஒருவேளை இவ்வளவு அழகான காட்சிகளைத் தாம் மிஸ் பண்ணியிருக்க வேண்டியிருந்திருக்கும் என்றும் ஜீவா குறிப்பிட்டார்.
நிறைவாகப் பேசிய ரெளத்திரம் இயக்குனர் கோகுல் தனக்கு வாழ்க்கை அளித்த RB செளத்ரிக்கும், தன்னுடைய உதவி இயக்குனர்களுக்கும் தன்னுடன் பணியாற்றிய தொழில் நுட்பக்கலைஞர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது, “அடியே உன் கண்கள் என்ன மேட் இன் கியூபாவா... அதுவே என் தேசம் என்றால் நான் தான் காஸ்ட்ரோவா...” என்ற பாடலை முணு முணுக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி. பெரும்பாலான தமிழக இளைஞர்கள் வானொலியிலோ தொலைக்காட்சியிலோ தங்கள் தோழிகளுக்காக “டெடிகேட்” செய்யப்போகும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்.
Read Vanthan Vendran Audio launch news at http://www.mysixer.com/?p=12096 this link