ஆல்பர்ட் தியேட்டரின் மேடையும், அரங்கும் நிறைந்த ஒரு சிறப்பான விழாவாக தம்பி வெட்டோத்தி சுந்தரத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு வித்யாசாகர் இசையமைத்து முழுக்க முழுக்க கன்னியாகுமரி மாவட்டத்திலேயே அழகுறப் படம்பிடிக்கப்பட்ட பாடல் காட்சிகளை அங்கு குழுமியிருந்த திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களும் ரசிகர்களும் வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.
இயக்குனர்கள் சேரன், சுசீந்தரன்,வெற்றிமாறன், பேரரசு, சீனு ராமசாமி, ராஜேஷ், பிரபுசாலமன், ரகுராஜ், தருண் கோபி, கபிலன், சரவண சுப்பையா ஆகியோருடன், UTV தனஞ்செயன், கலைப்புலி தாணு, கேயார், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஏ.எல்.அழகப்பன், உதயா, நகுல், நாசர் மற்றும் விவேக் கலந்து கொண்டு தம்பி வெட்டோத்தி சுந்தரத்தை வாழ்த்திப் பேசினர்.
தனக்கும் தம்பி வெட்டோத்தி சுந்ததரமாக நடித்திருக்கும் கரணுக்குமான பல வருட நட்பினை நினைவுகூர்ந்து பேசிய நடிகர் விவேக் கரணுக்கு இன்னும் நிறைய அங்கீகாரங்கள் கிடைக்கவிருக்கின்றன. சரவணன் போன்ற திறமையான நடிகர்கள் எப்பொழுதாவது தான் படம் நடிக்கிறார்கள் அவர்களை மீடியாக்கள் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கதா நாயகி அஞ்சலி பேசும் போது உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் வணிகரீதியில் வெற்றி பெறத்தேவையான அத்தனை பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்த படமாக தம்பி வெட்டோத்தி சுந்தரம் இருக்கும் என்றார்
இயக்குனர் தயாரிப்பாளர் கேயார் பேசும்போது சினிமாவால் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஊடகங்கள் சினிமாவை நசுக்காமல் அதற்கு உண்மையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும். சினிமாவால் சம்பாதித்து இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடம் பிடிப்பது பெருமையல்ல...அந்ததுறைக்கு உண்மையாக இருக்க வேண்டும், டிரையலர்களை சாமத்திலும் அதிகாலை வேளையிலும் ஒளிபரப்புவதால் என்ன பயன்..? ஆகவே நேயர்கள் அதிகம் பார்க்கும் நேரங்களில் ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய கரண் வந்திருந்த அனைத்துச் சாதனையாளர்களின் சமீபத்திய சாதனைகளை நினைவு கூர்ந்து வாழ்த்துச் சொல்லி வரவேற்றது மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.
இயக்குனர் ஆவதற்காக கோடம்பாக்கம் ரோடுகளில் நடந்து நடந்து என் கால்கள் வலிக்கும் அந்த நேரங்களில் சிறந்த இயக்குனர்களிடமிருந்து வந்த மகத்தானப் படைப்புகளைப்பார்க்கும் போது கால்வலியினை மறந்து நடப்பதையும் மறந்து இலட்சியத்தை நோக்கி ஓட வேண்டும் என்கிற உந்துதல் பிறக்கும், அதனால் தொடர்ந்து ஓடினேன் இன்று உங்கள் முன் இயக்குனராக நிற்கிறேன். பொதுவாக எல்லையோர மக்களை மத்திய மாநில அரசாங்கள் புறக்கணித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் விளைவுகளை இந்தப்படத்தில் அலசியிருக்கிறேன். தம்பி வெட்டோத்தி சுந்தரம் 4 நாட்களாவது உங்களைத் தூங்க விடாமல் செய்வான் என்று இயக்குனர் வி.சி.வடிவுடையான் பேசினார்.