தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தல் முடிந்து தலைவராக பாராதிராஜாவும், செயலாளராக அமீர், பொருளாளராக ஜனநாதன், துணைத்தலைவர்களாக சேரன், சமுத்ரக்கனி ஆகியோர் இன்று பதவியேற்றனர்.
அனுபவ இயக்குனர்கள் பிரபுசாலமன், வசந்தபாலன், சிம்புதேவன், ஸ்டான்லி, வெங்கட்பிரபு ஆகியோர்களோடு எப்போதும் இல்லாத மாற்றமாக செயற்குழு உறுப்பினர்களாக புதிய அலைகள் என்கிற பெயரில் இயக்குனராகவிருக்கும் உதவி இயக்குனர்கள் முகம்மது அஸ்லம், நாகேந்திரன், ஜெகதீசன், விஜயசங்கர், விருமாண்டி, பாலமுரளி வர்மன் மற்றும் ஐந்து கோவிலன் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவினரும் இணைந்து செயல்பட இருக்கிறார்கள்.
பதவியேற்ற கையோடு தலைமைப்பொறுப்பினைத் தாரைவார்த்துக் கொடுக்காத குறையாக சேரன் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரிடமும் அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்த தலைவர் பாரதிராஜா, அவர்கள் எடுக்கும் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான முடிவுகளுக்கும் தாம் முழு ஒத்துழைப்பு தருவதாகக் கூறியிருக்கிறார்.
அதன்படியே, பதவியேற்ற முதல் நாளே ஒரு ஆக்கப்பூர்வமான திட்டத்தோடு தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயல்பாடுகளைத் தொடங்கும் விதமாக அதன் செயலாளர் அமீர் பத்திரிக்கையாளர்களை இன்று சந்தித்தார். பாராதிராஜா தவிர மற்ற அனைத்து நிர்வாகிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஏன் உலகிலேயே முதன்முறையாக என்று கூடச் சொல்லலாம், முழுக்க முழுக்க தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் பதிவு செய்திருக்கும் உதவி இயக்குனர்களுக்காக மட்டுமே SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து 4 மாத டிபளோமா படிப்பினை வடிவமைத்து இருக்கிறார்கள். அதன் படி ஒரு வகுப்பிற்கு 40 பேர் வீதம் வருடத்திற்கு இரண்டுதடவையாக நடக்கும் இந்தப் பயிற்சியில் 80 உதவி இயக்குனர்கள் பயனடைவார்கள். ஒரு இயக்குனர் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற திரைக்கதை எழுதுவது முதல், எடிட்டிங், பின்னணி இசைப்பதிவு, அனிமேஷன் – கிராபிக்ஸ், கேமரா வகைகள், திரைப்படம் எடுக்கத் தேவையான ஏனைய தொழில் நுட்பங்கள் என்று தேவையான் அனைத்துப் பாடத்திட்டங்களுடன் மிகவும் அவசியத் தேவையான தயாரிப்பு மேற்பார்வையும் கற்றுத் தர இருக்கிறார்கள்.
ரூபாய் 8000 கட்டணமாக நிர்ணயிக்கலாம் என்று SRM பல்கலைக்கழகம் முடிவு செய்ய அமீர் தலைமையிலான செயற்குழுக் கேட்டுக் கொண்டதற்கிணங்க ரூபாய் 3000 என்கிற அளவிற்குக் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு இயக்குனர் சங்கச் செயலாளர் அமீரும் SRM பல்கலைக்கழக இயக்குனர் பாலசுப்பிரமணியனும் இன்று கையெழுத்திட்டனர். SRM பல்கலைக்கழக மீடியாப் பிரிவின் முதல்வரும் திரைப்பட இயக்குனருமான ஞானராஜசேகரன் உடனிருந்தார்.
