ஜானி டெப், ஏஞ்சலினா ஜோலி இணைந்து கலக்கும் ஆக் ஷன் திரில்லர் லவ் ஸ்டோரி
கத்தாழக் கண்ணழகி, கள்ளூறும் உதட்டழகி ஏஞ்சலினா ஜோலி .தானுண்டு தன் ஜோலியுண்டு என்று இருப்பவர்கள் கூட இவரைப் பார்த்து விட்டால் ஏஞ்சலாகக் கற்பனை செய்கிற அளவுக்கு அழகும் கவர்ச்சியும் கொண்ட நடிகை இவர்.திருமணம் குழந்தை என்று ஆன பிறகும் பலரால் காதலிக்கப்படுகிற அழகி.
இவரது எடுப்பான கவர்ச்சியும், மிடுக்கான கம்பீரமும் நல்ல- கெட்ட பாத்திரங்களில் தோன்ற நம்ப வைக்கும் வசீகரங்கள். அதனால் தான் ரசிகர்களின் இதயங்களை வென்றது போலவே ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார்.
இவர் நடிக்கும் ஹாலிவுட் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹீட்டில் சக்கைட் போடு போடுபவை.
ஜோலி நடித்து விரைவில் (டிசம்பர் 24) வெளிவர இருக்கும் படம் 'தி டூரிஸ்ட்',
ஒர் அமெரிக்கச் சுற்றுலாப் பயணி இத்தாலியைச் சுற்றிப் பார்க்க வருகிறான். வருகிறவன் மனதை ஒர் அழகி சுற்றிக் கொள்கிறாள். அவள் காதலியா..கிராதகியா இல்லை பாதகியா என்பது புரியவில்லை. தென்றலை ரசிக்கச் சென்றவன் சூறாவளியில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வான். முடிவு என்ன என்பதே கதை. இதை இயக்கியிருப்பவர். ஃப்ளோரியன் ஹென்கிள் வான் பானர்ஸ் மார்க் (Florian Henckel Von Donnersmarck) இவர் ஒரு ஜெர்மனிக்காரர். தன் 'தி லைவ்ஸ் ஆப் அதர்ஸ்' ( The lives of others) படத்துக்காக ஆஸ்கார் விருதை வென்றவர். சிறந்த ஜெர்மன் திறமைசாலி என்று பெயரெடுத்தவர்.
ஏஞ்சலினா ஜோலி.. ஒரு அழகான, படித்த, அறிவான, திறமையான அசாதாரணமான, பயங்கரமான பெண். இதுவே படத்தை தூக்கி நிறுத்தும் பாத்திரமாக இருக்கும்.
படத்தில் டூரிஸ்ட்டாக வரும் அமெரிக்கராக நடித்திருப்பவர் ஜானி டெப் (Johnny Depp) இவரும் லேசுப்பட்ட நடிகரல்ல. திரையுலகில் 25 ஆண்டுகளாக நடித்துவரும் வெள்ளி விழா நடிகர் அகாடமி விருது உள்பட பல விருதுகளை வென்றவர் என்றாலும் ஏஞ்சலினா ஜோலியுடன் இணையும் முதல்படம் இது. இவர்கள் தவிர பால் பெட்டனி, ரஃபஸ் சீவெல் போன்றோரும் நடித்துள்ளனர்.
இசை -ஜேம்ஸ் நியூட்டன் ஹாவர்டு, ஒளிப்பதிவு -ஜான் சீல்.
இயக்குநர், நாயகி தவிர இன்னொரு ஆஸ்கார் விருது வென்றவரும் படத்தில் உள்ளார்.
அவர் ஜீலியன் ஃபெல்லோஸ் -இதன் திரைக்கதை ஆசிரியாரான இவர் ஏற்கெனவே 'காஸ்போர்டு பார்க்(Gos Ford Park) திரைக்கதைக்காக ஆஸ்கார் விருது வென்றவர்.
'தி டூரிஸ்ட்' ஒரு காதல் கதைத்தான் என்றாலும் படத்தில் நுழைந்ததும் பல ஆச்சரியங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
அழகழகான இத்தாலி, வெனிஸின் அழகு காட்சிகள் கடலின் பரந்த சிலிர்ப்பான வசீகரம். மட்டுமல்ல ஆள் கடத்தல், திருட்டு, கூலிக் கொலைக்காரர்கள், கொள்ளை தாதாக்கள், சட்டவிரோத சாம்ராஜ்யங்கள் போன்ற நிழல் உலக தரிசனங்களும் படத்தில் உண்டு. எனவே இப்படம் ஒரு காதல் கதை மட்டுமல்ல பரபரப்பூட்டும் திருப்பங்களும் ஆக் ஷன் திரில்லர் படமாகவும் மாறியிருக்கிறது.
பாஸ்போட் விசா இல்லாமல் இத்தாலியை சுற்றிப் பார்த்த் வெனிஸின் அழகை அலசி ரசித்த அனுபவத்தை படம் ஏற்படுத்தும் கூடுதலாக ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த காதல் கதையைப் பார்த்த மகிழ்ச்சியும் கிடைக்கும் 'தி டூரிஸ்ட்' உலகெங்ககும் சோனி பிக்சர்ஸ் வெளியீடுகிறது.