விஜயின் “காவலன்” பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு உதவும் பொருட்டு அரிசி மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியும் வடபழனி ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் நடந்தது. விஜய் 300 ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை இலவச அரிசி வழங்கினார். “காவலன்” பட டிரெய்லரையும் வெளியிட்டார்.
காவலன் கதாநாயகன் விஜய் , “காவலன் பட டிரைய்லர் வெளியிட அழைத்ததும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. பட டிரெய்லர் விழாவுக்கு செலவிடும் தொகையை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்யலாம் என்று தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரத்திடம் கூறினேன்.
என்னுடைய வேண்டுகோளை ஏற்று, ஷக்தி சிதம்பரம் ஏழைகளுக்கு இலவச அரிசி கொடுக்க சம்மதித்தார். அதோடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவையும் நடத்துவதாக கூறியதால், விழாவுக்கு வர சம்மதித்தேன். எந்த ஒருவிழாவாக இருந்தாலும் அதை ஏழைகளுக்கு பயன்படுவதாக நடத்த வேண்டும்.
காவலன் படம் சிறப்பாக வந்துள்ளது. மனதுக்கும் நிறைவாக இருக்கிறது. காதலுக்கு மரியாதை படம் போல கடைசி 15 நிமிடங்கள் உணர்ச்சிகரமாக இருக்கும். சித்திக் மலையாளத்தில் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார். இதையும் நன்றாக எடுத்துள்ளார்” என்று பேசினார்.
விழாவில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், மைக்கேல் ராயப்பன், பிஆர்ஓ பிடி செல்வகுமார் ரசிகர் மன்ற தலைவர் ஜெயசீலன், பொதுச்செயலாளர் ஆர்.ரவிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியையொட்டி ஜேஎஸ் திருமண மண்டபத்தையொட்டியுள்ள இடங்களில் விஜய்யின் பெரிய பெரிய கட் அவுட்டுகள், சாரட் வண்டியில் விஜய் பயணிப்பது போன்ற அட்டை பொம்மை போன்றவற்றை வைத்திருந்தனர்