கலைஞர் மு.கருணாநிதி கதை வசனம் எழுதும் 75 ஆவது திரைப்படமும், 25 வருட திரை வாழ்க்கையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50 வது திரைப்படமும் மார்டின் தயாரிக்கும் முதல் பிரமாண்டமான திரைப்படமும் பா.விஜய் கதா நாயகனாக நடிக்கும் படமுமான இளைஞன் திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. வாலி தலைமையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் முன்னிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிஞர் கனிமொழி , குஷ்பு சுந்தர்,சுமன் , துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் , திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட விழாவில் தமிழக முதல்வர் இளைஞன் இசைத்தட்டினை வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் பெற்றுக் கொண்டார்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுமன் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் இளைஞன் படத்தில் கலைஞரின் வசனத்தில் பேசி நடித்தது ஒரு வரம் என்று பேசினார். குஷ்பு சுந்தர் பேசும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் பா.விஜயின் அம்மாக வரும் வள்ளியம்மை என்ற கதாபாத்திரத்தில் அதுவும் கலைஞர் வசனத்தில் நடித்ததில் தன்னுடைய முதல் படத்தில் நடித்ததை விட அதிக மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டார். தாய்க்காவியம் ஒரு மொழிபெயர்ப்பல்ல ரஷ்ய மொழியில் கார்க்கி எழுதிய கவிதையின் மூலக்கருத்தினை மட்டும் எடுத்துக் கொண்டு நமது கலச்சாரத்திற்கு ஏற்றவாறு கலைஞர் புதியதாக எழுதியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.இந்த முறை குஷ்புவின் தமிழ் மிகவும் நேர்த்தியாக இருந்தது.
கனிமொழி பேசும் போது இளைஞன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் அமர்ந்திருக்கும் ரஜினிகாந்த், வாலி போன்றோரை தமிழகத்தின் சிறந்த இளைஞர்கள் என்று குறிப்பிட்டார். இருவரும் மூன்று தலைமுறை ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்படுவதனை குறிப்பிட்டார். கலைஞரின் மூளையினை ஸ்கேன் எடுத்துப்பார்த்த மருத்துவர்கள் அவரது மூளை 40 வயது இளைஞருக்கு இருப்பது போல சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்று கூறியதைக் குறிப்பிட்டு ஆகவே கலைஞர் என்றும் இளைஞர் என்பதனை பலத்த கைதட்டல்களுக்கிடையே பதிவு செய்தார்.
அடுத்துப்பேசிய வைரமுத்து இன்றைய எழுத்தாளர் அல்லது கவிஞர்களின் எழுத்துக்களில் கலைஞரது எழுத்துக்களின் சாயல் இருப்பது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்தார். ஞாபகங்கள் படத்தில் ஏற்பட்ட சிறு தோல்வியால் துவண்டு போன பா.விஜய்க்கு பெரும் லாட்டரி அடித்தது போன்று இளைஞன் பட வாய்ப்பு வந்தது என்று குறிப்பிடும் போது அரங்கில் சிரிப்பலை. எழுத்தாளன் தோற்கக்கூடாது எனபதில் தான் உறுதியாய் இருப்பதாகக் குறிப்பிட்டார். 50 களிலும் 60களிலும் பலர் உழைப்பினை நிறுத்திக் கொள்ளும் நிலையில் வயோதிகதித்தின் பிடியில் சிக்கிக்கொள்கிறார்கள் கலைஞரின் இளமை ரகசியம் அவர் இன்னும் உழைத்துக் கொண்டு இருப்பதுதான் என்று பேசினார்.
வழக்கம் போல சிறப்பாகப் பேசிய வாலி “மயிறு இருக்கும் சீமாட்டி தலைவாரிக்கொள்கிறாள் மொட்டைத்தலைக் காரர்கள் தலையினைத் தடவிக் கொள்ள வேண்டியதுதான்” தலைமகனைக் கலைமகனாகக் கொண்ட குடும்பத்தில் அவரது வழித்தோன்றல்கள் கலையுலகத்தில் பிரவேசிப்பதில் என்ன தவறு என்று அதனைக் குறை கூறுபவர்களைக் காட்டமாகச் சாடினார். சிவாஜி,எம்.ஜி.ஆர் போன்றோர் கலைஞர் வசனம் பேசி நடித்த பராசக்தி, மந்திரிகுமாரி போன்ற ஒரே படத்தின் மூலமாகவே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தினை அடைந்ததாகவும் அதே போல் பா.விஜய் இளைஞன் என்கிற ஒரே படத்தின் மூலம் சிகரங்களைத் தொடுவார் என்றும் வாழ்த்தினார்.
சூப்பர் ஸ்டாரின் பேச்சு இந்த முறை வெகு நிதானமாக இருந்தது. வடகன்னடத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் வெங்கண்ண கெளடா அவர்கள் பெரிய ஜமீன் தாராக இருந்த போதிலும் சிறந்த கவிஞராக வாழ்ந்ததை நினைவுகூர்ந்து தனது 83 வயதிலும் மேடையில் அவர்பாடிய பாடலைக்கேட்டால் நாத்திகர்களும் ஆத்திகர்கள் ஆகிவிடும் அளவிற்கு இருக்கும் என்பதால் சிவராமன் என்கிற மூத்த பத்திரிக்கையாளர் இனிமேல் வெங்கண்ண கெளடா அவர்களை மேடையில் பாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் கூறியதை சுட்டிக்காட்டினார். அதாவது கலைஞராக இருப்பதால் தான் தாம் 80 வயதிற்கு மேல் வாழமுடிகிறது எனவும் வெறும் ஜமின் தாராக மட்டும் இருங்திருந்தால் 60 வயதிற்குள் தனது ஆயுள் முடிந்து விட்டிருக்கும் எனவும் வெங்கண்ண கெளடா கூறியிருப்பதனை சுட்டிக்காட்டி கலைஞரின் இளமைக்குக் அவர் கலையுலகிலும் ஒரு படைப்பாளியாக விளங்கிக் கொண்டிருப்பதே காரணம் என்று குறிப்பிட்டார்.
சுவாசிக்கும் காற்றுக்கும் பெய்யும் மழைக்கும் எவ்வாறு நன்றி சொல்லுவது கலைஞருக்கு நன்றி சொல்ல முனைவதும் அது போன்றதுதான் என்றும் நன்றியுரை வழங்க வார்த்தைகள் இல்லை என்றும் உணர்ச்சிகரமாகப் பேசினார்.
முத்தாய்ப்பாக பேசிய கலைஞர் சிறு வயதில் தரை டிக்கெட் எடுத்து நண்பர்களுடன் தரையில் உட்கார்ந்து திரைப்படங்களைப் பார்த்து ரசித்ததை நினைவு கூர்ந்தார். அவர் பேசும் போது அந்த வயதிற்கே சென்று தரை டிக்கெட் எடுத்துப் பார்க்கும் போது முதல் காட்சியிலேயே பார்த்து விட வேண்டும் என்றும் அடுத்த காட்சி என்றாலே முதல் காட்சியில் சிலர் துப்பிய வெத்திலை எச்சில்களுக்கு இடைய அமர நேரிடும் என்று குறிப்பிட்டார். வசனங்கள் இல்லாமல் வந்த அந்தக் காலத் திரைப்படங்கள் ஓடும் போது ஒருவர் கதாபாத்திரங்களை மிகைப்படுத்திக் கூறிக்கொண்டு இருப்பார் என்றும் அறியாத வயதில் தாம் அதனை நம்பி விடுவதாகவும் குறிப்பிட்ட கலைஞர் திடீரென்று, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுத் தொகையான 1,76,000 கோடியும் அவ்வாறு மிகைப்படுத்தப்பட்டதே என்றும் அதனை தற்சமயம் உள்ள படித்தவர்கள் நம்ப மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். திரைப்படங்களில் வசனங்கள் எழுத ஆரம்பித்தபிறகு திரும்பிப்பார் என்கிற திரைப்படத்திற்காக கதா நாயகன் சிவாஜிக்குச் சமமாக 20000 ரூபாய் ஊதியமாகப்பெற்றதனை நினைவு கூர்ந்தார். அன்று முதல் இளைஞன் வரை 75 படங்களுக்கு கதை வசனகர்த்தா என்கிற முறையில் தான் சம்பாதிக்கும் பணத்தை வரிகட்டியது போக குடும்பத்தினருக்கும் சேவை காரியங்களுக்கும் செலவிடுவதாகக் குறிப்பிட்டார். இளைஞன் கதா நாயகன் பா.விஜய்க்கும் தயாரிப்பாளர் மார்டினுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இளைஞன் படத்தின் சூப்பர் ஸ்டார் பிரமாண்டமான ரெயின்போ என்கிற கப்பலை நிர்மாணித்த சிற்பி கலை இயக்குனர் தோட்டாதரணி யை வெகுவாகப்புகழ்ந்தனர்.
தயாரிப்பாளர் மார்டின் அந்த பிரமாண்ட கப்பல் வடிவத்தின் மாதிரியினை கலைஞருக்கு நினைவுப்பரிசாக வழங்கினார். விழாவில் பங்கு கொண்ட அனைவருக்கும் கப்பல் மாதிரி அளிக்கப்பட்டது. இளைஞன் படத்தின் பிரத்யோக இணையதளத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளிட சார்லஸ் மார்டின் பெற்றுக் கொண்டார். விழாவில் இளைஞன் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா , பா.விஜய், மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன், நமிதா மற்றும் இணைத்தயாரிப்பாளர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.