ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதய நிதி ஸ்டாலினின் பிரமாண்ட படைப்பான மன் மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது. தமிழ் சினிமாவின் நிரந்தர மன்மதன் கமல்ஹாசன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்,இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடன அமைப்பாளர் ஷோபி , சங்கீதா மற்றும் உத்ய நிதி ஸ்டாலின் கலந்து கொண்ட இந்த சந்திப்பு மிகவும் கலகலப்பாக நடந்தது. முன்னதாக சிங்கப்பூரில் பிரமாண்டமான கப்பலிலும் , பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அரங்கத்திலும் நடந்த இசைத்தட்டு வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டன. தேர்ந்த கவிஞராகவும் பாடகராகவும் கமல்ஹாசன் அந்த அரங்கத்தை அதிர வைத்திருக்கிறார். அவருடன் போட்டி போட்டு த்ரிஷாவும் கவிதை பாடி அனைவரையும் மெய்மறக்கச்செய்திருக்கிறார். பாடலோ, படமோ அது ரசிகர்களுக்காகத்தானே ஆகவே அரங்கத்தில் இருந்து சில ரசிகர்களை அழைத்து இசைப்பேழையினைப் பெற்றுக் கொள்ளச் செய்திருக்கிறது மன் மதன் அம்பு அணி.
மன் மதன் அம்பு பற்றிய சுவையான தகவல்களை இயக்குனர் ரவிக்குமார், கமல்ஹாசன் தெரிவித்தனர். பிரமாண்டமான ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டும் கப்பல் நிற்கும் சில நாடுகளிலும் 83 பேர் கொண்ட குழுவுடன் பயணித்து சிறப்பாகப் படப்பிடிப்பினை முடித்து வந்திருக்கிறார்கள். எழுத்தாளர் ஞானியின் புதல்வர் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே மிகச்சிறந்த மற்றும் சமீபத்திய நவீன கேமரா துணை கொண்டு காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்.
கமலுடன் இரண்டாவது முறையாக கை கோர்த்துக்கொண்டு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் துள்ளலிசை கொடுத்திருக்கிறார். தன் இசையில் உருவான அத்துனை பாடல்களும் சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர் அதற்காக இயக்குனருக்கு நன்றி தெரிவித்தும் கொண்டார்.
இந்த பிரமாண்ட படைப்பினை சாத்தியமாக்கியது தயாரிப்பாளர் உதய நிதிதான் என்றும் பணம் தவிர படம் சிறப்பாக வரவேண்டுமென அவர் கொடுத்த முழு ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது என்று கமல்ஹாசன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
வெவ்வேறு மாநில பத்திர்க்கையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மலையாளத்திலும்,தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் உரையாடி சந்திப்பை கலகலப்பாக்கினார் உலக நாயகன்.
படப்பிடிப்பிற்கு பிந்தைய வேலைகள் முழுமூச்சாய் நடந்து கொண்டிருக்கும் மன் மதன் அம்பு இன்னும் சில நாட்களில் ரசிகர்களின் மனங்களைக் குறிவைத்து எய்யப்பட இருக்கிறது.