இன்றைய ஆட்சியாளர்கள், வறுமையின் காரணமாகத் தன் உரிமையினை விலைக்கு விற்றுவிடும் அளவிற்குத் தான் ஏழை மக்களை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார் இயக்குனர் சீமான்.
சட்டப்படிக் குற்றம் திரைப்படத்தில் ஒரு நேர்மையான வழக்குரைஞராக நடித்திருக்கும் சீமான் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இவ்வாறு பேசினார்.
பிரபாகரன் முதல் பிடரல் காஸ்ட்ரோ வரை உலகம் முழுவதும் தன் மக்களின் உரிமைக்காகப் போராடிய புரட்சியாளர்களைப் பற்றிப் பேசிய சீமான் அதில் அர்ஜெண்டினாவில் பிறந்தாலும் கியூபா மக்களுக்காகப் போராடிய சே குவாரா வினுடைய புரட்சி தன்னை மிகவும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
கத்தியின்றி ரத்தமின்றி நாமும் ஒரு புரட்சிக்குத் தயாராவோம் என்று கேட்டுக் கொண்ட சீமான், பணத்திற்காக நம்முடைய ஒரே உரிமையான வாக்கு அளிக்கும் உரிமையினை விட்டுக் கொடுக்க வேண்டம் எனவும் அதனைப் பற்றிய விழிப்புணர்வினை நம் அப்பாவி மக்களிடையேயும் ஏற்படுத்துவோம் என்றும் கேட்டுக் கொண்டார். மருதுபாண்டியர்களும் வீர மங்கை வேலு நாச்சியாரும் அவதரித்த வீர பூமியில் பிறந்த தாம் மரணத்தைக் கண்டு அஞ்சப் போவதில்லை என்றும் தம் உயிர் இருக்கும் வரை மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காகப் போராடப் போவதாகவும் தெரிவித்தார்.
ஓட்டுக்காக 500 ரூபாய் கொடுப்பவனிடம், “தலைக்கு ரூ 500 கொடுத்தாலும் தொகுதி முழுதும் 5 கோடி முதல் 10 கோடி வரை கொடுக்குறியே அப்படிச் செலவு பண்ணி எங்களுக்குச் சேவை செய்யனுமா ராசா” என்று கேளுங்கள் மேலும், “அப்படியே கொடுத்து விட்டு குலதெய்வம் மேல சத்தியம் வாங்கிட்டானே என்று பயப்படாம காசை வாங்கி வச்சிக்கிட்டு அதுல பத்து சதவீதம் துணியில முடிஞ்சு வைச்சுக்கங்க அத குலதெய்வம் சாமி கோயிலு உண்டியலுல போட்டுட்டா தெய்வக்குத்தம் ஏற்படாதுல்ல” என்று தனக்கே உரித்தான தமிழில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்தார்.
இறுதியாக, ஒரு உயிருக்காக ஒன்றரை லட்சம் அப்பாவி உயிர்களை அழித்தவர்களையும் அதற்குத் துணை போனவர்களையும் இந்தத் தேர்தலில் தோற்கடிப்போம் என்றும் கேட்டுக் கொண்டார்.