a K.Vijay Anandh review
கிட்டத்தட்ட எல்லோருக்கும் நடப்பதுதான்.
இந்த உலகில் திரும்பப்பெற முடியாதது, வார்த்தைகள். அவசரப்பட்டுப் பேசி விடும் தவறான வார்த்தைகளால் ஏற்படும் காயங்கள் காலங்களுக்கும் வலியாக மாறிவிடும், ஏன் உறவுகள் கூட உடைந்து விடும். இன்றைய விஞ்ஞான உலகில், பேசுகிற வார்த்தைகளுக்குப் பதிலாக அனுப்பிவிடும் வார்த்தைகள், வாட்ஸப் வாயிலாக. அதுவும் , போதையில் எடுக்கப்படும் வாந்திகளைக் கூட சுத்தப்படுத்திவிடலாம், வீசப்படும் வார்த்தைகளை, அதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை நம்மால் தடுத்து விட இயலாது.
அப்படித்தான், பிரபுதேவாவின் வார்த்தைகளும். அட நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு என்று நினைக்கும் போதே, எவனோ ஒருவன் தவறான கோணத்தில், பதிவேற்றம் செய்த நிக்கி கல்ராணி – லுத்புதீன் பாஷா சம்பந்தப்பட்ட வீடியோ, விவேக் பிரசன்னா மூலம் தவறாக எடுத்துச் சொல்லப்பட ஏற்படும் விளைவு தான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
முதல் பாதியில் கோலிசோடா சீதாவை வைத்து ஒரு ஆள்மாறாட்ட புரிதலுடன் கலகலப்பான காதல், இரண்டாம் பாதியில் வாட்ஸப்பை இன்னும் பார்க்காத நிலையில் நிக்கி கல்ராணியின் மொபைலைத் திருடி செய்தியை டெலிட் செய்ய முயற்சிக்கும் கலாட்டா, இன்னும் நிக்கி கல்ராணி அந்த செய்தியைப் பார்க்கவில்லை என்று தெரிகிற வரை பிரபுதேவாவீன் பரிதவிப்பு என்று மூன்று எபிசோடுகளாக கதையை நகர்த்தியிருந்தாலே ஒரு நல்ல பொழுதுபோக்காக அமைந்திருக்கும். நடு நடுவே அம்ரீஷின் இசையில் துள்ளலான பாடல்கள் வேறு.
அந்த அடா சர்மா இடைச்செருகலில் தான் படம் கொஞ்சம் சுற்றிவிடுகிறது.
மற்றபடி, இன்று பாலிவுட்டே இவரை நம்பித்தான் என்கிற அலவிற்கு புகழின் உச்சியில் இருக்கும் பிரபுதேவாவை வைத்து இன்னும் கொஞ்சம் அழுத்தமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
இதுபோன்ற காமெடி கலாட்டாக்களுக்கு முன்பு ரம்பா, இன்று நிக்கி கல்ராணி, அசத்துகிறார்.
அம்ரீஷின் இசையும் அதற்கு பிரபுதேவாவின் நளினமான நடனங்களும் அசத்தல் ரகம்.
பிரபுதேவா மடியில் அப்பா டி சிவா, அப்பா மடியில் அம்மா செந்தி என்று வசீகரமான காட்சி அமைப்புகள். இதில், காது கேளாத செந்திக்காகக் கத்திக் கத்திப் பேசும் சிவாவின் உடல்மொழியும் அருமை.
பிரபு, The Ever Green வசீகரம், கச்சிதமாகப் பொருந்தி நடித்துப்போகிறார்.
திருப்பதியில் சண்டைக்காட்சிக்கான Lead அமைத்து, கும்பகோணத்தில் சண்டைக்காட்சியின் பெரும்பகுதியைப் படமாக்கிவிட்டு, சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் அதனை முடிப்பது என்பது , போன தலைமுறை இயக்குநர்களுக்கான டிரேட்மார்க் முத்திரை, செவ்வனே பதித்திருக்கிறார் சக்தி சிதம்பரம்.
சார்லி சாப்ளின் 2, கொஞ்சம் சுற்றிவளைத்தாலும் பொழுதுபோக்கிற்குப் பஞ்சமில்லாத படம் தான்.