a K.Vijay Anandh review
அன்றாடம் செய்தித்தாள்களைப் படிக்கும்போது, செயின் பறிப்பு முதல் பிக்பாக்கெட், கொலை என்று ஏகப்பட்ட குற்றச் செயல்கள் அதில், பெரும்பாலான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் வயதைப் பார்த்தால் நிச்சயம் ஒரு நிமிடம் இதயம் நின்றுதான் இயங்கும். அந்த அளவிற்கு, சிறார் குற்றவாளிகள் அதிக எண்ணிக்கையில் வளர்ந்துவிட்டார்கள்.
வறுமை, பெற்றோர்களின் உதாசீனம், புறத்தில் சந்திக்கும் அவமானங்கள் என்பதையும் தாண்டி, அவர்கள் மீது காட்டப்படும் அளவுக்கு அதிகமான அக்கறை கூட அவர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தி குற்றவாளிகளாக்கி விடுகிறது. அப்படி, சகோதர பாசத்தைக் கொட்டி வளர்க்கப்படும் விஜய் ஆண்டனியின் தம்பி உள்ளிட்ட சிறார் குற்றவாளிகளைப் பற்றியும், அவர்கள் எப்படி உருவாகிறார்கள், அவர்களுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள், சேதாரம் இல்லாமல் அவர்களை மீட்பது சாத்தியமா என்பதைச் சமூகப் பொறுப்புணர்வோடு அலசியிருக்கிறார்கள்.
சரளமாக, ஏற்ற இறக்கங்களுடன் வசனம் பேசி அதற்கேற்ற உடல்மொழிகள் என்று இதில் நடிப்பு பிடிச்சவனாக விஜய் ஆண்டனி அடுத்த பரிணாமம் எடுத்திருக்கிறார்.
நீ உன்னை மாற்றிக்கொண்டால் உலகம் மாறும், என்கிற தாரக மந்திரத்துடன் நேர்மையான, மக்களுக்கு நட்பான காவல்துறை அதிகாரி முருகவேல் ஆக வரும் விஜய் ஆண்டனி, முதலில் தனது ஸ்டேஷனில் பணிபுரியும் காவலர்களை மாற்றுகிறார்.
சிறார் குற்றவாளி ஆகி தன் கையால் செத்துப்போன தம்பியின் வடிவில் தான் மற்ற சிறார் குற்றவாளிகளையும் அணுகி, ரெளிடியிசம்லாம் வெத்து, போலீஸ் தான் கெத்து என்பதைப் புரியவைக்கிறார்.
குற்றச்செயல்களைத் தடுத்து மட்டுமல்ல, சாக்கடை அடைப்பைச் சரிசெய்தும் மக்களுக்குச் சேவையாற்றலாம் என்று பாடமே எடுக்கிறார், Practical ஆக செய்தும் காட்டிவிடுகிறார்.
உதவி காவல் ஆய்வாளராக வரும் நிவேதா பெத்துராஜ், வடசென்னை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு tuff கொடுக்காத குறைதான். ஒரு இயல்பான சென்னைப் பெண்ணாக அசத்தியிருக்கிறார். விஜய் ஆண்டனிக்குக் கொடுக்கும், மருத்துவ முத்தம், அட்டகாச ரகம், தியேட்டர் அதிர்கிறது.
முதல் திருநங்கை காவலராக வரும் திருநங்கை சிந்துஜா, மிடுக்கில் நிவேதா பெத்துராஜை முந்திவிடுகிறார். இன்னும் நாலு சீன் வைத்திருந்தால், அவர் தான் படத்தின் நாயகி என்று ரசிகர்கள் நினைத்துவிடக்கூடும். அவ்வளவு ஒரு கூர்மையான பார்வை, நேர்த்தியான நடிப்பில் ஜொலிக்கிறார்.
மீசை பத்மா, ஏதோ ஒரு நிஜ கட்டப்பஞ்சாயத்து அரசியல்வாதியை நினைவுபடுத்துகிறார். குற்றச்செயல்களில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக, 18 வயதுக்குக் கீழே இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து, கொலைகள் கொள்ளைகள் பண்ணுகிறேன் என்று அவர் வாக்குமூலம் கொடுக்கும் போது, பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் வயிறு கலஙகித்தான் போகும்.
சென்னையில், விஜய் ஆண்டனியின் வேட்டையை ஆரம்பித்து வைக்கும் குருசாமி கதாபாத்திரத்தில் வரும் செந்தில் குமரன், தனது பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
முருகன் கோயிலுக்கு மாலைபோட்டுக் கொண்டு, ஒரு விழா நாளில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் ஒரு சில வரம்புகளை மீறியிருக்கிறார்கள். தாங்கள் செய்தது என்னவென்று தெரியாமலே செய்திருகிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனாலும், அந்த இடத்தில் ஒலிரும் அல்லது பக்தர்களால் அதிரும் வகையில் பாடப்படும் நக நக.. என்கிற பாடல் அந்தச் சண்டைக்காட்சியின் குறைகளை மறைத்து , நிறைவான காட்சி ஆக்கிவிடுகிறது.
பொருந்தாத இடங்களில் பேசப்படும் அற்புதமான வசனங்கள், திரும்பத் திரும்ப பேசப்படும் முக்கியமான வசனங்கள், இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றும் திரைக்கதை ஆகியவை திமிரு புடிச்சவனுக்கே சவால் விடத்தான் செய்கின்றன.
அப்படி ஒரு சில குறைகளை மீறி, இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான ஒரு சமூகப் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் இயக்குநர் கணேசா உள்ளிட்ட திமிரு பிடிச்சவன் குழுவினருக்கு உரிய அங்கீகாரத்தை ரசிகர்கள் கொடுப்பார்கள்.