a K.Vijay Anandh review
அடங்கொப்பன் தாமிரபரணில தலைமுழுக… என்கிற மாதிரியான வசனத்தை சில படங்களில் ஆனந்த்ராஜ் பேசுவதை கேட்டிருக்கலாம். அதைப்போல, இந்தப்படத்தில் ஒரு கதாபாத்திரம் உன் வீட்டுல தங்கம் வளர… என்று அடிக்கடி பேசுவார். மிகவும் ரசிக்க முடிகிறது. என்ன ஒரு நேர்மறையான வசனம். இதனை அடிக்கடி அவர் உச்சரிக்கும் போது நம்ம வீடுகளில் தங்கம் வளர்வது போன்ற ஒரு உணர்வு.
படத்தின் கதைக்கு வருவோம். ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் இல்லாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படம் போல., ஆனால், படத்தின் சைக்கோ லவ் வகை கதை இந்தக்காலகட்டத்திற்கும் ஒத்துப்போகும்.
அழகான மனைவி அமைந்ததே குடும்பம் சீரழியக்காரணம் என்று ஆழமாக நம்பும் பண்ணையாரின் மகனாக ரிஷி, யாருமே சீண்டாத அவலட்சணமான பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்கிற அப்பாவின் வாக்கை காப்பாற்ற பாடுபடுகிறார். முகத்தில், தீப்புண்ணுடன் காணப்படும் பெண்ணை பார்த்து காதல்வயப்படுகிறார். ஆனால், அப்பெண்ணின் உறவினர் மருத்துவர் மூலம் அப்பெண்ணிற்கு சர்ஜரி மூலம் பழைய அழகு திரும்பி விடுகிறது. அது ரிஷியை கோபமூட்டுகிறது. எப்படியும் பழையபடி அவள் முகத்தை சிதைத்துவிட்டுதான், அவளைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சைக்கோ தனமாக முயல, கிளைமாக்ஸில் என்ன நடக்கிறது என்பது தான் பியூட்டி படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
ஒரு அமெச்சூரான படம் ஆக்கம் தான், நிச்சயமாக அட இதெல்லாம் ஒரு படமா என்று தான் இன்றைய திரை ஆர்வலர்கள் நினைக்ககூடும். ஆனால், இப்படியான ஒரு படத்திலும் சிறப்பான காட்சியமைப்புகள் கவனிக்க வைக்கின்றன. அந்த வகையில், முதலில் சொன்ன உங்க வீட்டுல தங்கம் விளைய… என்று அடிக்கடி சொல்லும் கதாபாத்திரம். அடுத்தது, பண்ணையாரின் நெருங்கிய தோழனாக ஒரு செருப்பு தைக்கும் கதாபாத்திரம். ஊருக்கு ஊரு வைப்பாட்டிகள் வைக்கும் பண்ணையார்கள் மத்தியில் ஒரு அவலட்சணமான பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவள் கூட அன்பாக குடித்தனம் நடத்தும் பண்ணையார்.
பண்ணையாரின் மகனாக , வங்கி மேலாளராக வரும் ரிஷி எந்தவிதமான நிர்பந்தங்கள், மது, மாது என்று மயங்காமல் நேர்மையாக கஷ்டப்படுபவர்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடன் வழங்குகிறார். தான் செய்வதாக தெரியாமல், பலரை திருத்துகிறார். தனது அலுவலகத்தில் தனக்கு கீழ் வேலை பார்க்கும் பியூன் சிங்கமுத்துவை அவரது ஓய்வுகாலத்திற்கு பிறகு தன்னுடனேயே தங்க அனுமதிக்கிறார்.
அவரது சைக்கோ தனத்தை புரிந்துகொண்டு அதைவைத்து அவர்களது காதலை கெடுக்க முயலாமல் அவருக்கு மருத்துவம் பார்த்து குணப்படுத்த முயலும் சிவா என்கிற மருத்துவர் கதாபாத்திரம். என்று பல விஷயங்கள் நன்றாக இருக்கின்றன.
இன்று தொலைக்காட்சி தொடரில் மிரட்டிக்கொண்டிருக்கும் ரிஷியுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் நாயகி கரினா ஷா. குறிப்பாக இறுதிக்காட்சியில், ரிஷியை தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் நடிப்பில்.
வெ.இறையன்பு , தமிழ் முருகனின் பாடல்கள் இலக்கியன் இசையில் அடிக்கடி வந்தாலும், இனிமையாக இருக்கின்றன.
ஆனது ஆகிப்போச்சு என்று இந்தப்படத்தை அப்படியே ஓரங்கட்டிவிட்டு இதே கதையை இன்றைய தலைமுறைக்கு பிடித்தமாதிரி படம் ஆக்க செய்து வெளியிட்டிருந்தால், பியூட்டி ஒரு சூப்பர் ஹிட் படமாக ஆகியிருக்கலாம். ஒரு நேர்மையான கதையை, நேர்மறையாக சொன்ன விதத்தில், எழுதி இயக்கியிருக்கும் கோ.ஆனந்த் சிவாவை பாராட்டலாம்.