a K.Vijay Anandh review
அப்பொழுதுதான் தொப்புள்கொடி அறுக்கப்பட்டு கருப்பையின் நீரும் இரத்தமும் பூசி அவதாரம் எடுத்த ஆண்குழந்தை, அதை கையிலே ஏந்திக்கொண்டு, சீக்கிரம் வளர்ந்து வந்து எம்முன்னால நில்லு, கல்யாணம் கட்டிக்கலாம் என்று சொல்லும் மல்லிகா – வரலட்சுமி யின் கண்களின் காலகாலத்தில் கல்யாணம் ஆகி கன்னிகழியாமல் இருக்கும் விரக்தியுடன் காமமும் கொப்பளிக்கிறது. அதே காட்சியில், தொப்புள்கொடி அறுத்து ஒரு ஆண்மகவுவை இப்பூமிக்கு வரவழைத்த அந்த கத்தியை ஒரு ஏமாற்றுத்தடன் பார்க்கிறார் வள்ளியம்மாள் – ஈஸ்வரி ராவ். முதல் காட்சியிலேயே, கிளைமாக்ஸ் காட்சி தவிர முழுப்படத்தின் கதையை சொல்லிவிடுகிறார்யா இயக்குநர்! மிகச்சிறந்த ஆரம்பக்காட்சி!
வறுமையின் காரணமாக சொந்த நிலத்தின் மீது கடன் வாங்கிவிட்டு அதே சொந்த நிலத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்பசாமி – சார்லி , அத்துவானக்காட்டில் தேடி வருபவர்களுக்கு பிரசவம் பார்க்கும் வள்ளியம்மாள் – ஈஸ்வரி ராவ், அவர்களின் ஒரே மகள் மல்லிகா – வரலட்சுமி இவர்களின் வீட்டிற்கு வழிப்போக்கனாக வரும் அர்ஜுனன் – சந்தோஷ் பிரதாப் இவர்களை மையமாக கொண்டு 24 மணி நேரத்திற்குள் நடக்கும் அற்புதமான கதைதான் கொன்றால் பாவம்.
தமிழகம் நீங்கலாக, அனைத்து படைப்பாளிகளும் நமது இதிகாசங்களின் மீதும் அதில் வரும் கதா பாத்திரங்களின் மீதும் பெரிய நம்பிக்கை வைத்து அதிலிருந்து ஒரு சிறிய வரியை எடுத்து அதற்கு அதியற்புதமான திரைக்கதை அமைத்து ரசிகர்கள் கொண்டாடும் படங்களாக கொடுக்கிறார்கள், இந்தப்படத்தின் இயக்குநர் தயாள் பத்மனாபனும் அதைச்செவ்வனே செய்திருக்கிறார்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிற ஒற்றை வசனம் தான் படத்தின் மையக்கரு. ஏன் எனக்கு ஆசைப்பட உரிமையில்லையா என்கிற கேள்வி மூளைக்குள் ஆழமாக பதிந்துவிட்டால், அப்புறம் என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்ததைத் தவிர வேறு எந்த சிந்தனைகளையும் மூளையால் உற்பத்தி செய்யமுடியாது.
வயதும் வறுமையும் ஒருங்கே ஏறிக்கொண்டே போகும் போது, அந்த மல்லிகா என்ன செய்வாள். அப்பா – அம்மாவாக இருந்தாலும், இன்னும், ரெண்டு கர்லாகட்டையை சுற்றிவிட்டு தெம்பேற்றிக்கொண்டு தங்கள் காமத்தை தீர்த்துக்கொள்ளும் தம்பதியராய் பார்க்கையில் – அவளுக்குள் காமத்தீ கொழுந்துவிட்டு எரியத்தானே செய்யும். ஒருவேளை, அவள் அங்கே வளர்த்த பிள்ளையாக இருந்திருந்தால்,, வள்ளியம்மாளை போட்டுத்தள்ளிவிட்டு, நீ என்னைக்கட்டிக்கடா என்று கருப்பசாமி முன் நின்றிருப்பாள். எப்படிம்மா என்று கேட்டால், டேய் நீ என்ன பெத்த அப்பனா..? வளர்த்த அப்பன் தானடா..? ஊர் உலகத்துல நடக்காததையா நான் கேட்டுப்புட்டேன் என்று தடாலடியாக கதவை சாத்தியிருப்பாள். அப்படி, அந்த மல்லிகா கதாபாத்திரத்திற்கே உரிய ஏக்கத்தை கண்களின் வாயிலாக கொட்டுகிறார் வரலட்சுமி. அவரால், தான் அன்றைய தினத்தோடு அவர்களின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறிப்போகிறது. அந்த வகையில், வரலட்சுமி, நடிப்பு ராட்சசியாக, தமிழ் சினிமாதான் இவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லையோ எனும் அளவிற்கு இந்தப்படத்தில் கோலோச்சி விடுகிறார்.
வழிப்போக்கன், அர்ஜுனனாக வரும் சந்தோஷ் பிரதாப், சிறந்த கதைகள் என்றாலே இவரைப்புடிங்கப்பா எனும் அளவிற்கு தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திர நடிகர்களுள் இவருக்கு சிறப்பான இடமுண்டு. அவர் அணிந்துகொண்டு வரும் ஷூக்களையும் நடிக்க வைத்திருக்கிறார். இவரது கதாபாத்திரத்தை விபரமாக சொல்லிவிட்டால் படத்தின் சுவையை முன்பே சொன்னதாகிவிடும். படம் பார்த்து அனுபவியுங்கள்.
கருப்பசாமி – சார்லி, சமகாலத்தில் நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான குணச்சித்தர நடிகர். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு 100% உயிர் கொடுப்பவர். அது, 1990 களில் வருஷம் 16 கார்த்திக்குடன் நடித்த போதும் சரி, 2023 இல் இப்பொழுது இன்றைய தலைமுறை நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கும் போதும் சரி.
ஈஸ்வரி ராவ், ஒரு அம்மாவாக மகள் பக்கம் நிற்பதா..? அப்பாவியின் பக்கம் நிற்பதா..? என்று பரிதவிக்கும் போது, அவரது கையாலாகத நிலையை நினைத்து உடையும் காட்சிகளில் நம்மை உருக வைத்துவிடுகிறார்.
சென்றாயன், கண்பார்வையற்ற கண்ணப்பனாக – இவர் இது வரை ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே இது தான் பெஸ்ட் எனும் அளவிற்கு, இன்னும் சொல்லப்போனால் இதற்கு மேல் இவர் நடிப்பதற்கு எதுவுமில்லை எனுமளவிற்கு ஒரு அட்டகாசமான கதாபாத்திரத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார். அவரும் – சந்தோஷ் பிரதாப்பும் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் அற்புதம், மிகவும் இயல்பான வார்த்தைகளால் கொட்டப்படும் இதிகாசங்கள் எனும் அளவிற்கு அற்புதம்.
இவர்கள் தவிர டி எஸ் ஆர் ஸ்ரீனிவாசன், இயக்கு நர் நடிகர் சுப்ரமணிய சிவா, யாசர், கவிதாபாரதி, தங்கத்துரை, இம்ரன், கல்யாணிமகாதேவி, மீசை ராஜேந்திரன், மனோபாலா என்று ஒவ்வொருவரும் கச்சிதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தொழில் நுட்பரீதியாக , ஜான் மகேந்திரனுடன் இணைந்து தயாள் பத்மனாபன் எழுதியிருக்கும் வசனங்கள் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தைகளும் அட்டகாசம். ” தலைவர் எங்களுக்காகத்தான மறுபடியும் (சாராய) கடையை திறந்திருக்கிறாரு..” என்று மதுவிலக்கை விலக்கி தமிழர்களை போதைக்கு அடிமையாக்கும் வாசலைத்திறந்துவிட்ட அன்றைய ஆட்சியாளனுக்கு மரியாதையும் செய்திருக்கிறார்கள். கபிலன், தயாள் பத்மானபன் ஆகியோர் எழுதிய பாடல்களுடன் பட்டினத்தாரின் வரிகளையும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் பயன்படுத்தி கொன்றால் பாவத்திற்கு சிறப்பான பாடல்களையும் அதைவிட சிறப்பான பின்னணி இசையையும் கொடுத்திருக்கிறார்.
ஆர் செழியனின் ஒளிப்பதிவு அருமை. 1981 காலகட்ட இயற்கை அழகை, மற்றும் வாழ்வியலை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.
இன்னொரு விஷயம் இந்தப்படம் மூலம் நான் தனிப்பட்ட முறையில் புரிந்துகொண்டது. யாராவது குறிப்பாக ஜோசியரோ குறிசொல்றவரோ நல்ல வாக்காக நாலு வார்த்தை சொன்னால் அது நடக்கிறதோ இல்லையோ, பகுத்தறிவோ மூட நம்பிக்கையோ ஆனால், சொன்னவருக்கு ஒரு புன்னைகையையாவது கொடுத்துவிட்டு கடந்துபோவோம். அதேநேரம், நாம் பேசும் போது, வார்த்தைகளை மிகவும் கவனமாக பேசுவோம், ஏனேன்றால் நம் பெரியவர்கள் சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கும். உதாரணமாக சிறு வயதில் நாம் கத்தியை எடுத்து விளையாட்டாக இன்னொருவரை நோக்கி காண்பித்து கொன்றுவேன் என்று சொல்லும்.போது பெரியவர்கள் நம்.மண்டையில் தட்டி கையில் வைத்திருக்கும் கத்தியை பிடுங்கி தரையில் ரெண்டு கொத்து கொத்துவார்கள். ஏனென்றால், நாம் சொன்னது எந்தக்காலத்திலும் நிஜமாக நடந்துவிடக்கூடாது என்று பயந்து. அது நம்பிக்கையா..? பயமா ? மூட நம்பிக்கையா..? அதையெல்லாம் தாண்டி, பேசும் போது விளையாட்டுக்கு கூட எதிர்மறையாக பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தானே. அது நல்லது தானே! அப்படி ஒரு அபசகுணமான வார்த்தையை அம்மாவே உச்சரித்தால்..?
கொன்றால் பாவம், இப்படத்தை பார்த்து கொண்டாடாவிட்டால் அது பாவம், கொடும்பாவம்!
இயக்குநர் தயாள் பத்மனாபன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.