a K.Vijay Anandh review
என்னதான் மாண்டேஜ் காட்சிகளாக டூயட் பாடல்களை காட்சிப்படுத்தினாலும், கட் பண்ணினால் இன்னொரு லொகேஷனுக்கு சென்று ஆடிப்பாடுவது போல் காட்சிப்படுத்தப்படும் பாடல்காட்சிகளுக்கு கொஞ்சம் கூடுதல் சுவராஸ்யம் தான் என்பதை மறுக்க இயலாது. ஈஷான் – ப்ரனாலினி கோகரே சம்மந்தப்பட்ட டூயட் பாடல்கள் அப்படி சுவராஸ்யத்தை கொடுக்கின்றன. வழக்கம்போல ஹீரோ அறிமுகமாக ஒரு விளையாட்டில் வெற்றி அதனைத்தொடர்ந்து நண்பர்களுடன் ஒரு கும்மாளமான லாங் டிரைவ் பாடல் என்பதும் திரைப்படங்களை பொறுத்தவரை வணிக ரீதியிலான வெற்றி சூத்திரம், அந்த வகையில், தேசிய கபடி அணிக்கு தேர்வாகும் ஜீவா,- ஈஷான், தனது காதலி நேத்ரா – ப்ரனாலினி மற்றும் நண்பர்கள் சத்யன், கல்கி ராஜா உள்ளிட்டவர்களுடன் மாஸாக அறிமுகமாகிறார்.
ஹீரோவை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே கதையை அறிமுகப்படுத்தி விடுகிறார்கள். காதல் என்கிற போர்வையில் ஆண்கள் விரித்த வலையில் விழுந்து பின்பு அவன் கைகாட்டுபவர்களுடனெல்லாம் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் பாலியல் தொழிலாளிகளாக ஆக்கப்படும் அப்பாவி பெண்கள்.
ஹீரோயினின் கல்லூரி விடுதி தோழியும் அக்கும்பலிடம் மாட்டிக்கொள்ள, அதனைத் தொடர்ந்து அவருக்கு என்ன ஆகிறது,..? காப்பாற்றப்படுகிறாரா..? பலியாகிறாரா..? அந்த வில்லன்கள் என்ன ஆகிறார்கள்..? என்பதே விறுவிறுப்பான திரைக்கதை.
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் மிடில் கிளாஸ் நாயகன், காதலிக்காக களமிறங்கி எதிரிகளை வேட்டையாடுகிறார். விஷால் படங்கள் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களுக்கான ஆக்ஷன் படங்களின் அதே திரைக்கதை தான் என்றாலும். இந்தப்படத்தில் ஒரு வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். பாதிக்கப்பட்டவர்களை கிளைமாக்ஸில் வரச்சொல்லி ஹீரோ , வில்லனை அடிப்பதை வேடிக்கை பார்க்க வைக்காமல், பாதிக்கப்பட்டவர்களை இடைவேளைக்கு முன்பிருந்தே களத்தில் இருக்கி, அவர்களை மோட்டிவேட் செய்யும் கருவியாக ஹீரோவை பயணப்பட வைத்திருப்பது சிறப்பான திரைக்கதை உக்தி, அதுவே யதார்த்தமானதும் கூட.
“ உங்களை நீங்கதான் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்… யாரும் வானத்துலருந்து குதிச்சு வரமாட்டாங்க…” என்று அவர்களை ஊக்கப்படுத்துவதுடன் “ எவனாச்சும் தப்பா வீடியோ எடுத்து அதைவைச்சு மிரட்டினான்னா போடா மயிருன்னு போய்க்கிட்டே இருக்கனும்..” என்று தைரியமும் கொடுக்கிறார் நாயகன் ஈஷான். எல்லோர் கையிலும் கேமரா மொபைலும் சமூகவலைத்தளங்களும் பெருகிவிட்ட இன்றைய தேதியில் இப்படிப்பட்ட அறிவுரைக்கு சக்தி அதிகம். ஒரே ஒரு வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறான் என்பதற்காக பயந்து ஒட்டுமொத்த வாழ்க்கையையே பாழாக்கும் முடிவை எடுப்பதற்கு பதில், துணிந்து போடா மயிரு என்று எதிர்த்து நின்றால், நிச்சயம் குற்றவாளிகளை பயமுறுத்திவிடலாம், வாழ்க்கையை பாதுகாத்துவிடலாம்.
அப்படி ஈஷான் சொல்லும் அறிவுரையை ஏற்று, அடுத்த காட்சியிலேயே நடக்கும் பிரஸ் மீட்டிலேயே அதை சொல்லி கெத்தாக வீறு நடைபோடும் பாதிக்கப்பட்ட பெண்களை பார்க்கும் போது, நிஜத்தில் ஒவ்வொரு பெண்களுக்கும் தைரியம் தொற்றிக்கொள்ளும் என்பதை மறுக்க இயலாது.
ஈஷான், இந்த கலர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கலர். மாஸ் ஹீரோ ஆவதற்குண்டான அத்தனை அம்சங்களுடனும் அறிமுகமாகியிருக்கிறார். தற்காப்புக்கலை பயிற்சி பெற்றிருக்கிறார் என்பதால், ஆக்ஷன் காட்சிகளில் இன்னொரு விஜயகாந்தை பார்ப்பது போல கால்களால் ஆக்ஷன் நர்த்தனம் ஆடியிருக்கிறார்.
ப்ரனாலினி, கஜினி அசினை போல அட்டகாசமான கதாபாத்திரத்தை ஏற்று நிறைவாக நடித்தும் இருக்கிறார்.
டேனியல் பாலாஜி, இவர் வில்லன் என்றால் – இவரை எதிர்த்து நிற்கும் கதாநாயகன் நிச்சயம் ஒரு மாஸான இடத்திற்கு சென்று விடுவார் – அதானே உலக வழக்கம் என்கிற ரேஞ்சுக்கு மிரட்டியிருக்கிறார்.
மொள்ளமாரித்தனம் பண்றவன் எப்படியும் ஒரு ஆளுங்கட்சி அமைச்சரோட வாரிசாகவே இருக்கிறான் என்பதை தமிழ் சினிமாவில் தொடர்ந்து காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அந்தளவுக்கு அது வழக்கத்திற்கு வந்திருப்பது சமூகத்திற்கு சாபக்கேடு என்பதாகவே இருக்கமுடியும்.
படத்தை பார்த்துவிட்டு டி ஆர் பாராட்டினால், அரியவன், இவன் அருமையானவன், இவன் அற்புதமானவன், இவன் அட்டகாசமானவன், இவன் அதிரடியானவன், இவன் ஆர்ப்பரிப்பவன் என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போயிருப்பார் mysixer.com என்ன சொல்கிறதென்றால் அரியவன், இவன் அவசியமானன்.