a K.Vijay Anandh review
கிடத்தட்ட 150 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், சரிபாதியாக வைத்துக்கொண்டாலும் 75 கோடி பெண்கள் கொண்ட நாட்டில் வருடத்திற்கு 36 ஆயிரம் பெண்கள் , தினமும் 100 பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்றால் எண்ணிக்கையில் அது மிக மிக குறைவானதாக இருக்கலாம்.
ஏன்..? எதற்கு..? கடத்தப்படுகிறார்கள்… அவர்கள் என்ன ஆகிறார்கள்..? என்பதை நினைத்து பார்த்தால், ஒட்டுமொத்தமாக இந்த பிரபஞ்சத்தையே தராசின் இன்னொரு தட்டில் வைத்தாலும் ஈடாகாத துயரம் என்றால் அது மிகையல்ல.
சொந்த சகோதரியை பாலியல் பலாத்காரத்திற்கு முயன்றவனை குத்திக்கொள்ளும் ஆண்கள் கூட இன்னொரு பெண் என்றால், அவளை தங்களது காமப்பசிக்கு இரையாக்கவே பார்க்கிறார்கள் என்கிற யதார்த்த உளவியல் உண்மையை அடிப்படையாக வைத்து இன் காரை இயக்கியிருக்கிறார் ஹரிஷ் வர்தன்.
அப்படி மூன்று அயோக்கியர்களால் கடத்தப்படுகிறார் ரித்திகா சிங், இரண்டு மணி நேரம் அந்த காருக்குள் அவர் படும் மரண அவஸ்தை, படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் அசைத்து பார்த்துவிடும். கிட்டத்தட்ட, கையாலாகாத நிலையில் எதுவுமே செய்ய இயலாத நிலையில் அந்த காரை ஓட்டிக்கொண்டிருக்கும் டிரைவரின் மன நிலை ஒவ்வொருவருக்கும் ஒட்டிக்கொள்ளும்.
காரில் கடத்திக்கொண்டு ஒரு பெண்ணை, மிகவும் அருவருக்கத்தக்க வகையில் துன்புறுத்திக்கொண்டே வருகிறார்கள் இரண்டு மணி நேரமாக என்றாலும், இந்தக்காட்சிகள் ஒவ்வொரு பெண்களுக்கும் எச்சரிக்கை மணியாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன.
சில பெண்கள், ஒருவனை நம்பி தானாக விரும்பியும் இப்படி பயணங்களுக்கு ஒத்துக்கொண்டு மாட்டிக்கொள்கிறார்கள், அவர்களுக்குமான விழிப்புணர்வாக இப்படம் அமையும்.
அந்த காமப்பசிகொண்ட வில்லன்களை அம்மன் கோயிலில் சாமிகும்பிடுவது போல அறிமுகப்படுத்தியிருப்பதையும், பிரசாதத்தை காரில் கொண்டுவந்து , அப்பாவியான ஒரு பெண்ணிற்கு பாலியல் சீண்டல் கொடுத்துக்கொண்டே சாப்பிடுவதாக காட்சிப்படுத்தியிருப்பதையும் தவிர்த்திருக்கலாம், அல்லது அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தங்களது ஆட்களாகவே சித்தரித்திருத்து பெருமை தேடிக்கொண்டிருக்கலாம் தயாரிப்பாளர்கள் அஞ்சும் மற்றும் சாஜித் குரைசி, இணை தயாரிப்பாளர் கூட அவர்கள் ஆள் தான்.
இந்து கோயிலிருந்து படம் ஆரம்பிப்பது, பாலியல் சில்மிஷங்களின் ஊடே இந்துக்கடவுளைப் பற்றி பேசுவது ஆகியவற்றை தவிர்த்து பார்த்தால் இன் கார் மிகவும் அற்புதமான விழிப்புணர்வு படமே!