a K.Vijay Anandh review
ரசிகர்களை மகிழ்விக்க எவ்வளவு மெனக்க்டவேண்டுமோ அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் ஷாருக் கான். ஆசிய சூப்பர் ஸ்டாரான ஜாக்கி சானை பிரதிபலிக்கும் ஆக்ஷன் மற்றும் மெல்லிய நகைச்சுவைகள் என்று ஒன்மேன் ஆர்மியாக பதானில் ஜொலித்திருக்கிறார்.
வழக்கமான கதை தான், ஒரு நேர்மையான அண்டர்கவர் இராணுவ வீரர், ஒரு பாதை மாறிய இராணுவ வீரர் இருவருக்குமிடையிலான போர் என்பதாக பதான் பயணிக்கிறது.
இந்த வயதிலும் கதாபாத்திரக்கேற்ப கட்டுமஸ்தான உடற்கட்டுடன் ஷாருக் கான், ஜான் ஆப்ரஹாம்.மற்றும் வில்லன்களுடன் போடும் சண்டைக்காட்சிகளை ரசிக்கமுடிகிறது. துபாயில் இந்திய விஞ்ஞானிகளை கடத்தும் அந்த நீண்ட சண்டைக்காட்சியின் நீளத்தை குறைத்திருக்கலாம் இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையோடு எடுத்திருக்கலாம் என்பதை தவிர வேறு பெரிய சலிப்புகள் இல்லை.
பாகிஸ்தானின் முன்னாள் ஐ எஸ் ஐ தீபிகா படுகோனுடன் இந்திய ரா அதிகாரி ஷாருக் கானுக்கு ஒரு இது என்பதும் அவருடன் சேர்ந்து அவர் இந்தியாவை காப்பாற்றுகிறார் என்பதும் சர்ச்சைகளை நிச்சயம் கிளப்பினாலும், இன்று பாகிஸ்தானே இந்தியாவுடன் இணையலாம் என்கிற நிலையில் அதை லேசாக எடுத்துக்கொள்ளலாம். ஆக்ஷனிலும் அதைவிட அதிகமாக கவர்ச்சியிலும் தீபிகா படுகோன் ஹாலிவுட் நாயகிகளை அசால்டாக ஓரஙகட்டிவிடுகிறார்.
ஜான் ஆப்ரஹாம், வழக்கம்போல ஸ்டைல் மற்றும் ஆக்ஷனில் தூள்கிளப்புகிறார்.
ஒரு சிறப்புத்தோற்றத்தில் வரும் டைகர் சல்மான் கானை ரசிக்க முடிகிறது. எல்லா ஆபரேஷன்களும் முடிந்து எண்ட் கார்டு போடும் போது இவரும் ஷாருக்கானும் பேசிக்கொள்வது முழுப்படத்திற்கும் நிகரான ஒரு எண்டெர்டெயின்மெண்ட்.
அந்த இறுதிக்காட்சியில் வரும் பாடல் மற்றும் நடனம், அடடா ஷாருக்கிடம் இருக்கும் அந்த நளினம் அட்டகாசம்.
மனித நேயத்திற்காக ஐ எஸ் ஐயில் சேர்ந்தியா...எங்க ரா வை விட ஐ எஸ் ஐ யிடம் நிறைய பணம்.இருக்கிறது போல... என்கிற வசனங்களை வைக்கவும் அதை ஷாருக் கானே பேசியிருப்பதற்கும் பெரிய துணிச்சல் வேண்டும்.
ஹோலோகிராம் தொழில் நுட்பத்தை ஆப்கனில் ஒரு கிராமத்தில் பயன்படுத்தி வில்லன் குழுவிற்குள் குழப்பத்தை உண்டுபன்னுவது நல்ல யுக்தி.
குறிப்பாக கிளைமாக்ஸில் அந்த பனிமலை , உறைந்த ஆறு ஆகிய இடங்களில நடக்கும் சண்டைக்காட்சி ஒரு விஷுவல் டிரீட்.
நிச்சயமாக பதான் தேசத்தை பற்றிய பெருமிதம் கொள்ள செய்யும் ஆக்ஷன் மசாலா.