a K.Vijay Anandh review
சென்னை மெளண்ட் ரோட்டை காந்திசாலையாக்கி தாராபூர் டவர் அருகே உள்ள Your Bank ஸ்பென்சர் சிக்னலில் ஒரு மேம்பாலம் என்று கதைக்களத்தை அமைத்த விதத்திலேயே இவர்களின் மெனக்கெடல் தெரிகிறது.
பேங்கில் 500 கோடியை கொள்ளையடிக்க வரும் கும்பல் 5000 கோடி கொள்ளையடிக்க அல்ரெடி உள்ளே காத்திருக்கும் அஜித், 25000 கோடி கொள்ளையடிக்க திட்டமிடும் பேங்க் தலைமையதிகாரி என்று மூன்று கொள்ளைக்கூட்டத்தின் நடுவே பொதுமக்களும் காவல்துறை அதிகாரிகளும் படும் பாடு என்று துணிவு ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.
அஜித், இதில் சும்மா ...ளாடியிருக்கிறார்... நம்ம கிஷோர் உச்சரிப்பது போன்று சொல்வதானால்.ஒரு பக்கம் விஜய் உயிரைக் கொடுத்து ஆட, அம்மையப்பனை சுற்றினாலே உலகத்தை சுற்றியதாக அர்த்தம் என்று அந்த விநாயகர் மாம்பழத்தை கைப்பற்றியது போல, நாலஞசு மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப்ஸை மட்டுமே போட்டு பேர் வாங்கி விடுகிறார். ஏன் மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப்ஸ் என்பது படம் பார்க்கும் போது புரியும்.
மஞ்சு வாரியார், அஜித்துடன் ஒரு வாரியராகவே வலம் வந்திருக்கிறார்.
அந்த 25 ஆயிரம் கோடிகளை கொள்ளையடிப்பது ஏன் என்பதற்காக காரணம் மிகவும் வழக்கம்போல இருந்தாலும் ஒரு சராசரி மனிதனுக்கு வங்கி நடவடிக்கைகளை பற்றிய புரிதல் மிக மிக அவசியம் என்பதை புரியவைக்கும் விதமாக அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
தற்போதை ஹாட் ஆஃப் தமிழக நிலவரமான கவர்னர் ரவி - முதல்வர் ஸ்டாலினுக்கு இடையிலான டக் ஆஃப் வாருக்கு தீனி போடும் விதமாக சமுத்திரக்கனி, " இது தமிழ்நாடு உங்க பாஷாலாம் பலிக்காது ரவீந்தர்..* என்று கமெண்டோ ஆபீசரை பார்த்து பேச வைத்திருக்கிறர இயக்குநர் ஹெச் வினோத். அப்புறம் அந்த ரவீந்தர், சமுத்திரக்கனியை கூப்பில் உட்காரவைத்துவிடுகிறார் என்பது வேறு விஷயம்.
பகவதியையும் பட்டிமன்ற சூப்பர் ஸ்டாரையும் வைத்து ஒரு செம்ம காமெடி டிராக்கை நுழைத்திருக்கிறார்கள், நன்றாக வேலை செய்திருக்கிறது.
இந்திய இராணுவ ஹெலிகாப்டரில் இருந்து சுட்டும் அஜித்தும் மஞ்சு வாரியரும் தப்பிக்கிறார்கள் என்பதை சினிமாவுக்காக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பங்கு சந்தை முதலீடுகள் தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது எனினும் தவறான மனிதர்களின் குறுக்கு புத்தியால்.மக்கள் பணம் நஷ்டமடைகிறது.
வங்கியில் மினிமம் பேலன்ஸ் இருக்குனு அசால்ட்டாக இருந்துவிடாதிர்கள், SMS Alert என்று மூன்று மாததிற்கு ஒரு முறை பிடித்தம் செய்யப்படும் 17 ரூபாயும் , ATM card க்கு ஆண்டொன்றுக்கு பிடித்தம் செய்யப்படும் 170 ரூபாயும் அடுத்த வருட தொடக்கத்தில் உங்கள் மினிமம் பேலன்ஸை பதம் பார்த்துவிடும்.
அதை கவனிக்காமல் அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு சிறிய தொகையை அக்கவுண்டில் போட்டால் அதை வங்கி எடுத்துக்கொள்ளும். அப்பொழுது தான் அனைத்தும் உரைக்கும்.
ஆகவே, வங்கி பரிவர்த்தனைகளில் விழிப்போடு இருங்கள் என்பதை அட்டகாசமான ஆக்ஷன் மசாலா கலந்து துணிவில் சொல்லியிருக்கிறார்கள்.
பொங்கல் ரேக்ளா ரேசில் முந்தும் படமாக துணிவு.