a K.Vijay Anandh review
இப்படி ஒரு படத்தை, ஆன்மீக அரசியல் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படத்தை முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதியும் ஜெ.ஜெயல்லிதாவும் அரசியலில் சரவபலம் பொருந்தியவர்களாக வலம் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே எடுத்து வெளியிட்டிருக்கிறார் என்றால், இந்த நடிகரை பார்த்து பிரமிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
இன்று, அவர் சொல்லி தமிழக இளம் வாக்காளர்கள் வரை காட்டுத்தீயாய் பற்றி எரிந்துகொண்டிருக்கும் அந்த ஒரு வார்த்தையான ஆன்மீக அரசியல் என்பது தான் படத்தின் பிரதான புள்ளியாக இருந்திருக்கிறது.. அதாவது ஆன்மீகம் மூலம், ஆன்மீகத்தால், ஆன்மீக குருவால் உபதேசிக்கும் மந்திரம் மூலம் தமிழகத்தில் நல்ல ஒரு அரசியல் மாற்றத்திற்கு வித்திட அன்றே முயன்றிருக்கிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
யாருவேணாலும் வந்து உட்காரும் அளவிற்கு முதலமைச்சர் பதவி அவ்வளவு மலிவாகிப்போச்சா என்கிற ஒரு வசனம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுப்பதம். படம் முழுவதும் இப்படி பவர்ஃபுல்லான வசனங்கள், பக்கத்தில் கவுண்டமணி வேறு, கேட்கவும் வேண்டுமோ!
தவிர, அரசியலுக்கு வருவதற்கான மிகப்பெரிய தகுதியே தியாகம் தான். இன்றைய அரசியல்வாதிகளும் தியாகம் செய்யத்தான் செய்கிறார்கள், ஆமாம், அவர்களின் குடும்ப நலன்களுக்காக அவர்களின் வாரிசுகளும் உறவினர்களும் சுகபோகமாக வாழ்வதற்காக தங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களின் நலனை ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்த நொடியே தியாகம் செய்துவிடுகிறார்கள்.
சரி படம் முழுவதும் பீடி, சாராயம் கையுமா வருகிறாரே, கடவுள் நம்பிக்கை.கூட இல்லையே இவருக்கு எப்படி கடவுள் தேடிப்போய் - யானை ஆசிர்வதிப்பது - மந்திரங்களை உபதேசிக்கவேண்டும்...?
அங்கே தான் கர்மா வேலை செய்கிறது. தன் இளமை முழுவதும் தேவதாசிகளை தேடிப்போவதையே லட்சியமாக கொண்ட அருணகிரியை தான் முருகன் ஆட்கொள்கிறான். திருவண்ணாமலையில் அவருக்கு காட்சி கொடுக்கிறான்.
இன்றைக்கும் தமிழக அரசியலை பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை இல்லாத குறிப்பாக இந்துக்கடவுள்களின் மீது மட்டும் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி அதிகாரம் என்று பல சுகங்களை அனுபவிக்கிறார்களே! அதுவும் கர்மா. புண்ணியங்களை தாங்களே செய்திருக்கலாம் அல்லது முன்னோர்கள் செய்திருக்கலாம்.
ராஜா சின்ன ரோஜாவில் வரும் ஒரு பாடல் வரியை புரிந்துகொண்டால் போதும். நன்மை ஒன்றை செய்தீர்கள் நன்மை விளைந்தது... தீயவற்றை செய்தீர்கள் தீமை விளைந்தது... நேற்று செய்த புண்ணியம் இன்று பலன் தரும் என்பதும் உண்மை. இன்று செய்யும் பாவம் நாளை படுகுழியில் தள்ளிவிடும் என்பதும் உண்மை. இந்த இயற்கையின் நியதிக்கு கடவுளையோ கர்மாவையோ நம்பவேண்டுமென்பதில்லை.
வாழ்நாள் முழுவதும் தீயவனாகவே இருந்துவிட்டு, ஏதோ ஒரு நொடியில் ஒருவன் அவனை அறியாமல் செய்யும் நல்ல விஷயம் கூட அதன் பலாபலனை பொறுத்து உச்சத்திற்கு கொண்டு சென்றுவிடும்.
தொடர்ந்து சிறந்த பக்தி படங்கள் வந்துகொண்டிருந்த நிலை மாறியிருந்த காலகட்டத்தில் தனது 100 வது படமாக ராகவேந்திரா படத்தை கொடுக்கிறார் ரஜினிகாந்த். அதன் பிறகு தமிழ் சினிமாவில் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமாண்டம் என்கிற அளவில் வந்த சாமி படங்களை தவிர்த்து - ஒரு ஆத்மார்த்தமான ஆன்மீக படம் வரவில்லை என்றே சொல்லமுடியும்.
ராகவேந்திரர் படத்தை மறுவெளியீடு செய்யவேண்டும் என்கிற கருத்துக்கள் கூட சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகின்றன. ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒருவன் முழுமையாக அறிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. ராகவேந்திரா படம் மூலமாக அவர் ஏற்படுத்திய ஆன்மீக புரட்சியின் வீச்சு அமைதியானதாக இருந்தாலும் அளவிடமுடியாதது.
பாபா, ஏன் இப்பொழுது மறுபடியும் வெளியாகியிருக்கிறது..?
2018இல், 96 வயதில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைகிறார். ஆனால், 2016 இல் நடந்த தேர்தல் வரை அவரே முதல்வர் வேட்பாளராக அவரது 94 வது வயதில் முன்னிறுத்தப்பட்டார். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால், அவரது தலைமையில் தான் திமுக அரசு அமைந்திருக்கும்.
அப்படிப்பட்ட நிலையில், 2016 மு.கருணாநிதியை விட 20 வயது குறைவான 73 வயதான ரஜினிகாந்திற்கு, இன்னும் கதா நாயகனாகவே கோலோச்சிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு, கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் சக்திவாய்ந்த நடிகராக கருதப்படும் அவருக்கு முன் இன்னும் வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதிற்கில்லை.
நீட் ஒழிக்கும் மந்திரம் இன்றைய ஆட்சியாளர்களிடம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால், தமிழகத்தில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்திற்கான மந்திரம் சூப்பர் ஸ்டாரிடம் இருக்கிறது, அது சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறது என்பது தான் இன்றைய தலைமுறைக்கு மறுபடியும் வெளியாகியிருக்கும் பாபா நினைவுபடுத்தும் செய்தி!