a K.Vijay Anandh review
கருணாஸ், காளி ஆகியோருடன் அமர்ந்து விஷ்ணு விஷால் சரக்கடிக்கின்ற காட்சிகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கட்டா குஸ்தியை நவீன கால திருவிளையாடல் என்று சொல்லலாம். அந்தளவிற்கு, நடிகர் திலகம் நடித்த அன்றைய திருவிளையாடல் படத்தில் வரும் ஒரு வசனம் " சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை... ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம் என்பதை உணர்த்த நாம் புரிந்த திருவிளையாடல்களுள் இதுவும் ஒன்று...." என்கிற எபிக் வசனம் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி நடித்த கட்டா குஸ்தி பார்த்து முடியும் போது நினைவுக்கு வருகிறது. திருவிளையாடல் படத்தை பார்க்காத தலைமுறை, கேட்டு அல்லது பார்த்து தெரிந்துகொள்ளவும்.
மீட்டிங் டேட்டிங் பிரேக்கிங் என்று தாம்பத்ய வாழ்க்கையை கூட பாஸ்ட் புட் கலாச்சாரமாக கற்றுக்கொண்டிருக்கும் இந்த தலைமுறைக்கு நம் அழகான கலாச்சாரத்தை குடும்ப பிணைப்பை நினைவு படுத்தியிருக்கிறார் இயக்குநர் செல்ல அய்யாவு, அவருக்கு நன்றி.
பொன்னியின் செல்வனில் சோழ தேசத்து ஒற்றராக படகோட்டி பூங்குழலியாக ரசிகர்கள் மனதில் நங்கூரம் இட்ட ஐஸ்வர்யா லட்சுமி, இந்தப்படத்தில் பாலக்காட்டு தமிழ்ப்பெண் அதுவும் மல்யுத்த வீராங்கனை கீர்த்தியாக இன்னும் கெட்டியான இடத்தை பிடித்திருக்கிறார். நிச்சயமாக, தியேட்டருக்கு வரும் பல இளம் பெண்களுக்கு இவரது கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்றால் அது மிகையல்ல. கிராப் தலையுடன் நாயகிகளுக்கு உண்டான ஒப்பனை மெனக்கெடல்களின்றி துணிச்சலாக இக்கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது பாராட்டத்தக்கது. ஒட்டவைத்த சவுரி முடி போனது கூட தெரியாமல், தொட்டுத்தாலி கட்டிய கணவனுக்காக வில்லன்களை புரட்டும் காட்சி சமத்திய தமிழ்சினிமாக்களில் காணமுடியாத மாஸிலும் மாஸ் ஆன காட்சி.
விஷ்ணு விஷால், பொள்ளாச்சி கபடி காங்கேயம் காளையாக முதல்பாதியில் அதகளம் செய்பவர், இடைவேளைக்கு பிறகு சிறிது பெட்டிப்பாம்பாக அடஙகி கிளைமாக்ஸ் காட்சியில் உயர்ந்து நிற்கிறார். ஹீரோயின் டாமினேஷம் செய்யும் இது போன்ற கதைக்களத்தில் நடிக்கவே பெரிய ஹீரோயிச கெத்து வேண்டும். விஷ்ணு விஷாலுக்கு அது நிறையவே இருக்கிறது என்பதை கட்டா குஸ்தி பார்ப்பவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.
மாப்பிள்ளை வீட்டுப்பக்கம் காளிவெங்கட் மணமகள் வீட்டுப்பக்கம் சித்தப்பா முனிஷ்காந்த் இருவேறு குணாதியசஙகளுடன் கதையை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக வந்து கவனம் ஈர்க்கிறார்கள்.
கருணாஸ், கேட்கவே வேண்டாம் அம்மாட்டயும் சின்னம்மாட்டயும் தானே காசு வாங்கி சரக்கடிச்சேன் என்று ஒத்துக்கொண்டு வசனஙகள் பேசுவது, மருமகன் ஒரு பொண்டாட்டி அடிமையாக இருக்கக்கூடாது என்பதற்கான யதார்த்தமான மெனக்கெடல்கள் போன்றவற்றில் சராசரி கிராமத்து மனிதர் போன்று வாழ்ந்திருக்கிறார்
நகைச்சுவை க்காக எழுதப்பட்டது போல தெரியவில்லை ஆனால் முதல் பாதி முழுவதும் சிரித்து சிரித்து வயிறுவலிக்கும் அளவிற்கான யதார்த்தமான வசனங்களில் நகைச்சுவை நிரம்பி வழிகிறது.
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு ஜஸ்டின் பிரபாகரனின் இசை என்று எல்லாமே பக்கா.
கட்டா குஸ்தி - கிளாசிக் யூத் எண்டெர்டெயின்மெண்ட