a K.Vijay Anandh review
ஏற்கனவே சுழலில் ரசிகர்களை சிக்க வைத்த தயாரிப்பாளர்கள் புஷ்கர் காயத்திரியின் அடுத்த அருமையான வெப் சீரிஸ் வதந்தி The Fable of Velonie.
8 எபிசோடுகளாக வெளிவந்திருக்கும் இத்தொடர் பிரைமில் நேற்று, டிசம்பர் 2 முதல் ரசிகர்களுக்கு கிடைக்கிறது.
எஸ் ஜே சூர்யா எனும் நடிப்பு அரக்கனை வைத்து கொண்டு, 8 எபிசோடுகள் அல்ல, 80 எபிசோடுகளாக கூட தொடர் இயக்கலாம். அந்தளவுக்கு தனி நபராகவே நடிக்கிறார் நிமிடக்கணக்கில். கொலை செய்யப்பட்ட வெலோனி விவகாரத்தில் ஒரு சிறிய துப்பு கூட கிடைக்காத நிலையில் மனைவி ஆனந்தி - ஸ்மிருதி வெங்கட்டிடம் புலம்பும் அந்த ஒரே டேக்கில் அமைந்த 4 நிமிடங்களுக்கு.மேலான காட்சி ஒரு சாட்சி. அவ்வப்பொழுது, நெஞ்சை விரித்து ரிலாக்ஸ் ஆகிக்கொள்ளும் ஒரு மேனரிசம், அழகு.
கைக்குழந்தையும் நெல்லை பாஷை பேசிக்கொண்டு பூனைக்குட்டி மாதிரி கணவனையே சுற்றிவரும் ஸ்மிருதி வெங்கட்டின் பாத்திரமும் அற்புதம்.
வெலோனியான, சஞ்சனா ஒரு பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரிபருவம் வரையிலான இவரது ஏக்கம் ஆசைகள் ஆகியவற்றை அழகாக பிரதிபலித்திருக்கிறார். ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தை சேர்ந்த லைலாவின் மகளாக, அம்மாவின் அதிதீவிர கண்டிப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல், யாராச்சும் நம்மிடம் அன்பாக நாலு வார்த்தை பேசமாட்டார்கள் என்று தவிக்கும் தவிப்பு அழகு. முதல் எபிசோடிலேயே இவர் கொலை செய்யப்படுகிறார், அதைத்தொடர்ந்து கிளம்பும் இவரைப்பற்றிய வதந்திகள், குறிப்பாக எழுத்தாளர் நாசரின் பார்வையில் விரியும் காட்சிகள், போலீஸ் அதிகாரி எஸ் ஜே சூர்யாவின் புலன் விசாரணையில் விரியும் காட்சிகள் என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பயணிக்கிறது வதந்தி தொடர்.
மகளுடன் எப்பொழுதும் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டே ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பத்து பெண்ணாக அற்புதமாக நடித்திருக்கிறார் லைலா.
எஸ் ஐ ராமராக வரும் விவேக் பிரசன்னா, குமரி தமிழில் மிகவும் சரளமான பேச்சு யதார்த்தமான உடல்மொழி அதைவிட சலனமில்லாத போலீஸ் என்று அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
எழுத்தாளர் கி செபஸ்டியனாக வரும் நாசர், இவர் வெலோனியை பற்றி எழுதும் புத்தகத்தின் மூலம் தான் எஸ் ஜே சூர்யாவிற்கு ஒரு துப்பு கிடைக்கிறது. அதைப்பிடித்து கொண்டு பயணிக்கும் போது, விசாரணை வெற்றிகரமாக நிறைவுபெறுகிறது. நாசர், கேட்கவும் வேண்டுமா, சிறப்பாக நடித்திருக்கிறார்.
அருவி பாலாஜி, கிரிமினாலஜி மாணவனாக எஸ் ஜே சூர்யாவிற்கு உதவி செய்து சில முக்கியமான தகவல்களை கண்டுபிடிக்க உதவி செத்தும்போகிறார், எஸ் ஜே சூர்யா போலவே நமக்கும் ரெண்டு சொட்டு கண்ணீர் வருகிறது.
குலபுலி லீலா, அஸ்வின் குமார், குமரன் தங்கராஜன், விக்கி ஆதித்யா சம்பந்தப்பட்ட காட்டில் நடைபெறும் காட்சிகள் திகிலூட்டும் ரகம். அமைச்சருக்காக காட்டு விலங்குகளை அடித்து சமைத்து கொடுக்கும் காட்சிகளில் மிரட்டுகிறார்கள். அவ்வளவு தொடர்புகள் இருக்கும் போது ஏன் விபச்சாரத்தொழிலில் இறங்குகிறார்கள் என்பது ஒரு சிறு நெருடலே.
ஒருவேளை பெண்பித்தனான அமைச்சர் மீதும் சந்தேகப்படுவதற்காக சில காட்சிகள் சேர்க்கப்பட்டாலும் ,ஒரு தடவை கூட அவர் விசாரணை வளையத்திற்குள் வராததும் ஒரு குறை.அவரை காப்பாற்றும் பத்திரிகையாளராக ஹரிஷ் பெராடியும் வழக்கம் போல கலக்கியிருக்கிறார்.
தொடரில் நடித்திருக்கும் அத்தனை பேரும் சிறப்பான பங்களித்திருக்கின்றார்கள்.
தொடரின் மையக்களமான அந்த அழகான மேன்ஷன் உட்பட, கதை நடக்கும் அத்தனை இடங்களும் அருமை, தமிழ் ரசிகர்களுக்கு புதுமை.
சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் சைமன் கே கிங்கின் இசையும் தொடரை இன்னும் விறுவிறுப்பாக்குகின்றன.
இணைய தொடர்கள் படைப்பாளிகளுக்கு தரும் சுதந்திரம் அளவிடமுடியாதது. அதனை முழுமையாக பயன்படுத்தி சிறப்பான தொடராக வதந்தியை இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ்.
ஒருவரின் மரணத்திற்கு பின், குறிப்பாக அழகான ஒரு இளம்பெண்ணின் மரணத்திற்கு பின் அவளைப்பற்றிய பல்வேறு தரப்பட்ட மக்களின் வதந்திகள், சமூகத்தின் சாபக்கேடு என்பதை அற்புதமாக சொல்லியிருக்கும் இத்தொடரை பார்த்து மகிழுங்கள்.