a K.Vijay Anandh review
ரேஸ்ல தோற்றுப்போகும் விலங்கை சுட்டுக்கொல்லும் காட்சி, வில்லனின் அல்லது பணத்திமிர் பிடித்தவனின் கொடூர மனப்பான்மையை படம் பிடித்து காட்டும் ஒரு மாஸான காட்சி. அப்படிப்பட்ட காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் தங்களை இணைத்துக்கொள்வதுடன் அந்தக்காட்சியை ஆழமாக பதியவைத்துவிடுவார்கள், தங்கள் மனதில்.
அப்படி ஒரு காட்சி, பரவலான சினிமா ரசிகர்களின் நினைவில் இருக்கின்ற வகையில், எம் ஜி ஆர் நடித்த நல்ல நேரம் படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு, சசிகுமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் காரி யில் இடம்பெற்றிருப்பது, ஒரு சுவராஸ்யம். அங்கே அசோகன் யானையை சுட்டுக்கொல்வார். அப்படி ஒரு பவர் ஃபுல் நடிகர் இருந்தால் தானே அப்படிப்பட்ட காட்சியை படமாக்க முடியும், இங்கே சிம்மக்குரலோனின் மூத்த மகன், அதே சிம்மக்குரலோடு, ரேஸில் தோற்ற தன் குதிரையை சுட்டுக்கொள்கிறார், அதன் பெயர் சன் ஷைன் என்பது கூடுதல் சிறப்பு.
அந்த உயிருக்கு நீ செஞ்ச துரோகத்தினால் தான் அது இப்படி அநியாயமாச் செத்துப்போச்சு என்று கதறிக்கொண்டே தானும் உயிரை விடுகிறார் அப்பா நரேன்.
அதற்கு முந்தைய காட்சியில், மக்கள் மட்டுமல்லாமல் ஐந்தறிவு ஜீவராசிகளும் உயிர்வாழ நீராதாரமாக விளங்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை குப்பை மலையாக்குவதை எதிர்த்து போராடுகிறார் நரேன். குப்பை என்பது அதிலும் மக்காத குப்பை என்பது அணுகுண்டை விட ஆபத்தை விளைவிக்கும் என்பதை என்று தான் இந்த அரசு நிர்வாகங்கள் புரிந்துகொள்ளப்போகிறார்களோ!
இப்படி ஆ ஊன்னா… பொது நலனிற்காக போராடும் அப்பாவிடம் மகன் சசிகுமார், “ உன்னை மாதிரி ஊருக்கு உண்மையா உழைச்சவங்களெல்லாம் இப்போ உசுரோடு இல்லை… அயோக்கியனும் திருடனும் தான் இப்போ நல்லா வாழ்ந்துக்கிட்டு இருக்காய்ங்க..” என்று கோபித்து கொள்கிறார்.
அதற்கிடையில், சசிகுமாரின் சொந்த ஊர்ப்பக்கம் ஒரு கோயில் பஞ்சாயத்து, ஒரு தலைக்கட்டு குறைவாக இருக்கவே நரேனை அழைத்து செல்லவரும் ஊர்ப்பெரியவர் நாகி நீடு.
இப்படி முதல் 10-15 நிமிடங்களிலேயே இந்தப்படத்தில் ஏதோ ஒரு செம்ம மேட்டர் இருக்குய்யா என்கிற எதிர்பார்ப்பை எகிறச் செய்துவிடுகிறார் அறிமுக இயக்குநர் ஹேமந்த். அந்த எதிர்பார்ப்பிற்கு, படத்தின் இறுதி பிரேம் வரை நியாயம் வழங்கியிருக்கவும் தவறவில்லை அவர்.
மிகவும் அரிதாகிப்போன நமது பாரம்பரிய காளைகளை தேடிப்பிடித்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும், நாயகி பார்வதி அருண் வளர்க்கும் அந்த காரி வகை காளையை காட்டும் போது ஒவ்வொரு ரசிகர்களும் பிரமிப்பின் உச்சத்திற்கு செல்வது உறுதி. ஆரம்பத்தில் தோற்றத்தில் மட்டும் மிரட்டும் காரி காளை, கிளைமாக்ஸில் வாடி வாசல் வழியாக வந்து ஒரு ஆட்டம் ஆடும் பாருங்க, ப்பா.. இப்பொழுது நினைத்தாலும் சிலிர்க்கிறது. அந்த சிலிர்ப்பு, ஒவ்வொரு ரசிகனுக்கும் தொற்றிக்கொள்ளும், நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும். அந்த காளை சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்தமாக 18 காளைகளும் பங்குகொள்ளும் ஏறுதழுவதல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா உள்ளிட்ட குழுவினர் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
பாடல்கள், பட ஓட்டத்தில் இருந்து விலகிச்செல்வது ரசிகர்களுக்கே போரடித்துவிட்ட நிலையில், டி இமானின் இசையில் வரும் பாடல் காட்சிகள் கதையோட்டத்திற்கு ஊடாகவே பயணித்து ரசிக்க வைக்கின்றன.
கிராமங்கள் குறிப்பாக இந்திய கிராமங்கள் காந்தி சொன்னது போல நமது தேசத்தின் முதுகெலும்புகள் மட்டுமல்ல, நமது தொன்மையான கலாச்சாரத்தின் வேர்கள், அந்த வேர்களில் வெ ந் நீர் பாய்ச்சுவதும் ஒன்றுதான் நமது கலாச்சாரங்களை இழந்து நடைப்பிணங்களாக வாழ்வது ஒன்றுதான்.
நாகரீக வளர்ச்சி என்கிற பெயரில் கலாச்சாரமே இல்லாமல் ஒரு நகரக்கலச்சாரம் நமது இளைய தலைமுறையை சீரழிக்க ஆரம்பித்திருக்கும் நேரத்தில் காரி என்கிற அற்புதமான படத்தை கொடுத்த தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு இந்த தேசம் நன்றி கடன் பட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.
பார்வதி அருண், சந்தேகமே இல்லாமல் படத்தின் மையப்புள்ளி இவர்தான். காரியை காணாமல் சாணி மெழுகிய தரையில் விழுந்து புலம்பும் போதும், காரி தோற்காதுய்யா.. நீ செத்துறாதய்யா…. வாடிவாசலுக்குள்ள வந்துட்டா அதுக்கு என்னையும் தெரியாது உன்னையும் தெரியாது… அது சிவனின் காளை… என்று சொல்லும் இடங்களிலும் ஒரு வெள்ளந்தியான கிராமத்து தேவதையாக வாழ்ந்திருக்கிறார்.
இராமநாதபுரம் சமஸ்தானமாக வரும் ராமராஜன் உள்ளிட்ட நடிகர்களும் செல்வம் என்கிற கதாபத்திரத்தில் வில்லனாக வரும் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கும் அருண்மொழி தேவன் உள்ளிட்ட அத்தனை கிராம வாசிகளும் நம்மை வசீகரிக்கின்றார்கள்.
சசிகுமார், இதுபோன்ற கதாபாத்திரங்களில் இவரை விட்டால் இன்றைய நிலையில் பொருத்தமான நடிகர்கள் யாருமில்லை எனலாம். அந்த அளவிற்கு, வாழ்ந்திருக்கிறார். தொழில் முறை குதிரை ஜாக்கியாக இருந்து , கிராமத்திற்காக ஜல்லிக்கட்டு வீரராக ஆகும் இவரது கதாபாத்திர வடிவமைப்பும் அழகு. அதற்கு 100% நியாயம் கற்பித்திருக்கிறார்.
ஜெயிக்கிற விலங்குகளை கொன்று சமைத்து சாப்பிட்டு கேவலமான சுகம் காணும் கதாபாத்திரத்தில் சக்ரவர்த்தியும் சிறப்பாக நடித்திருக்கிறார். சம்யுக்தா, வில்லை வேடம் கூட சிறப்பாக பொருந்துகிறது இவருக்கு.
படத்தில், இடம்பெற்ற ஒவ்வொரு வசனங்களும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. வலிமையான அர்த்தங்கள் நிறைந்த அழகு தமிழில் வசனங்கள் மனதை வருடிச்செல்வதை உணரமுடிகிறது.
காரி, நமது கொண்டாட்டமாக இருக்கவேண்டும்!