a K.Vijay Anandh review
மகளைத்தேட தனியார் துப்பறிவாளர் நரைனிடம் அசைன்மெண்ட் கொடுக்கும் பிரதாப் போத்தன், இன்னொரு பக்கம் ஒரு முக்கியமான விஷயத்திற்காக பெண் ஒருவரை தேடிக்கொண்டிருக்கும் நட்டி, நரைனுடன் அப்பாவியாக தன்னை இணைத்துக்கொள்ளும் கதிர் என்று ஏன்..? எதற்கு..? யாரை..? என்று யூகிக்கமுடியாத திரைக்கதையோடு விறுவிறுப்பாக பயணிக்கிறது யூகி.
விக்ரம் படத்திற்கு பிறகு இன்னொரு சிறப்பான கதாபாத்திரத்திரமேற்று சிறப்பாக நடித்திருக்கிறார் நரைன்.
வழக்கமான நையாண்டித்தனங்களுடன், சபரிமலைக்கு மாலைபோட்டுக்கொண்டே, தனது கடமையில் அதகளம் செய்கிறார் நட்டி. ஆடிட்டருக்கு ஷேவ் செய்து விட்ட கூலி வாங்கிக்கொள்ளும் அந்த காட்சி ஒன்றே சாட்சி. இவர் யார் என்று கிளைமாக்ஸில் தான் சொல்லப்படுகிறது. அதுவரை, இவர் ஏதோ அமைச்சரின் அடியாள் என்றே நம்மை நம்ப வைத்துவிடுகிறார்கள்.
கதிர், ஒரு சர்பரைஸான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரா..? நரைனா..? யார் இந்த வேலைகளையெல்லாம் செய்வது என்று யூகிக்க முடியாதவாறு காட்சிகள் நகர்கின்றன.
மருத்துவராக வினோதினி வைத்யநாதன், சூப்பர் நடிகராக ஜான் ரவி ஆகியோரும் மிரட்டியிருக்கிறார்கள்.
ஆனந்தி, கொஞ்ச நேரமே வந்தாலும் அழுத்தமான முத்திரையை பதித்து விடுகிறார் தனது இயல்பான நடிப்பால். பக்கவாதம் வந்தவராக பவித்ரா லட்சுமியும் கவனிக்க வைத்திருக்கிறார்.
யாராலும் யூகிக்க முடியாத விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து யூகியை இயக்கியிருக்கிறார் ஜாக் ஹாரிஸ்.
யூகி, சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பும் ரசிகர்களுக்கு தீனி!