a K.Vijay Anandh review
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கும் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருக்கும் கலகத்தலைவன் படத்திற்கும் ஏதேச்சையான ஒரு ஒற்றுமை இருக்கிறது.
தனது சுய அடையாளங்களை மறைத்து பேயாக அதாவது Ghost ஆக வாழும் நாயகனை கண்டுபிடித்து வேட்டையாடுவது தான் இரண்டிற்கும் பொதுவான ஒரு களம்.
இதில், கார்பரேட் ரகசியங்களை திருடி விற்கும் கும்பலை கண்டுபிடிக்க ஆரவ் பணியமர்த்தப்படுகிறார். அடையாளமே இல்லாத அந்த விசில் ப்ளோவர் கூட்ட தலைவனை தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு தடயத்தையும் வைத்து தட்டித்தூக்குவது தான் கலகத்தலைவனின் கச்சிதமான திரைக்கதை.
படம் ஆரம்பிக்கும் போது ஆரவ் தான் கதாநாயகனாகத்தெரிவார். படம் முடியும் வேளையில் ஆரம்பத்தில் திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு வில்லத்தனமான ஒரு கதாபாத்திரத்தில் காட்டப்படும் உதயநிதி, ஏன் கார்பரேட்டின் மீது அவ்வளவு கோபம் கொள்கிறார் என்று காட்டப்படும் போது – கிட்டத்தட்ட இறுதிக்காட்சியில் கதாநாயகனாகிவிடுகிறார். ஒரு சவாலான திரைக்கதையில் சாமர்த்தியமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் மகிழ்திருமேனி.
உதயநிதி, மனிதனிற்கு பிறகு மனிதர் முற்றிலும் மாறிவிட்டார். மிகவும் சவாலான களங்களை தேர்ந்தெடுத்து தன்னை பொருத்திக்கொள்ள அதிகம் மெனக்கெடுகிறார். அந்த மெனெக்கெடுதல்களின் முன்னேற்றம் இந்த திரு கதாபாத்திரத்தில் தெரிகிறது. பத்தாயிரம் வித்தை தெரிந்தவனை விட ஒரே ஒரு வித்தையை பத்தாயிரம் தடவைகள் பயிற்சி செய்த ஒரு பக்கத்துவீட்டு பராக்கிரமசாலியாக அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
கூட்டாளிகளாக வரும் கலையரசன், விக்னேஷ்காந்த் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். விஜய் ஆதிராஜ், ரவி ஆகியோர் ஆரவிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
கொஞ்சம் சொல்லு, ஏதாச்சும் சொல்லு என்று ஒவ்வொருவரையும் அடித்து மிரட்டி தகவல்களை சேகரிக்கும் ஆரவிற்கு இந்தப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என்றால் மிகையாகாது.
நிதி அகர்வால், துறுதுறு மருத்துவக்கல்லூரி மாணவியாகவும் கிராமப்புறத்தில் தன்னை நம்பி இருக்கும் அப்பாவி மக்களுக்கு தொடர்ந்து மருத்துவம் பார்க்கும் பொருட்டு தனது காதலையே துறக்கும் முதிர்ந்த மருத்துவராகவும் ஒரே படத்தில் இருவேறு பரிமாணங்களில் அசத்துகிறார்.
ஆரோல் குரலியின் இசையில் ஹே புயலே… நீளாதோ.. ஆகிய இரண்டுபாடல்களும் அருமை என்றால் அவை காட்சிப்படுத்தப்பட்ட விதங்களும் மிகவும் அருமை. இன்னொரு பக்கம், மிகச்சிறந்த பின்னணி இசையை வழங்கி, தன்னால் பின்னணி இசையும் அமைக்க முடியும் என்று படத்திற்கு படம் நிரூபிக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
இன்னொரு கட்டத்திற்கு உதயநிதியின் ரசிகர்களை எடுத்துச்சென்றிருக்கிறது, தில்ராஜின் ஒளிப்பதிவு.
முதல் பாராவில் குறிப்பிடப்பட்டிருப்பது போல, விக்ரம் போன்று பெயர்ச்சொல்லாக இப்படத்திற்கு ஒரு தலைப்பு வைப்பதாக இருந்தால் திருமுருகன்காந்தி என்று வைத்திருக்கலாம் போல! ஏன் என்பது படம் பார்க்கும் போது புரியும்.
கலகத்தலைவன், மகிழ்திருமேனியின் டிரேட்மார்க் ஆக்ஷன் படங்களின் வரிசையில் சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறது.