a K.Vijay Anandh review
நித்தம் ஒரு வானம், முடிந்தளவு தன்னை தனிமைப்படுத்தி கொள்ளும் நாயகன், தீடீரென்று ஏற்படும் ஒரு பிரச்சினையில் மனமுடைந்து போக, அவருக்கு அவரது குடும்ப மருத்துவர் கொடுக்கும் சிகிச்சை தான் இந்தப்படம்.
சிறிய பிரச்சினைகளுக்கே துவண்டு போய்விடும் மக்களுக்காக இயக்குநர் ரா கார்த்திக் ஒரு நல்ல சினிமா மூலம் கொடுத்திருக்கும் சிகிச்சை என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.
அன்பான அம்மா, அப்பா, வீட்டில் விளையாட ஒரு நாய்க்குட்டி, அலுவலகத்தில் தன்னை கொண்டாடும் சக ஊழியர்கள் என்று இருந்தாலும், தன்னை தனிமைப்படுத்தி கொண்டு ஒரு வாழ்க்கை வாழ்கிறார் அசோக் செல்வன். திருமணத்திற்கு பிறகாவது மாறிவிடுவார் என்று பார்த்தால், குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமே அவரை பெரிய மன உளைச்சலில் ஆழ்த்தி விடுகிறது.
அதன் பிறகு வீரப்பனாக பிரபாகரனாக இரண்டு கதாபாத்திரங்களில் வாழ்ந்து, தனது மன உளைச்சலில் இருந்து விடுபடும் பயணத்தை தொடங்குகிறார் அசோக் செல்வன்.
70- 80 களில் பார்த்து ரசித்த கமல்ஹாசனை மீண்டும் திரையில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு. குறிப்பாக, கோயமுத்தூரில் பணியாற்றும் காவல்துறை உயரதிகாரி பிரபாகரனாக கோவைத்தமிழ் பேசி குறும்பத்தனம் செய்து, தனக்கு பிடித்தமானவரை திருமணம் செய்ய அவர் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் அழகு. அதற்கு முன் கோபக்கார வீரப்பனாக, சத்யா கமல்ஹாசனை நினைவுபடுத்துகிறார்.
அவர் ஒரு பிரேமில் கூட கமல்ஹாசனை இமிட்டேட் செய்வதில்லை, எப்படி கமல் ரஜினி இருவருக்குள்ளும் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பு பிரதிபலிக்குமோ அதுபோல, இவருக்கு இவரது முந்தைய தலைமுறை சிறந்த நடிகர் கமல்ஹாசனின் சாயல் வெளிப்படுவதில் ஆச்சிரியமில்லை தானே!
இன்னொரு பக்கம், சிவாந்திகா ராஜசேகர், அபர்ணா பாலமுரளி என்று மிகச்சிறந்த கதாபாத்திர வடிவமைப்புக்குள் கோலோச்சுகிறார்கள்.
அதிலும், அப்பா அழகம்பெருமாள் தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யும் ஒவ்வொரு முறையும் அபர்ணா பாலமுரளி அடிக்கும் லூட்டிகள் படத்தில் பொழுது போக்கின் உச்சம். இருவரின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள கொல்கத்தா செல்லும் வழியில் அசோக் செல்வனுடன் இணைந்துகொள்கிறார் ரிது வர்மா.
ரிதுவர்மாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். மருத்துவர் அபிராமி அசோக் செல்வனுக்கு சிகிச்சை கொடுக்கிறார் என்றால், ரிதுவர்மா தான் டோசேஜ் எனலாம், அந்தளவுக்கு நிஜமான சிவாந்திகா மற்றும் அபர்ணாவின் நிலையை அறிந்து அசோக் செல்வன் ஒரு இயல்பான வாழ்க்கைக்கு வரும் வரை ரிது வர்மா தான் மருந்தாக இருக்கிறார்.
800 கோடி மக்கள் தொகை இருக்கும் இந்த பூமியில், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு அல்லது தனக்குத்தானே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு வாழ்வதை விட பெரிய நரகம் வேறு எதுவும் இல்லை என்பதை அசோக் செல்வன் வாயிலாகவும் – ஒரு குறிப்பிட்ட விநாடியில் நமது வாழ்க்கை தலைகீழாக ஆகிப்போகிறதா..? திரும்பவும் அதனை நேராக்க முடியும், எந்த சூழ் நிலையிலும் வாழ்க்கை நமது கட்டுப்பாட்டில் தான் என்பதை சிவாந்திகா மற்றும் மதிவதினி அபர்ணா பாலமுரளியை திருமணம் செய்துகொள்ளும் பிரபாகரன் ஜீவா மூலமாகவும் அட்டகாசமாக சொல்லி புரிய வைத்திருக்கிறார் ரா கார்த்திக்.
கோபி சுந்தரின் இசை, விது அய்யனாரின் ஒளிப்பதிவு என்று தொழில் நுட்ப ரீதியாக சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அதிலும், பனிபடர்ந்த இமயமலைத்தொடர்கலில் நடக்கும் காட்சிகள், பயணத்தில் காட்டப்படும் வெவ்வேறு மொழி பேசும் மக்களின் உணவுகள், கலாச்சாரங்கள் என்று மிகவும் சுவராஸ்யமான காட்சியமைப்புகளில் இவர்களின் பங்களிப்பு இயக்குநருக்கு பெரிதும் உதவியிருக்கிறது.
மிகவும் எளிமையான கதைக்கரு, அட்டகாசமான ஒரு பயண திரைக்கதை, அதற்குள் மூன்று துயரங்கள் அதைவிட அழகான மூன்று காதல்கள் நித்தம் ஒரு வானம் தமிழ்த்திரை ரசிகர்களுக்கு தீனிபோடும் விதமாக வெளிவந்திருக்கிறது.
பெருந்துயரமெனும் இரவைக்கடந்து நம்பிக்கையுடன் எழுபவர்களுக்கு நித்தம் நித்தம் ஒரு புது வானம் தான் என்று சொல்கிறது – நித்தம் ஒரு வானம்.