a K.Vijay Anandh review
நமது கூத்து என்று அழைக்கப்படும் ஆடல், பாடல், வசனம் என்று முத்தமிழுடன் தொன்றுதொட்டு பழகிவரும் மேடை நாடகம் குறிப்பாக ஆன்மீகம் கலந்த மேடை நாடகம் இல்லையென்றால், வாழ்க்கையே இல்லை என்பது போன்ற ஒரு அழகான படமாக வெளிவந்திருக்கிறது பஃபூன்.
அவரது அப்பா எழுதி, இசைத்து அரங்கேற்றும் வள்ளி திருமண நாட்டிய நாடகத்தில் வைபவ் போடுவதோ பஃபூன் வேடம் தான் என்றாலும், நிஜத்தில் சுயநல அரசியல்வாதிகளால் சமூகத்தில் அனுதினமும் அரங்கேற்றப்படும் அவலங்களை அடையாளம் காட்டும் நாயகனாக மிளிரும் அந்த முரண்பாடான கதாபாத்திர வடிவமைப்பு அருமை. பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வழக்கம்போல இயல்பாக நடித்து , ஒரு நல்ல படத்தில் நான் இருக்கிறேன் என்கிற அளவிற்கு பெயர் வாங்கிவிடுகிறார்.
இலங்கை தமிழ் அகதிப்பெண்ணாக அனகா, ஒரு இருக்கமான முகத்துடன் அரசு நிர்வாகத்தை நக்கலடிக்கும் விதத்தில் நம்மை நிறையவே யோசிக்க வைக்கிறார். கிளைமாக்ஸில், அட உனக்குத்தான் மேடை நாடகமெல்லாம் பிடிக்குமே இனியாள், இவர்கள் கூடவே சலங்கையை கட்டிவிட வேண்டியதுதானே என்று ரசிகர்களை யோசிக்க வைத்துவிடுகிறார். அந்தளவுக்கு இயல்பான ஒரு நடிப்பு. ஜோஜு ஜார்ஜ், சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். வழக்கம் போல விரைப்பான எஸ் பி கதாபாத்திரத்தில் நேரில் பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் நடிகர் தமிழ் மிரட்டியிருக்கிறார். முதலமைச்சராக வரும் ஜெயபாலன், கட்சியை பிய்த்துக்கொண்டு போக முயலும் அமைச்சராக ஆடுகளம் நரேன் ஆகியோர் நமது மண்ணில் நடக்கும் சந்தர்ப்பவாத, தனிப்பட்ட விருப்பு வெறுப்பு பழிவாங்கும் அரசியல் அவலங்களை கண்முன் கொண்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு 10 வருடத்திலும் மிகச்சிறப்பான குணச்சித்திர அல்லது நகைச்சுவை நடிகர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். அந்த வரிசையில் ஆளுங்கட்சி கவுன்சிலர் மகன் முத்தையாவாக வரும் ஆத்தங்குடி இளையராஜா நகைச்சுவையிலும் குணச்சித்திரத்திலுமாக அசத்தியிருக்கிறார். வடிவேலு, சூரி வரிசையில் அடுத்த ஒரு ஸ்டார் ரெடி.
ஸ்டோன் பெஞ்சிலிருந்து அடுத்த ஒரு நம்பிக்கை நட்சித்திரமாக புறப்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன். மேடை நாடகக்கலையையும் சம கால கிரிமினல் பின்னணி கொண்ட அரசியலையும் அழகாக கோர்த்து, அதில் அப்பாவி இளைஞர்கள் எப்படி பந்தாடப்படுகிறார்கள் என்பதையும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் பஃபூன் படத்தில்.