a K.Vijay Anandh rreview
சிறிய வயதிலிருந்தே நன்றாக படிக்கும் விக்னேஷ், ஆரா வளர வளர அவர்களது படிப்பின் மீதான ஆர்வமும் அதிகரிக்கிறது, அவர்களது நட்பும் இன்னும் ஆழமாகிறது. வாலிப வயதில் நெருக்கமாகும் நட்பை காதலென்று தானே சமூகம் புரிந்துகொள்ளும்! அதிலும் இருவரும் உயர்ந்த மற்றும் தாழ்ந்த சாதியை சார்ந்தவர்களென்றால் கிராமத்தில் சமூகங்களுக்கிடையே தீ பற்றிக்கொள்ளும் தானே! அப்படிப்பட்ட ஒரு சென்சிடிவான விஷயத்தை மிகவும் அற்புதமான திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சேரா கலையரசன்.
படம் முழுவதும் டி எம் உதயகுமாரின் இசையில் வரும் பாடல்களும் அவை காட்சிப்படுத்த விதங்களும் அருமை.
ஒரு அழுத்தமான, கொஞ்சம் திமிரான கிராமத்து கதாபாத்திரத்தில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார் நாயகியாக வரும் ஆரா. அவரது அந்த கனத்த குரல் கூட அந்த கிராமத்து குழலி கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. அவருக்கு தோழியாக வருபவரும், அத்தோழியின் முறைமாமனாக வருபவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. மிகவும் வித்தியாசமாகவும் அதே நேரம் கிராமத்து இயல்பு மாறாமலும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
நாயகன் விக்னேஷும் மிகவும் இயல்பான கிராமத்து மாணவனாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
விக்னேஷ் மற்றும் ஆரா ஆகியோருக்கு இடையில் தொடர்பு சாதனமாக ஒரு வாழை மரத்தை வைத்திருக்கும் காட்சியமைப்பு கவிதை கவிதை எனலாம்! அந்த வாழை மரத்தில் இருந்து பழைய சம்பவம் ஒன்றை பிளாஷ்பேக்காக காட்டுமிடம் தொழில் நுட்பரீதியாக சூப்பராக அமைந்திருக்கிறது. பெரிய படமோ சின்னப்படமோ, நம்மவர்கள் கதை சொல்லலில் படத்துக்கு படம் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்பதற்கு அக்காட்சியமைப்பு பெரிய உதாரணம்.
அத்துடன் கிராமத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள் , மையக்கதாபாத்திரங்கள் தவிர ஏனைய பாத்திர படைப்புகள், குறிப்பாக கதை நடக்கும் பசுமையான அந்த மலைசூழ் கிராமம் என்று அனைத்துமே சிறப்பாக அமைந்திருக்கின்றன.
இரண்டாவது பாதி திரைக்கதையில் பெரிதாக எந்த திருப்பங்களும் இன்றி அதன் கதையோட்டத்திலேயே விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தி கொஞ்சம் கண்ணீர் சிந்தவும் வைத்துவிடுகிறார் இயக்குநர்.
சாதின்னா என்ன டீச்சர் என்று கேட்கும் பொழுது, குழலியின் அம்மாவை வைத்து காறித்துப்ப வைத்திருக்கும் இடம் அருமை. சாதி வெறிபிடித்த ஒவ்வொருத்தரின் மூஞ்சியிலும் அந்த எச்சில் தெறித்திருக்கும்!
குழலி, சமூக நல்லிணக்கத்திற்கு வித்திட்டிருக்கும் அற்புதமான படம்!