a K.Vijay Anandh review
பெயருக்கு ஏற்றபடியே இது ஒரு டிராமா பார்ப்பது போன்ற, மேடை நாடகம் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல, ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் அதற்கேற்ற அழகான கதைக்களம். ஒரு விறுவிறுப்பான கதையை இளம் நடிகர்களை வைத்து அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
கிஷோரும், சார்லியும் தான் மூத்த நடிகர்கள் மற்றவர்கள் அனைவருமே புதுமுகங்கள் தான் ஆனாலும் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை மிகவும் நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள்.
அந்த காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக வரும் ஜெய்பாலா, கச்சிதமான தேர்வு என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார். தனது காதலியின் உணர்வுகளை தட்டமுடியாமல் அவர் தவிப்பதும், குற்றம் நடந்த பின்னும் உடைந்து விடாமல் கம்பீரமாக வலம் வருவதுமாக அவரது உடல்மொழி மிகவும் அருமை.
அவரது துறுதுறு காதலியாக அந்த காவல் நிலையத்தில் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக வரும் காவ்யா பெல்லுவும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னால் தான் அனைத்தும் நடந்துவிட்டதோ என்று அஞ்சி பதறும் காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார்.
ஸ்ட்ரிக்டான காவலராக வரும் சார்லி, அவர்தான் படத்தில் நடக்கும் குற்றச்சம்பவத்தின் மையப்புள்ளி. சீனியர் சீனியர் தான் என்று சொல்லுமளவிற்கு, கச்சிதமாக நடித்திருக்கிறார்.
ராஜபாண்டியாக வருபவரும் அற்புதம், கிஷோரின் உதவியாளராக வரும் திருநங்கையும் கம்பீரமாக நடித்து கைதட்டல்களை அள்ளுகிறார்.
சிங்கிள் ஷாட் படத்தில் ஒரு பிளாஷ்கட் வைத்து அசத்தி அதனை கிளைமாக்ஸில் காட்டும் விதத்தில் அந்த திரைக்கதை உக்தியை கையாண்ட விதத்தில் மிகச்சிறப்பாக டிராமா படத்தை இயக்கியிருக்கிறார், அஜு கிழுமலா.
மேடை நாடகத்தை பார்த்து அதிலிருந்து தான் சினிமா வந்தது எனினும், இந்த டிராமா படத்தை பார்த்து மேடை நாடகங்களை இன்னும் விறுவிறுப்பாக்கலாம் என்கிற விதமாக டிராமா படம் வெளிவந்திருக்கிறது. அதாவது ஒரு காட்சியை நேரடியாக பார்வையாளர்களுக்கு காட்டிக்கொண்டே பின்னணியில் நடக்கும் காட்சிகளின் வசனங்களையும் ஒலிக்கச்செய்திருக்கும் விதம் அருமை. அதை இனி மேடை நாடகங்களிலும் பின்பற்றலாம்.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நேர்த்தியான படமாக டிராமாவை பார்த்து மகிழலாம்!