a K.Vijay Anandh review
அதர்வாவின் சமீபத்திய படங்களில் இது டாப் எனலாம். அப்பா அருண்பாண்டியன் ஆரம்பித்து வைத்த அந்த கவனிக்கப்படாத ஆதரவற்ற குழந்தைகள் கடத்தல் வழக்கின் முடிச்சுகளை , 25 வருடங்களுக்கு பிறகு மகனாக அதர்வா அவிழ்த்து அப்பாவிற்கும் நல்ல பெயர் வாங்கி கொடுப்பது மட்டுமல்லாது ஆதரவற்ற குழந்தைகள் , தத்து எடுக்கிறேன் பேர்வழி என்று கடத்தப்படுவதையும் தடுக்கிறார்.
வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிப்படுத்துதல்கள் முதல் அண்டர் கவர் ஆபரேஷன் செய்யும் இடமாக அந்த பாழடைந்த காபி பார் வரை வித்தியாசமாக உழைத்திருக்கிறார்கள்.
அதர்வா, அற்புதமான உடல்மொழி யில் அண்டர் கவர் போலீசாக அசத்தியிருக்கிறார், அதாவது இண்டர்னல் அஃபயர்ஸ் பிரிவில். காவல்துறை உயரதிகாரி அழகம்பெருமாளின் கட்டளைகளை தனது சகாக்களுடன் இணைந்து எக்ஸிகியூட் செய்யுமிடங்கள் அருமை. எங்கும் வில்லனின் ஆட்களும் புகுந்துவிடுவார்களே! அதர்வாவுடன் பணியாற்றுபவரே வில்லனின் மகனாக – அதர்வாவிற்கு எதிராக திரும்பும் இடம் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
அப்பாவாக , அல்சைமர் நோயினால் அவதிப்படும் அருண்பாண்டியன் கச்சிதமாக நடித்திருக்கிறார். அவர் புலனாய்வு செய்த விஷயங்கள் அதர்வாவின் தற்போதைய புலன் விசாரணைக்கு உதவுவது எதிர்பாராத நிகழ்வாக இருந்தாலும், இரண்டுபேரும் ஒரே எதிரியை நோக்கி தான் பயணப்படுகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு தெரியவரும் போது பரபரப்பு தொற்றுக்கொள்கிறது.
அம்மாவாக வரும் சீதா, அண்ணியாக வரும் வினோதினி என்று அனைவருமே அருமையாக நடித்திருக்கிறார்கள்.
நாயகி தான்யா ரவிச்சந்திரன் வழக்கம் போல அதிகம் பேசாமல், ஆதரவற்ற குழந்தைகள் காப்பாக நிர்வாகியாக இயல்பாக நடித்திருக்கிறார். அதர்வாவின் ஆலோசனைப்படி தத்து கொடுத்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விசாரிக்குமிடங்கள் அருமை.
எனக்கு காமெடி மட்டுமில்ல, குணச்சித்திரமும் வரும் அதிலும் அண்டர்கவர் போலீசாகவும் பட்டையை கிளப்ப முடியும் என்று நிரூபித்திருக்கிறார் அறந்தாங்கி நிஷா. அவருடன் வரும் முனீஷ்காந்தும் வழக்கம் போல அசத்திவிடுகிறார்.
சின்னி ஜெயந்த் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். மறைந்த நடிகர் முரளியின் பல படங்களில் அவருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கோலோச்சியவர், அவரது மகன் அதர்வாவுடனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஸ்கோர் செய்துவிடுகிறார். தனது உயிரைக்கொடுத்து தான் ஒரு நேர்மையான காவலர் தான் என்று என் மகனிடம் சொல்லுங்கள் என்று சொல்லிக்கொண்டே உயிரை விடும் காட்சியில் அழவைத்துவிடுகிறார்.
சாம் ஆண்டன் படங்களில் ஒன்றுக்கொன்று முந்தையதை விட சிறப்பாக அமைந்திருந்தாலும், டிரிகர் அவரது படங்களில் மாஸ் ஆக்ஷன் படமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆதரவற்ற குழந்தைகளை மையக்கருவாக வைத்து அட்டகாசமான ஆக்ஷன் படமாக டிரிகரை கொடுத்திருக்கிறார்.
டிரிகர், அற்புதமான பொழுதுபோக்கு ஆக்ஷன் மசாலா!