a K.Vijay Anandh review
பணக்காரர்களின் இரும்பின் மதிப்பை ஒப்பிடும் போது ஏழைகளின் உயிரின் மதிப்பு மிகவும் மலிவானது என்கிற ஒருவரிக்கதையை, காணாமல் போன தன் மனைவியை கண்டுபிடிக்க கருணாஸ் அளிக்கும் புகாரின் பின்னணியில் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
ரித்விகா, கர்ப்பிணியாக அவர் துடிதுடிக்கும் அந்த ஒரு காட்சி தான் பெரிய வசனஙகள் கூட இல்லை, ஆனாலும் கச்சிதமாக நடித்து மனதில் நின்றுவிடுகிறார்.
இனியா, இப்படி ஒரு இனியாவை இதற்கு முன்பு பார்த்திருக்க முடியாது என்கிற அளவிற்கு மிரட்டியிருக்கிறார்.
வறுமை, வாழ்வாதாரத்திற்கு தன் தம்பி திலீபனுடன் சேர்ந்து கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இரும்பு திருடும் அடவாடி பெண்ணாக அசத்தியிருக்கிறார். அவரே தன்னை காட்டிக் கொடுத்த ரித்விகா, பிரசவத்திற்காக துடிக்கும் போது தானே ஆட்டோவில் மருத்துவமனைக்கும் அழைத்து செல்கிறார். எப்படிப்பட்ட மோசமான பெண்ணுக்குள்ளும் ஒரு அழகான தாய்மை இருக்கும் தானே!
இன்னொரு பக்கம் பாகுபலி பிரபாகரும் தலைமை ஏட்டாக அருண்பாண்டியனும் மிகச்சிறப்பாக காவல்துறை நடவடிக்கைகளை கண்முன் கொண்டு வருகிறார்கள்.
பாகுபலி பிரபாகர் காலில் அடிபட்ட நிலையில் யூனிபார்ம் அணியாமல் வேட்டி பனியனில் வருவதாக வெறுமனே காட்சிப்படுத்தாமல் அதற்குள் படத்தின் கதையையே ஒளித்து வைத்திருந்த ராம்நாத் பழனிகுமாரின் இயக்கத்தை பாராடியே ஆகவேண்டும்.
உயரதிகாரியாக வரும்.உமா ரியாஸ்கானும் வழக்கம் போல சிறப்பாக நடித்து பெயர் வாங்கிவிடுகிறார்.
பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தன் மனைவியை தேடி நடையாய் நடக்கும் கருணாஸ், சமீப காலங்களில் படத்திற்கு படம் மிகச்சிறப்பான கதாபாத்திரங்களில் அசத்தி வருகிறார், ஆதாரும் அதிலொன்று.
ஆதார், தனி மனிதனின் ஆதாரம் அந்த ஆதாரத்தையே மாற்ற முடியாது என்றாலும் ஆளை மாற்றிக்காட்டுகிறார்கள். ஆதார் அட்டைக்கு கொடுக்கபடும் கைரேகை, விழித்திரை போன்ற ஆதாரங்களை ஒப்பிட்டு பார்க்காமல் தனது மகள் என்று நினைத்து ஒரு உடலை வாங்கி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வாங்கிக்கொள்ளும் நீதிபதியின் அறியாமை அந்த ஆதாருக்குள் தானே ஒளிந்திருக்கிறது என்பதற்காக ஆதார் என்று பெயர் வைத்திருப்பார்களோ!
மொத்தத்தில் ஆதார், அட்டகாசமான புலனாய்வு திரில்லர்!