a K.Vijay Anandh review
ஒரு வகையான சஸ்பென்ஸ் திரில்லர் அத்துடன் கொஞ்சம் அதிரடி ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரெண்டகம் படம் எப்போ ஆரம்பிக்கின்றது..? அட முடிஞ்சுடுச்சா..? என்று கேட்க தூண்டுகிறது.
ஒரு டானின் வலதுகரமாக செயல்பட்டு இன்று நினைவுகளை மறந்து தவிக்கும் அரவிந்த் சாமியை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்று காணாமல் போன 30 கோடி மதிப்பிலான தங்கத்தை கண்டுபிடிக்க உதவும் ஒரு சிறு வேலை குஞ்சக்கோ போபனுக்கு கொடுக்கப்படுகிறது.
வேலையை முடித்துக்கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தன் காதலியுடன் ஸ்வீடன் போய் செட்டிலாகிவிடத்தேவையான பணம் கிடைத்துவிடும் என்கிற நிலையில் அந்த வேலைக்கு ஒத்துக்கொள்கிறார் குஞ்சக்கோ போபன்.
அடுத்தடுத்து என்ன நடக்கின்றது என்பதை இவ்வளவு விறுவிறுப்பாக சொல்லிவிடமுடியுமா என்று ஆச்சிரியப்படும் அளவிற்கு கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பெளினி டிபி. எஸ் சஞ்சீவின் திரைக்கதையும், சசிகுமார் சிவகுருவின் நறுக்குத்தெறித்தாற்போன்ற வசனங்களும் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்து படத்துடன் ஒன்றிப்போக வைக்கின்றது.
கோவாவில், கோதாவில் களமிறங்கும் அரவிந்த்சாமி, நான் வெறும் சாக்லேட் பாய் ஹீரோ இல்லடா அதிரடி ஆக்ஷனும் செய்வேன் டா என்கிற மாதிரி சண்டைக்காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார்.
கிளைமாக்ஸ் வரை அண்ணன் அண்ணன் என்று அப்பாவியாய் அரவிந்த் சாமியை சுற்றிவரும் குஞ்சக்கோ போபன், தான் யார் என்று தெரிந்த நிலையில் துப்பாக்கியால் தன்னை கொல்ல வந்த கூட்டத்தை வேட்டையாடுகிறார்.
அரவிந்த்சாமியும் , குஞ்சக்கோ போபனும் யார் யாரென்று அவரவர்க்கு தெரிந்து கொண்ட நிலையில் அதனை ரசிகர்களுக்கும் சொல்லிவிட்டு, அடுத்த பார்ட்டில் மோதத்தயாராகிவிடுகிறார்கள்.
சிறிய பட்ஜெட் படமோ பெரிய பட்ஜெட் படமோ .. எப்படிப்பட்ட கதையை எடுத்துக்கொள்கிறோமோ... திரைக்கதைக்கு ஒரு அசாத்தியமான மெனக்கெடலை போட்டால் ரசிகர்களை திரையரங்களுக்கு இழுத்துவிட முடியும் என்பதற்கு உதாரணமாக வெளிவந்திருக்கிறது ரெண்டகம்.