a K.Vijay Anandh review
டை,ம் மிஷின் கான்செப்ட்டை மையமாக வைத்து இதுவரை வெளிவந்த படங்களில் கணம் மிகவும் வித்தியாசமான திரைக்கதையால் மனதை கொள்ளைகொள்கிறது.
ஷரவானந்த் தனது தாயை பார்க்க 1998க்கு செல்வதும், குட்டி ஷரவானந்த் 2018 இல் வந்து தனது தந்தையை பார்ப்பதும், ஷரவானந்த், ரமேஷ் திலக், சதீஷ் ஆகியோர் குட்டியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இருப்பது போலவே நிஜத்தில் தன் கண்முன் நிற்பதை பார்த்து ரிதுவர்மா அலறுவதுமாக படம் முழுவதும் செம அமர்க்களம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அமலாவை திரையில் பார்ப்பதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு ஒரு அழகான கண்ணியமான அம்மா கதாபாத்திரம், வழக்கம் போல அசத்தியிருக்கிறார்.
ஷரவானந்த் ஒரு திறமையான இளம் நாயகன், அவரும் தமிழில் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்திருந்தாலும் ஒரு தரமான கனமான கதாபாத்திரத்துடன் தமிழ் ரசிகர்களை நிச்சயம் கவர்வார் எனலாம்.
ரமேஷ் திலக், நகைச்சுவையுடன் குணச்சித்திரத்திலும் கோலோச்ச முடியும் என்று படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார். கணம் படத்திலும் கனகச்சிதமாக அதை நிரூபித்தும் விடுகிறார்.
அட புன்னகைத்தால் சதீஷ் நிறையவே வசீகரிக்கிறார்ப்பா… சிறிய வயது அர்ஜூனிடமிருந்து சிறிய வயது காதலியை பிரிக்க அவர் போடும் லூட்டி அமர்க்களம்.
நாசர், இன்றைய தலைமுறைகளுக்கு வராது வந்த மாமணியாக பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் மூத்த திறமைசாலி. 20 வருட இடைவெளியில் அவர் ஒப்பனைக்காக நிறைய மெனக்கெட்டிருப்பது நடிப்பின் மீது இருக்கும் அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது. எதிரில் நடிக்கும் நடிகர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதை போற்றத்தக்கது. அவர் எதிராக நடிக்கின்றாரா..? அவர்களது நடிப்புக்கு மரியாதை கொடுக்கிறாரா என்பது போன்ற ஒரு மாயை!
நாசருடன் சக விஞ்ஞானியாக வரும் யோக் ஜேப்பியும் வழக்கம் போல அசத்தியிருக்கிறார்.
வாழ்க்கையில் கடந்த காலத்திற்கும் செல்லவேண்டாம், எதிர்காலத்திற்கும் செல்லவேண்டாம் வாழும் ஒவ்வொரு கணத்திலும் சிறப்பாக வாழ்ந்துவிடுங்கள் என்கிற கருத்துடன் கணத்தை இயக்கியிருக்கும் ஸ்ரீ கார்த்திக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
கணம், டிரீம் வாரியர்ஸ்களிடமிருந்து மற்றுமொரு தரமான படைப்பு!