a K.Vijay Anandh review
அடுத்து என்ன அடுத்து என்ன என்று ரசிகர்களை எதிர்காலத்தை பற்றி யோசிக்க வைத்துவிட்டு, 16 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு குற்ற சம்பவத்தின் முடிச்சுக்களை அவிழ்க்கும் இயக்குநர் இன்னாசி பாண்டியனின் திரைக்கதை உக்தி ரசிகர்களுக்கு ஒரு புது திரை அனுபவத்தை கொடுக்கும் என்றால் அது மிகையல்ல.
போலீஸ் டிரையினிங் முடிந்து அருள்நிதி உள்ளிட்ட புதிய காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறை உயரதிகாரி அஜய் ரத்னத்தின் அந்த யதார்த்தமான அதே நேரம் ஒரு Motivational உடனான கம்பீர உரை அழகு.
முடிக்கப்படாத முடிக்கவே முடியாத வழக்குகளில் இருந்து ஒரு வழக்கை தேர்ந்தெடுத்து அதை முடிப்பதுதான் அவர்களது முதல் அசைன்மெண்ட் என்கிற அந்த முதல் காட்சியிலேயே படம் வித்தியாசமாக ஆரம்பிப்பதை உணர முடிகிறது.
அதன் பிறகு கொடைக்கானல் குளிரை நெருப்பு ஜெயிப்பது போன்ற விறுவிறுப்பான திரைக்கதை படம் முழுவதும் ஒருவிதமான பிரமிப்புடன் கூடிய ஈர்ப்பை ஏற்படுத்தி ரசிகர்களை கட்டிப்போட்டுவிடுகிறது.
தான் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட வழக்கில் ஒரு துப்பு கிடைக்கும் நிலையில் காரை தொலைத்துவிட்டு அருள் நிதி கும்பகோணம் பயணமாக, அதே நள்ளிரவில் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து கோயமுத்தூருக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது, அன்றை தேதி பிப்ரவரி 29, 2000.
புதுமணத்தம்பதிகளை கொலை செய்துவிட்டு பேருந்தில் ஏறும் கொள்ளையர்கள், குறிசொல்லும் பாட்டி, தன் முறைப்பெண்ணின் தற்கொலையை தடுக்க கிளம்பும் சாரா, கணவனை பறிகொடுத்த நிலையில் மூன்று வயது மகனின் எதிர்காலத்திற்காக திருப்பூருக்கு வேலைக்கு போகும் ரஞ்சனி நாச்சியார், மேட்டுப்பாளையத்தில் படிக்கும் சோனியா சுரேஷ், வண்டியை நிறுத்தி வாண்ட்டாக குழந்தைகளுடன் ஏறிக்கொள்ளும் சதீஷ் – ஜெயலட்சுமி தம்பதி, எம் எல் ஏ மகளுடன் ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதலன், தோடர் இன பெரிய குடும்பம், அர்த்த ராத்திரியிலும் ஈவ் டீசிங் செய்வதற்கே வண்டியிலேறும் ஒருவன் என்று நள்ளிரவில் அந்த பேருந்து பயணிக்கிறது. அந்த அனுபவமே அலாதியாக இருக்கிறது. செம்மயா யோசிச்சிருக்கீங்க இன்னாசி பாண்டியன்.
வழியிலேயே நடக்கும் அந்த காதல் ஜோடியின் திருமணம், அந்த காட்சியில் Ron Ethan Yohann இசையில் ஒலிக்கும் ஞானக்கரவேலின் அற்புதமான பாடல் ஸ்ரீ கிரிஷ்ஷா ? விஜி சதீஷா..? அவர்களின் நடன அமைப்பு என்று அர்த்த ராத்திரியை அற்புதமான பொழுதுபோக்கின் உச்சமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். அருள் நிதி – பவித்ரா மாரிமுத்து இடையிலான முதல் பாடல் மற்றும் தாய்மையை மையப்படுத்திய இறுதிப்பாடல் என்று ஞானக்கரவேலின் பாடல் வரிகள் அனைத்துமே அருமை.
தான் எடுத்துக்கொண்ட வழக்கின் முடிச்சுக்களை வெற்றிகரமாக அவிழ்த்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா அருள் நிதி..? என்பதை அமானுஷ்ய விஷயங்களின் பின்னணியில் விறுவிறுப்பாக கதையாக சொல்லியிருக்கிறார் இன்னாசி பாண்டியன்.
பேந்தம் பிரதீப்பின் இயக்கத்தில் அருள் நிதியின் ஆக்ஷன் காட்சிகள் இந்தப்படத்தில் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக, மலைப்பாதையில் ஓடும் பேருந்தில் அவர் செய்யும் சண்டைகள் உண்மையாகவே அடிக்கின்றாரோ என்கிற அளவிற்கு ஆக்ரோஷத்தின் உச்சம். நாயகனாக அருள் நிதி , வழக்கம் போல கதை தேர்வுகளின் நம்பர் 1 இவர் தான் என்கிற அளவிற்கு, தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக தேர்ந்தெடுத்து துணைக்கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, தனக்கென தனியாக ஒரு வெற்றிப்பாதை அமைத்து பீடு நடை போடுகிறார் என்றால் அது மிகையல்ல.
நாயகி, பவித்ரா மாரிமுத்து, ஷ்ரத்தா ஸ்ரீ நாத் சாயல் இருந்தாலும், ஆக்ஷன் காட்சியிலும் காதல் காட்சிகளிலும் தனக்கென ஒரு தனிச்சாயலை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
சாம்ஸ், தணிகை உள்ளிட்ட ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சர்ச் பாஸ்டர் மூலமாக படத்தின் முக்கியமான ஒன்றை ரசிகர்களுக்கு சொல்லும் காட்சி, வழக்கமான ஒன்றாக இருப்பது மட்டுமே ஒரு சிறு குறை. காட்சிகளிலேயே ரசிகர்களுக்கு அதை கடத்தியிருக்கலாம், ரசிகர்கள் புத்திசாலிகள்!
இந்த தேதியில், இன்னின்னாருடன் இந்த தியேட்டரில் இந்தப்படத்திற்கு சென்றோம் என்று சாமான்ய ரசிகனும் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளும் அளவிற்கு வித்தியாசமான பொழுதுபோக்கை தந்திருக்கிறது இன்னாசி பாண்டியனின் இந்த டைரி.