a K.Vijay Anandh review
Sony Liv இல் வெளிவந்திருக்கும் பரபரப்பான ஒரு சைபர் கிரைம் தொடர் Tamil Rockerz.
ஒரு நீண்ட பாரம்பரியம் கொண்ட திரைப்பட தயாரிப்பு நிறுவனமான AVM Production இன் மூன்றாம் தலைமுறையின் தயாரிப்பாக வெளிவந்திருக்கும் இத்தொடர், கிட்டத்தட்ட திரைத்துறைக்கு ஆற்றும் ஒரு கடமையாகவே வெளிவந்திருக்கிறது எனலாம்.
அவர்களின் முதல் தயாரிப்பாக வெளிவந்திருக்கும் இத்தொடரின் இயக்குநர் அறிவழகன் முதல் முதன்மை கதாபாத்திரம் அருண் விஜய் வரை அத்தனையும் சரியான தேர்வு. திரைத்துறையை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆன்லைன் திருடர்களை பற்றிய அசாத்தியமான துணிச்சலான ஒரு இணைய தொடராக இத்தொடர் வெளியாகியிருக்கிறது.
வேட்டையாடு விளையாடு கமல்ஹாசன் - கமலினி அல்லது காக்க காக்க சூர்யா - ஜோதிகா போன்று இதிலும் அருமையான ஜோடியாக அருண் விஜய் மற்றும் ஐஸ்வர்யா மேனன். கிட்டத்தட்ட முதல் எபிசோடிலேயே தன் மனைவியை பறிகொடுத்த நிலையிலும், அனைத்து எபிசோடுகளிலும் நினைவாக ஐஸ்வர்யா வந்து போவது , குற்றமும் ரத்தமும் நிறைந்த இந்த சைபர் கிரைம் தொடரில் ஒரு குளிர்ச்சியான பொழுதுபோக்காக அமைந்திருக்கிறது.
10 வருடங்களுக்கு பிறகு அதிரடி ஸ்டாரை வைத்து 300 கோடியில் படமெடுக்கும் தயாரிப்பாளராக அழகம் பெருமாள், அந்த நடிகரின் தந்தையிடமும் பைனான்சியர் மற்றும் தமிழ் ராக்கர்ஸ் என்று மூக்கோணத்தாக்குதலில் அவர் படும் அல்லல்கள் நமக்கும் ஒட்டிக்கொள்கிறது. அவரது கேரியர் பெஸ்டாக, இந்த கதாபாத்திரம் நிலைத்து நிற்கும். அவரது வாகன ஓட்டுநராக வரும் மாரிமுத்துவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது மகனை வைத்தே தமிழ் ராக்கர்ஸை சிக்க வைக்க அருண் விஜய் போடும் ஸ்கெட்ச் ரசிக்க முடிகிறது.
கிரைம்பிராஞ்ச் காவல் உதவி ஆய்வாளராக வரும் வினோதினி , சைபர் குற்ற தடுப்பு அதிகாரியாக வரும் வாணி போஜன் , அருண் விஜய் உடனேயே பயணிக்கும் காவல் துறை அதிகாரியாக வரும் வினோத் என்று அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
எம் எஸ் பாஸ்கர், இந்த நடிகரை காட்டிவிட்டாலே போதும், முதல் பிரேமிலேயே முடிவு செய்துவிடலாம், அந்த எபிசோடின் நாயகன் இவர் தான் என்று, ஒரு ( மன நலமும் ) பாதிக்கப்பட்ட சினிமா தயாரிப்பாளராக அழ வைத்து விடுகிறார்.
வில்லனாக வரும் தருண்குமார் கூட்டாளிகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
விறுவிறுப்பாக தொடர் நகர்வதற்கு அறிவழகனின் ஒரு நேர்த்தியான இயக்கம் பெரியகாரணம் என்றால் அதற்கு பக்கபலமாக இருப்பதில் முதன்மையானது மனோஜ் குமார் கலைவாணன், ராஜேஷ் மஞ்சு நாத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் என்றால் அது மிகையாகாது. விகாஸின் இசை, ராஜசேகரின் ஒளிப்பதிவு, ஜோசப்பின் எடிட்டிங் என்று தொழில் நுட்ப ரீதியாக அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது.ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக்காட்சிகளும் யதார்த்தமும் விறுவிறுப்புமாக வியக்கவைத்திருக்கிறது. பிபி சரவனனின் கலை இயக்கம் இத்தொடரை பிரமாண்டமான சினிமா போன்று காட்டத்தவறவில்லை.
முடிவில் சினிமாவிற்குள் யாரை நம்புவது என்கிற பயத்தை விதைத்திருக்கிறது இந்த தொடர். அது மட்டுமல்ல, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருடனையும் திருட்டையும் ஒழிக்கவே முடியாது, அது இந்த சினிமாவை திருடி விற்பதிலும் பொருந்தும்.
உண்மையில், இன்னொருவரின் படைப்பை திருட்டுத்தனமாக பார்க்கக்கூடாது என்கிற தனிமனித ஒழுக்கம் தழைத்துவிட்டால், இதுபோன்ற திருடர்கள் வேறு கெளரவமான வேலைக்கு சென்று விடுவார்கள்.
இணைய தொடர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டால் பல பிரிவுகளில் விருதுகளை அள்ளிச்செல்லும் தொடராக Tamil Rockerz ஐ தயாரித்திருக்கிறார்கள் அருணா குகன் மற்றும் அபர்ணாகுகன் ஷ்யாம்.