a K.Vijay Anandh review
வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்து கொண்டு, கிட்டத்தட்ட ஒரு சதுரங்க விளையாட்டு போன்று, எந்த காயினை நகர்த்தினால் எந்த காயின் அவுட் ஆகும் அல்லது பாதுகாக்கப்படும் என்பது போன்ற, ரகசியங்களை அறிந்து கொள்வது என்பது சாமான்யனுக்கு வாய்க்காத ஒன்று, அது முனிவர்களுக்கும் ரிஷிகளுக்குமே கைவரக்கூடிய கலை.
அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை, தொடர்பியல் விஞ்ஞானமாக நமது நாயகன் வெற்றியால் புரிந்துகொள்ள முடிகிறது.
எல்லாம் சுபமாக முடிந்துவிட்டது, வீட்டு ஓனர் ரோகினியின் மகள் அஸ்வினி சந்திரசேகரை திருமணம் செய்து தொடரும் வினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்ட்து, வாழ்க்கையும் சுகபோகமாக ஆரம்பித்துவிட்ட்து என்று ஒரு சில கணக்கு போட்டால், நண்பன் மரணம், சகோதரியின் மகளுக்கு பார்வை பறிபோகும் நிலைமை, மாமனார் மரணம் என்று அடுக்கடுக்காக இயற்கை வெவ்வேறு கணக்குகள் போட, மீண்டும் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் வெற்றி என்பதை சுவராஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள் ஜீவி 2 இலும்.
சாதாரணமாக ஒரு பேச்சுவழக்கு இருக்கிறது, நமது பெயர் எழுதிய அரிசிதான் நமக்கு சோறாக மாறும் என்று. அரிசி மட்டுமல்ல, ஆஸ்தி அந்தஸ்து, நகை, பணம் எல்லாமே நமக்கு எது கிடைக்கவேண்டுமோ அது தானாக கிடைக்கும், எதை நம்மை விட்டு இயற்கை பறித்து கொள்கிறதோ அது நமக்கானதல்ல என்கிற புரிதல் நம் வாழ்க்கையை சச்சரவுகள் இல்லாமல் பயணிக்கவைக்கும். அட இதில் நெசமில்லையென்றால், வெற்றி முதலில் காதலிக்கும் – மைம் கோபியின் மகள் – அவரை விட்டு விலகுவாரா..? கடைசியில் அவர் வெற்றிக்கு தங்கை முறையாக ஆகிப்போகிறார்.
வெற்றி, இளம் வயது வாகை சந்திரசேகரை நினைவுபடுத்துகிறார். கமல் – ரஜினி என்று நாயகனுக்கு ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தனது கூர்மையான கண், தெளிவான வசன உச்சரிப்பு மற்றும் அழுத்தமான நடிப்பால் தனக்கென்று ஒரு இடம் பிடித்திருப்பார். அவரைப் போல, வெற்றி, படத்துக்கு படம், சவாலான கதாபாத்திரங்களை ஏற்று மிகக்குறுகிய காலத்தில் தனது படங்களுக்கென்று ஒரு வணிகத்தை தீர்மானித்திருக்கிறார் என்றால் மிகையல்ல.
கருணாகரன், காமெடியை விட குணச்சித்திர வேடங்களிலும் தம்மால் ஸ்கோர் செய்ய முடியும் என்று படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார், இதிலும் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்.
இதில், அஸ்வினி சந்திரசேகர் இன்னும் அதிமாகவே கவனிக்க வைத்திருக்கிறார், கண் தெரியாத இயல்பான ஒரு கதாபாத்திரத்தின் மூலம். ரோகினி, மைம் கோபி போன்றோரை பற்றி குறிப்பிடவும்வேண்டுமோ!
இந்த பிரபஞ்சத்தில் நாம் ஜீவித்திருக்க, ஓரளவு பிரபஞ்ச ரகசியம் தெரிந்து கொள்வதும் நல்லது என்று இரண்டாம் பாட(க)த்திலும் நன்றாகவே புரியவைத்திருக்கிறார் இயக்குநர் விஜே கோபிநாத்.
ஜீவி2 ஆஹா தமிழில்!