a K.Vijay Anandh review
மேதகு 1 இல் இளம் பிரபாகரனால் சிங்கள ஏதேச்சதிகாரத்திற்கு எதிரான போர் விதைக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து சிங்களவர்களின் வெறியாட்டம் அப்பாவி தமிழர்கள் மீது திரும்புகிறது. அப்பாவியான தமிழர்கள் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள், பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், கர்ப்பிணிகளின் வயிற்றை கிழித்து உள்ளிருக்கும் சிசுவை எடுத்துக்கொல்கிறார்கள், சிங்களவர்கள்.
சிங்களவர்களின் இந்த காட்டுமிராண்டித்தனம், விடுதலைப்புலிகளின் ஆயுதமேந்திய போராட்டம் சரியே என்று நிரூபித்துவிடுகிறது.
இளைஞனாக பிரபாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை கட்டமைக்கிறார். எதிரிகளை கொன்று அவர்களின் ஆயுதங்களையே தங்களாயுதங்களாக மாற்றிக்கொள்கிறார்கள். எந்த ஒரு நிலையிலும் ஆயுதம் ஏந்தாத அப்பாவி சிங்களவர்கள் அவர்களின் இலக்காக இருந்திருக்கவில்லை.
சாதாரண உடுப்புகள், சைக்கிள்கள் ஆகியவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு மிகவும் அதியற்புதமான வியூகங்களை வகுத்து ஒவ்வொடு தாக்குதல்களிலும் துல்லிய வெற்றியை பெறுகிறார்கள்.
அன்றைய இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி தர சம்மதிக்கிறார். அன்றைய தமிழக முதல் எம் ஜி ஆர், பண உதவிகளும் ஆயுதப்பயிற்சிகளுக்கான இடங்களும் கொடுத்து உதவுகிறார். நடுவில், தனக்கும் பெயர் கிடைத்துவிட வேண்டும் என்று நினைக்கும் கருணாநிதியின் ஆசையில், அவரை சந்திப்பதை தவிர்த்து பிரபாகரன் மண்ணள்ளிப்போட்டுவிடுகிறார்.
ஒரு கட்டத்தில் இந்திரா அரசின் வீட்டுக்காவலிலிருந்து தப்பித்து வருகிறார்கள் பிரபாகரனும் கூட்டாளிகளும்.
தனி ஈழம் அமைந்தால் தனித்தமிழ் நாடு கேட்கப்படும் என்கிற தவறான புரிதலில் விடுதலைப்புலிகளுக்கு 100% ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் போய்விடுகிறது, அன்றைய இந்திரா அரசுக்கு.
ஜெர்மனியின் ஆதிக்கமும் ஐரோப்பாவின் ஆதிக்கமும் அடங்கி 1947 லிலேயே பல நாடுகள் சுதந்திரம் பெற்று ஒவ்வொரு நாடுகளும் தனித்தனியாக அதன் மனித வளங்களை பயன்படுத்தி முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருந்த கடந்த நூற்றாண்டு, இலங்கை தமிழர்களுக்கு மட்டும் சாபமாகிப்போனது துரதிஷ்டமே!
இருக்கும் இரண்டு இனத்தவர்களுக்குள் தீராப்பகையாக மாறி, 2018 வரையிலான அந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத துயரங்களை ஈழத்தமிழர்களுக்கு இழைத்து விட்டதென்றால் அது மிகையல்ல.
ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படையை அனுப்பும் காலகட்டத்திற்கு முன்பு வரயிலான இந்த மேதகு 2 இல் ஈழப்போராட்டக்களத்தை மிகவும் நேர்மையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் இரா கோ யோகேந்திரன்.
கல்லூரி மாணவர்கள் இந்த ஈழப்போராட்ட காட்சிகளை வில்லுப்பாடல் கலை மூலம் கதையாக விவரிக்கின்றார்கல், அவர்களுக்கு தகவல்களை தந்து உதவுபராக நாசர் , தமிழின உணர்ச்சி மேலிட நடித்திருக்கிறார். நிஜத்தில் கதையாக்கத்தில் சுபன் அருமையாக உழைத்துள்ளார்.
பிரபாகரன் தான் தோன்றுகிறாரோ எனுமளவிற்கு கெளரிசங்கர் சிற்ப்பாக நடித்திருக்கிறார். பிரபாகரனை போலவே முகம், தலைமுடி, குறிப்பாக அந்த கம்பீரமான அடர்த்தியான மீசை என்று பிரபாகரனை நம் கண் முன் கொண்டு வருகிறார்.
பிரவீன்குமாரின் இசை மற்றும் அவரது இசையில் சைந்தவி, புதுமை சித்தன், ஜெயமூர்த்தி ஆகியோர் பாடிய பாடல்கள், வினோத் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, ஆதித்யா முத்தமிழ் மாறனின் படத்தொகுப்பு, இன்ப தினேஷின் கலை இயக்கம், ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவாரின் இயல்பான சண்டைக்காட்சிகள் என்று அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.
தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் வசிக்கும் கவிஞர் திருக்குமரன், டென்மார்க் சுரேஷ் குமார், படத்தை நேர்த்தியாக தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப்படம் முந்தைய பதிப்பை போன்றே இந்தியாவில் திரையரங்குகளில் வெளியிடப்படமாட்டாது என்பது வருத்தமான செய்தி. உலகில் பல நாடுகளில் ஆகஸ்டு 19 முதல் திரையரங்குகளிலும் அதனைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் www.tamilsott.com தளத்திலுமாக வெளியாகிறது.
இப்பொழுதே மேதகு 3 எப்படி இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பை மேதகு 2 விதைத்துள்ளது.