a K.Vijay Anandh review
நெற்றியில் ஒரு சிறு திருநீற்றுக்கோடு, மிகவும் எளிமையான, பார்க்கும் வேலைக்கு வசதியான உடைகள், பிணக்கூறாய்வு செய்து கொண்டே பசிக்கும் போது அங்கேயே அமர்ந்து சாப்பாடு என்று அறிமுகக்காட்சியிலேயே மிரள வைத்துவிடுகிறார் அமலா பால். ஒரு கவர்ச்சியான அல்லது அழகான கதா நாயகி வேடத்திலிருந்து இவ்வளவு பவர்ஃபுல்லான வேடத்திற்கான மாற்றத்திற்கு நிச்சயாக நீண்ட நாட்கள் பிடிக்கும் என்கிற நிலையில், சட்டென்று மாறுது வானிலை என்பது போல, வாமன அவதாரம் போல என்று சொன்னால் இவருக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும், அப்படி ஒரு அழுத்தமான பத்ரா கதாபாத்திரமாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறார், அமலா பால்.
பிரபல மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கொல்லப்பட்டு யாரென்றே அடையாளம் காணமுடியாத நிலையில் அவரது உடல் அமலா பாலிடம் போஸ்ட் மாடர்த்திற்கு வருவதிலிருந்து ஆரம்பிக்கும் கதை காட்சிக்கு காட்சி வேகமெடுக்கிறது.
இப்படிப்பட்ட கிரைம் திரில்லர் படங்களில் பிணக்கூறாய்வு செய்யப்படும் அறை ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து போகும், ஆனால், கடாவர் படத்திற்காக கலை இயக்குநர் ராகுல் அமைத்த பிணக்கூறாய்வு அறை தான் முக்கால்வாசி படமும். பயமுறுத்தியிருக்கிறார் என்று சொல்லமுடியாத படி, போஸ்ட் மாடர்ம் அறையையும் ரசிக்க வைத்து விடுகிறார்.
நடுவே இயேசுவின் மகளாக வரும் அதுல்யா ரவி திரிகுண் இடையிலான அழகான காதல் படத்தில் பொழுதுபோக்கிற்காக வரும் எபிசோட். ஒரு இன்னசண்டான காதலியாக அதுல்யா ரவி கொள்ளை கொள்கிறார் என்றால், அவரை இழந்து வாழும் காதலனாக ஜெயிலில் இருக்கும் திரிகுண் கலங்க வைக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமன் மற்றும் முனீஷ்காந்த், பங்குத்தந்தையாக வரும் ஜெயராவ், மருத்துவராக வரும் நிழல்கள் ரவி என்று ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றால் , இந்த வினோத் சாகர், என்ன நடிகன்யா இந்தாளு என்று ஆச்சிரியப்படும் அளவிற்கு படத்திற்கு படம் சவாலான வேடங்களில் சட்டைசெய்யாமல் நடித்து பேர்வாங்கிவிடுகிறார். ரித்விகாவிற்கும் ஒரு ஆச்சிரியமான வேடம், அசத்தியிருக்கிறார்.
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, ரஞ்சின் ராஜின் இசை, ஷான் லோகேஷின் படத்தொகுப்பு என்று அனைத்து அம்சங்களும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன.
எங்கேருந்துய்யா இப்படிப்பட்ட கதைகளையெல்லாம் பிடிக்கிறீங்க என்று ஆச்சிரியப்பட்டால், சொந்த சகோதரனை பிணக்கூறாய்வு அறையில் பிணமாக பார்த்ததை மையமாக வைத்து தான் கடாவர் கதை எழுதினேன் என்கிறார் எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை. சொந்த வாழ்க்கையில் நடந்த சோகத்தை மையமாக வைத்து ரசிகர்களுக்கு ஒரு பொழுதுபோக்குடன் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக கொடுப்பது பெரியவிஷயம். கதையோட்டத்தின் போக்கு துளிபிசகாமல் அற்புதமாக இயக்கியிருக்கிறார் அனூப் எஸ் பணிக்கர்.
தனது மூன்றாவது அடியை மகாபலி சக்ரவர்த்தியின் தலையில் வைத்தார் வாமனன், தயாரிப்பாளரான தனது முதல் அடியிலேயே ஐந்து மொழி ரசிகர்களின் மனதில் நிறைந்துவிட்டார் அமலா பால்.
கடாவர், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கத்தவறாதீர்கள்!