a K.Vijay Anandh review
எஸ் ஜே சூர்யா, வில்லத்தனமாக பல படங்களில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார். அதற்கு முன் கதாநாயகனாக பல படங்களில் நடித்தும் இருக்கிறார், அவர் இயக்கத்தில் உட்பட. ஆனால் , இதுவரை அவர் நடித்த படங்களில் ஒரு சிறப்பான கதைக்களமாக கடமையைச்செய் படம் இருக்கும் என்றால் அது மிகையாகாது. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தலைவராக அதேநேரம் ஒரு மாஸ் ஹீரோவின் சாதனையை நிகழ்த்துபவராக சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படி ஒரு எஸ் ஜே சூர்யாவை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஒரு இன் ஜினியரை , அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் வேலைக்கு கடவுள் அனுப்புகிறார் என்றால், அதற்கும் ஏதோ காரண காரியம் இல்லாமல் இல்லை என்பதை உணரும் தருணம் அற்புதம்.
விபத்தில் அடிபட்டு உடலசைவுகளே இல்லாமல் படுத்த படுக்கையாய் இருந்த போதிலும், மிகப்பெரிய ஒரு காரியத்தை எப்படி சாதிக்கிறார் என்பதே விறுவிறுப்பான திரைக்கதை.
இதுவரை கவர்ச்சியாகவே பார்த்து பழகிவிட்ட யாஷிகா ஆனந்தா இது...? எஸ் ஜே சூர்யாவின் மனைவியாக அழகான குடும்ப தலைவியாக ஒரு பெண் குழந்தைக்கு தாயாக , முன்னாள் நர்ஸாக , கிளைமாக்ஸில் கணவன் அவரது இலக்கை அடைய ஒரு நர்ஸாக மாறி ஆலோசனை சொல்பவராக என்று அற்புதமாக நடித்திருக்கிறார்.
மொட்டை ராஜேந்திரனா ஐயோ என்று அலறி சலித்து அவர் ஒரு கட்டத்தில் காணாமல் போய் இந்தப்படத்தின் வாயிலாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆனால், திரும்பவும் ஒரு பெரிய ரவுண்ட் வரும் அளவிற்கு, இந்தப்படத்தில் அவரது காமெடி வொர்க் அவுட் ஆகியிருப்பதுடன், காமெடியிலிருந்து ஒரு குணச்சித்திர நடிகராக அவரது கதாபாத்திரம் மாறுவது அருமை.
வின்சென்ட் அசோகன் தான் வில்லன் என்று நினைத்து கொண்டிருக்கும் போது யாருமே எதிர்பாராத வகையில் அவரது தம்பி அவருக்கே வில்லனாக விஸ்வரூபமெடுத்து நிற்பது அருமை.
விபத்தின் மூலம் கதாநாயகன் படுத்த படுக்கையாகவே இருந்தாலும் முதல் பாதியில் அழகான பிளாஷ்போக் காட்சிகள் இரண்டாம் பாதியில் பேசமுடியாத உறுப்புகளை தன் விருப்பத்துக்கு ஏற்றார்ப்போல் இயக்க முடியாத எஸ் ஜே சூர்யாவின் போராட்டம் என்று கடமையைச்செய் படத்தை விறுவிறுப்பாக பயணிக்கும் அளவிற்கு இயக்கியிருக்கிறார் வெங்கட் ராகவன்.
கடமையை செய், இப்படத்திற்கு டிக்கெட் எடுக்கும் கடமையை தாராளமாக செய்யலாம்!