a K.Vijay Anandh review
ஆஹா 100% தமிழில் வெளியாகியிருக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான ஆஹா சொல்ல வைக்கும் தொடர், எமோஜி.
இரண்டு எபிசோடுகளுக்கு ஒரு இணை என்று 100% காதலும் ரொமாண்டிக்குமாக போய்க்கொண்டிருக்கும் எமோஜி தொடரின் இறுதி பாகம் கொஞ்சம் கண்கலங்கவே வைத்துவிடுகிறது. இப்படி ஒரு பைத்தியக்காரனத்தனமான முடிவு எடுக்கும் இந்த தலைமுறை ஜோடிகளை நினைத்து அழுவதா..? தலையில் அடித்துக்கொள்வதா..? பரிதாபப்படுவதா..? என்று நம்மை ஒரு கணம் திகைத்து நிற்க வைக்கும் என்றால் அது மிகையல்ல.
எதுக்கு கல்யாணம் என்று லிவிங் டுகதர் இதெல்லாம் போய் தாம்பத்யம் கூட ஒன் நைட் ஸ்டேண்டாகவோ அல்லது ஒன் இயர் ஸ்டேண்டாகவோ ஆகிப்போவது சமூகத்திற்கு விடப்பட்டிருக்கும் ஒரு அபாய மணி என்றே எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
வாழ்வாதாரத்திற்காகத்தான் வேலை, ஆனால் திருமணம் வாழ்க்கைக்காக என்று இருந்தது போய் இன்றைய தலைமுறை வாழ்க்கையையும் தொழில்களையும் போட்டு ரொம்பவே குழப்பிக்கொள்கிறார்கள் என்பது கண்கூடு.
இளமை, காதல், காமம் என்று ஜாலியாக தொடரை கொண்டு சென்றாலும், மறைமுகமாக நிறைய விஷயங்களை பார்ப்பவர்கள் வசதிக்கு ஏற்றார்ப்போல் எடுத்துக்கொள்ளத்தக்க வகையில் திரைக்கதை அமைத்து எமோஜியை இயக்கியிருக்கிறார் சென் எஸ். ரங்கசாமி
மஹத் ராகவேந்திரா இத்தொடருக்கான சரியான தேர்வாக, ஒவ்வொரு கட்டத்திலும் ரசிக்க வைக்கிறார். விளையாட்டு உபகரணங்கள் விற்கும் மெகா ஷோரூமில் மானசா செளத்ரியை பார்த்தவுடன் காதல் வயப்படத்தான் செய்கிறார் என்றாலும், கமிட்மெண்ட் இல்லாத காதல் என்று மானசா புது பார்முலாவை புகுத்தி அதிரடிக்கிறார்.
இன்னொரு பக்கம், அதாவது மஹத்தின் எதிர் பிளாட்டில் குடியிருக்கும் தேவிகா சதீஷ், ஒரு மாடலுடன், அந்த கதாபாத்திரத்தை ஒரு ஆண் மாடலாக அமைத்திருப்பது ஒரு பெரிய ஆறுதல் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும், அந்தளவுக்கு எந்தவிதமான உணர்வு புரிதல்களும் இல்லாமல் உடலுறவு உடலுறவு என்பதை மட்டுமே பிரதானமாக கொண்டு ஒரு வாழ்க்கை.
இரண்டு பிரேக் அப்புகளுக்கு பிறகு, மஹத் மற்றும் தேவிகா இடையிலான திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையாவது ஒரு நீண்ட நம்பிக்கை தரக்கூடிய தாம்பயத்திற்கு அவர்களை இட்டுச்செல்லும் என்று பார்த்தால் அதுவும் புட்டுக்கிட்டு போகாத குறையாக இறுதி எபிசோடு அமைந்திருக்கிறது.
ஏன் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதே எமோஜியின் யதார்த்தமான கிளைமாக்ஸ்.
பிரார்த்தனவாக வரும் மானசா, தொடர் பார்ப்பவர் மனதில் எளிதில் இடம்பிடித்துவிடுவார் என்றால் தீக்ஷா வாகவரும் தேவிகா அப்படியே இடுப்பில் முன்பக்கமாக வந்து அமர்ந்துவிடுகிறார். ஒவ்வொரு கண் அசைவிலும் காமத்தை கொட்டும் கதாபாத்திரம், பிரித்து அல்ல பாய்ந்து பாய்ந்து மேய்ந்துவிடுகிறார்.
இந்த முக்கிய கதாபாத்திரங்கள் தவிர நண்பர்களாக வரும் ஆர் ஜே ஆஷிக், மஹத்தின் அப்பாவாக நரேன், தேவிகாவின் பெற்றோர்களாக வரும் கதாபாத்திரங்கள், அவ்வளவு ஏன்..? கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து மஹத் வீட்டில் வேலை பார்த்தே தனது மகளை திருமணம் செய்து வைக்கும் அந்த வேலைக்காரி கதாபாத்திரம், தங்கள் வீட்டு திருமணத்திற்கு வரும் மஹத் உள்ளிட்டவர்களை அசால்டாக டிராக்டரில் அள்ளிப்போட்டுக்கொண்டு கிளம்பும் முல்லையரசி என்று ஒவ்வொரு கதாபாத்திமும் அருமையாக கையாளப்பட்டிருக்கிறது.
இந்த தொடரில் காட்டப்படும் இரண்டு போதைகளுள் ஒன்று காமம் இன்னொன்று கள். கிராம திருமண விருந்தில் பரிமாறப்படும் கள்ளுக்கு கொடுக்கப்படும் விளக்கம் அருமை. அட, பார்டர் தாண்டினா ஆந்திராவில் சுத்தமான பனங்கள் கிடைக்குது, சீமைச்சரக்கும் தான் கிடைக்குது… இங்கே மட்டும் ஏன் சார்..?
எமோஜி, எமோஷனில் முடிவெடுக்காதீர்கள், வாழ்க்கையில்!